பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 Feb 2016

‪பாட்டியற்றுக 22 இன் தொகுப்பு‬


அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 22 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது. 
எந்தப் பயிற்சியிலும் இல்லாத வகையில் இந்தப் பயிற்சியில் 31 பேர்களின் பாடல் தேர்வானது, இந்தப் பாவகையின் எளிமையையும், பலருக்கும் இருக்கும் ஆர்வத்தையும் காட்டுகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 22
வஞ்சி விருத்தம்
*******************
1. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
நில்லா உலகே நீவாழ்க! ,
எல்லா வளங்க ளேதந்நாய் ! .
பொல்லாங் கொழிக்கும் பூப்பூக்க
வல்ல பலவும் ஈவாயே !


2. கவிஞர் பொன்.பசுபதி
எந்தாய் மொழியே இன்றமிழே
வந்தென் மனத்தி லமர்வாயே
இந்தேன் பாக்க. ளியற்றிடலே
என்தம் பணியென் றாக்குவையே!

3. கவிஞர் கணேசன் ராமசாமி
அன்று சங்கம் அளித்துட்ட
மன்றில் வென்ற மனிதர்கள்
இன்றும் நம்மி லிருக்கின்றார்
என்று முலவும் கதைதனிலே! 

4. கவிஞர் சுந்தரராசன்
நாடும் குடியும் நலங்காணப்
பாடும் படிக்கே பணித்தாலும், 
வீடுந் தந்தாய் விலங்காக!
வீடுந் தந்தே வினைகொல்வாய்!

5. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
வஞ்சி விருத்தம் வழங்கிடவே
கொஞ்சம் தமிழைக் கற்றறிந்தே
செஞ்சொல் தேடிச் சிரத்தையுடன்
வஞ்சி தனிலே வடித்தேனே.!

6. கவிஞர் தா. தமிழ் தங்கராஜ்
என்பால் அவளும் அன்பாலே
என்முன் அழகாய் நின்றாளே 
தன்பால் கவர்ந்தே எமையவளும்
அன்பால் வசியம் செய்தாளே!

7. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
தேனு டையச் சீர்காவில்
தேனு டையத் தேன்மலர்கள்
தேனுண் ணவரும் சின்னவண்டு
தேனுண் டபின்னே சேர்க்கிறதே! 

8. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
வஞ்சி நீயும் வடிவழகாய்க்
கொஞ்சிக் கூடிக் குலவிநிற்க
நெஞ்சு முற்றும் நிலவுதுயர்
பஞ்சு போலப் பறந்ததென்னே!

9. கவிஞர் ராமன் ஜெயா
கன்னித் தமிழால் கவிபுனைய
எண்ணித் துணிவாய் செயல்புரிய
மண்ணின் மணியாய்மலர்ந்திடவே
கண்ணின் கருத்தாய் மிளிர்பவளே!

10. கவிஞர் சியாமளா ராஜசேகர்
வங்கக் கடலின் கரையினிலே 
திங்க ளொளிரு மிரவினிலே 
மங்கை நீயு முடனிருக்க 
பொங்கும் காதல் கவிதைகளே ! 

11. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
நாடி உன்னை நினைத்திருப்பேன்
தேடி வந்து தொழுதிடுவேன்
பாடிப் பாடிப் பணிந்திடுவேன்
சூடிக் கொடுத்தோள் சுடர்மணியே!

12. கவிஞர் தாமோதரன் கபாலி
தேனே தெவிட்டாச் செந்தமிழே
வானே பொழியும் வானமுதே
ஞானம் மொழியும் ஞானபாதம்
ஏனோ அறியா ஏழைநானே!

13. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
அன்னை என்றும் அதிசயமே ! 
என்னைப் பெற்ற எனதுயிரே ! 
அன்பும் பண்பும் அருளுகின்றாய் ! 
உன்னில் நானும் உறைந்திடுவேன்!

14. கவிஞர் அர. விவேகானந்தன்
தேடா நெஞ்சில் தென்றலாகி
வாடா நின்ற வஞ்சியவள்
கூடாக் கண்ணைக் குளமாக்கி
ஒடா யென்னை யுருக்கினாளே!

15. கவிஞர் பரமநாதன் கணேசு
மோதி யழிக்க வந்திட்டச்
சேதி யறிந்தே யெழுந்தோடி
ஏதி லியாகி வந்திங்கே 
வீதி தனிலே நின்றழுதேன்!

16. கவிஞர் இராச.கிருட்டிணன்
கண்ணால் கண்ட காட்சிகளை 
எண்ணித் தெளியா தேற்பதனால்
மண்ணில் துன்பம் வரக்கூடும் .
உண்மை இதுவென் றுணர்வீரே!

17. கவிஞர் காவியக்கவி இனியா
முன்னம் பிறந்த மொழிதன்னை 
இன்னும் எளிதாய் எமக்கூட்ட
அன்னைக் கிணையாய் நாள்தோறும் 
அன்பால் ஊட்டும் பாவலரே !

18. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
பாகாய் நீயும் பகன்றவைகள்
வாகாய் என்னை வளைக்குதடி
ஆகாய் என்றன் அழகிணையாய்த்
தோகாய் உன்னில் தொலைகிறனே!

19. கவிஞர் நாகினி கருப்பசாமி
சங்கு கழுத்தில் நகைப்பறித்து
பொங்கும் பொலிவு சிதைப்பவரால்
பங்கு தீர்க்கும் நொடிமுதலாய்
அங்கத் திலிவள் விதவையாமே!

20. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
வேண்டு மெனக்கோர் வரமென்றே
வேண்டித் தொழுதே னிறையோனைச்
சீண்டும் வினவ லதுவென்றோ
ஈண்டெ னக்குத் தரவில்லை!

21. கவிஞர் நடராசன் பாலசுப்பி.மணியன்
தேரில் சுற்றும் திருவுருவின்
மாரில் சாற்றி மணம்பரப்ப
நாரில் தொடுத்த நறுமணப்பூ
ஊரில் கிடைத்தல் உறுதியில்லை!

22. கவிஞர் சுதர்சனா
காடு வந்தச் சிறுவனுக்கு
வீடு தந்த விமலனுனை
பாடி நித்தம் பரவிடவே
ஓடி வந்தேன் உதவுகவே!

23. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
கற்கும் பொருளே கனியாகும்
மற்றும் நமக்கு மருந்தாகும்
நற்ற வமருள் நலமாகும்
பற்றும் பொருளே பரமாமே!

24. கவிஞர் குருநாதன் ரமணி
சோலைக் குயிலும் துல்லியமாய்
ஓல மிட்டே ஓய்ந்துவிடும்
மாலைப் பொழுதின் மயக்கத்தில்
காலம் நிற்கக் களித்தேனே!

25. கவிஞர் வீ.சீராளன்
என்னுள் இசைத்த எழிலாளின் 
மின்னல் விழியின் மெட்டுகளே 
கன்னல் மொழியில் கவிபாடி 
மன்றம் மணக்க வைத்ததுவே!

26. கவிஞர் அழகர் சண்முகம்
சித்தம் மணக்கச் சிவமயத்தை
நித்தம் மனதில் நினைத்துருகப்
பித்தம் தெளியப் பிணியறுப்பான்
முத்துப் பரமன் முகம்மலர்ந்தே!

27. கவிஞர் கேகிரவா
கண்ணில் பட்டாய் கண்மணியே
விண்ணில் நின்றோ வந்துதித்தாய்
மண்ணில் இந்நாள் கண்டதில்லை
பெண்மேல்நாட்டம் உற்றனனே!

28. கவிஞர் ஹபீஷ் நிசாம்
பொன்னாய் வானில் மின்னுகிறாய்
தன்னால் ஒளிரும் மின்விளக்கே
உன்னால் தானோ ஆழ்கடலும
என்றும் செல்வம் கொள்கிறது!

29. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
நின்றாய் நில்லா நிலையின்று
சென்றா யுள்ளஞ் சீர்குலையக்
கொன்றா யன்பே கொள்ளாமல்
என்னா மியானிங் கிருந்தினியே!

30. கவிஞர் வள்ளிமுத்து
சேர்ந்தே பிரியா திருந்திடுமாம்
தேர்ந்த எமது செருப்புகளாம்
ஊர்ந்தே நடக்க உதவிடுமாம்
தீர்ந்தே அழியும் வரையிலுமாம்!

31. கவிஞர் தம்பன் செல்வி
(ஒருபேனா சிலதாள்கள்)
முத்தம் தந்தாய் முழுமதியே
நித்தம் உந்தன் நினைவினிலே
பத்தும் செய்வேன் பசியறியேன்
சொத்தாம் எந்தன் கனியமுதே!
★★★★★

No comments: