பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Jan 2016

14) மாலைக் காலம்


வணக்கம் தமிழுறவுகளே !
அனைவரையும் இந்த ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ என்னும் தொடரில் சந்திப்பதில் களிப்படைகின்றேன். இதோ இவ்வாரத்துத் தேன்துளி,
15) மாலைக் காலம்
சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒளி மிகுந்த பகல் மாய்ந்து அழிந்துவிட திண்மை வாய்ந்த ஏழு குதிரைகளைப் பூட்டிய அழகுடைய தேரினை உடைய சூரியன் என்பவன் மேற்கில் தெரிந்துகொண்டிருக்கும் மலைகளின் கீழே சென்று மடியலானான். மான் கூட்டங்களும் காட்டு நிலங்களில் மேய்வதை நிருத்தி அடர்ந்த மரப் பந்தல்களுக்கு மத்தியில் சென்று கூடத் துவங்கின, மக்கள் நலமோடு வாழத் தனது உதிரத்தையே பாலாகத் தருகின்ற வெண்மைப் பசுக்கள் தனது கன்றுகளைக் கூக்குரல் இட்டு அழைக்கத் துவங்கின, பின்பு அவைகள் தொழுவங்களைச் சென்றடையத் துவங்கின,

நல்லிசையை நல்குகின்ற ஊதும் கொம்புகளைப் போன்று அங்கே அன்றில் பறவைகள் பனை மரத்தின் உள்ளிருக்கும் சின்னத் துவாரங்களில் தமது பெட்டைப் பறவைகளோடு கூடிக் களிக்கத் துவங்கின, கொடிய விடத்தினைக் கொண்ட சீரும் பாம்பினங்கள் தமது வாயிலிருந்து மாணிக்கப் பறழ்களை உமிழ்ந்தன, ஆம்பல் மலர்களின் குழல்களை எடுத்து இடையர் குலத்த்துப் பெண்கள் நல்லிசை எழுப்பினர், அதே போன்று அங்கே ஆம்பல் இதழ்கள் மொட்டென்னும் கட்டவிழ்ந்து மலர்ந்தன,
செல்வம் நிறையப் பெற்ற பெண்மக்கள் யாவரும் தமது அருமை மாளிகை முழுவதும் விளக்கின் ஒளியால் அழகு ஏற்படுத்தினர், அந்தனர் மக்கள் அனைவரும் தமது அந்திக் கடன்களைச் செய்து முடித்துக்கொண்டு இருந்தனர்.காட்டில் வாழ்கின்றவர் வானத்தைத் தொடுகின்ற மலைகளில் தீப்பந்த்தம் ஏற்றி வைத்து ஆராவாரம் செய்தனர். மேகங்கள் ஓசையை எழுப்பி பெரிய மலைகளைப் போல சூழ வந்து கறுத்தன, மாற்றான் மேல் சினம் கொண்டு வீரப் பெருக்கோடு எதிர்த்துப் போர் புரிந்திடக் கிளம்பும் மன்னனைப் போலவே விரைந்து வந்து அந்தக் குறிஞ்சி நிலத்தினை மாலை சூழ்ந்தது.
இப்படிச் சூழ்ந்த மாலை நேரத்து என்னைக் கண்ட எமது தலைவன் எமது அழகிய முன்னங் கைகளைப் பற்றிக் கொண்டு "இந்த நாட்டிலுள்ளோர் யாவரும் அறியும்படி நான் உன்னை மணப்பேன் அது வரையில் நீயோ மனக்கலக்கம் ஏதுமின்றி பாதுகாத்து இரு ! ஒளிர்கின்ற அணியினை அனிந்து கொண்டிருப்பவளே உன்னை நிச்சயம் மணப்பேன் "என்று சொல்லிவிட்டு பசுவினைக் கூடிய காளையைப் போலவே நமது மூதூர் வாயிலுக்கு விரைந்து என்னை நீரெடுக்கும் துறையில் விட்டுச் சென்றான்
என்று தலைவியின் நிலையிலிருந்து நமது குறிஞ்சிக் கபிலன், குறிஞ்சி நிலத்தின் சிறப்புகளை ஒரு மாலை வர்ணனையில் சொல்லிய குறிஞ்சிப் பாட்டில் இருந்து உதிர்ந்ததே இன்றைய தேன்துளி..
பாடல் :
எல்லை செல்ல ஏழ்ஊர்பு இறைஞ்சிப்
பல்கதிர் மண்டிலம் கால்சேர்பு மறைய 
மான்கனம் மரமுதல் தெவிட்ட ஆன்கணம்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில் 
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ,
பாம்பு மணி உமிழ, பல் வயின் கோவலர் 
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற, 
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட, வள மனைப் 
பூந் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி, 
அந்தி அந்தணர் அயர, கானவர் 
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த, 
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப, கானம் 
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப, 
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத் 
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ
"நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர, 
நாடு அறி நல் மணம் அயர்கம்; சில் நாள் 
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!" என, 
ஈர நல் மொழி தீரக் கூறி, 
துணை புணர் ஏற்றின், எம்மொடு வந்து, 
துஞ்சா முழவின் மூதூர் வாயில், 
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன்.
-கபிலர்

3 comments:

ஊமைக் கனவுகள் said...


வணக்கம் கவிஞரே!
தங்கள் பொழிப்பு அருமை. சில கருத்துகள் தங்களின் பதிவு காணத் தோன்றிற்று.
“சுட்டெரித்துக் கொண்டிருந்த ஒளி மிகுந்த பகல் மாய்ந்து அழிந்துவிட திண்மை வாய்ந்த ஏழு குதிரைகளைப் பூட்டிய அழகுடைய தேரினை உடைய சூரியன் என்பவன் மேற்கில் தெரிந்துகொண்டிருக்கும் மலைகளின் கீழே சென்று மடியலானான்.”
என்பன போல் வரும் நீளமான சொற்றொடர்களை எளிய சிறு தொடராக மாற்றலாம். படிப்போர்க்கு அவை உதவும்.
“பின்பு அவைகள் தொழுவங்களைச் சென்றடையத் துவங்கின.”

எனுமிடத்து,
அது என்பதன் பன்மை அவை என்பதே.
அதனை அவைகள் என மீண்டும் பன்மைப்படுத்தல் நல்வழக்கன்று எனத் தோன்றுகிறது.
“சீரும் பாம்பினங்கள் தமது வாயிலிருந்து மாணிக்கப் பறழ்களை உமிழ்ந்தன.”
எனுமிடத்து, தாங்கள் குறிக்கக் கருதுவது, ‘ பரல்’ என நினைக்கிறேன். பறழ் என்பது விலங்கின் இளமையையும் தினைவகையுளொன்றையும் குறிக்கப் பயன்படுவது.
இதுபோன்றே,
அந்தனர்,
அனிந்து
என வருமிடங்களில் வரும் மயங்கொலிப்பிழைகளை நீக்கலாம்.
நல்ல மரபராசிரியரின் தளத்தில் இடப்படுகின்ற பதிவென்பதால் கூறிப்போனேன் இளங்கவிஞரே! தவறாக நினைக்க வேண்டா!
நான் தமிழாசிரியன் அல்லேன்.
நான் சொல்வதில் தவறிருப்பின் கவிஞர் திருத்துவார்.
நன்றி.

Varadhan M said...

நன்றி நண்பரே. இப்பதிவை நான் திருத்தம் செய்யாமையால் நேர்ந்த பிழைகள் இவை.தவறுதான். திருத்தச் சொல்கிறேன். முகநூல் பதிவில் இக்கருத்தைத் தெரிவித்தால் விவேக் பாரதியின் கவனத்திற்குப் போகும்.முடிந்தல் செய்யுங்கள். இன்றேல் நான் குறிப்பிடுகிறேன். தளத்தைப் பார்வையிட்டுக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி!

விவேக் பாரதி said...

மிக்க நன்றி சீறாளன் அய்யா அவை எனது தவறுதான் எப்பொழுதும் பதிவிடும் முன்னர் ஐந்து முறை படித்துவிட்டுத்தான் பதிவிடுவேன் இந்த முறை இப்படி ஆகிவிட்டது முகனூல் பதிவில் இதோ நானே மாற்றி விடுகின்றேன் வலைப்பூப் பதிவில் பாவலர் அய்யாவை மாற்றக் கோருகின்றேன் மேலும் தங்கள் அறிவுரைகளை மனதார ஏற்கின்றேன் ! நன்றி

இப்படிக்கு
விவேக்பாரதி