பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

10 Mar 2016

கடவுள் என் தோழன், 2தொடர்ச்சி....(2)

ஆண்டவனை எப்படிநீ பார்ப்பா யென்றே
         அடுத்ததாக ஒருகேள்வி எழுதல் கூடும்
ஆண்டவனைத் தாயாகப் பார்த்தோ மானால்
         அன்பென்ற எல்லைக்குள் அடங்கிப் போகும்
ஆண்டவனைத் தந்தையாக ஆசா னாக
         அறிவென்ற எல்லைக்குள் அடக்க மாட்டேன்
ஆண்டவனைக் காதலனாய்ப் பார்த்தோ மானால்
         அதுசிறிய மயக்கத்தில் முடிந்து போகும்.!


தோழனாகக் கடவுளினைப் பார்த்தோ மானால்
         துன்பத்தில் தோள்கொடுக்கும் துணையென் றாகும்
ஆழமான உள்மனத்தின் எண்ண மெல்லாம்
         ஆரிடத்தில் நாம்சொல்லக் கூடும்...நல்ல
தோழனிடம் மனம்விட்டுப் பேசும் போது
         துயரங்கள் நெடுந்தூரம் ஓடிப் போகும்!
தோழனாக ஆண்டவனைப் பார்க்கின் றேன்நான்
         தோள்கொடுக்கும் உறவாகப் பார்க்கின் றேனே! !

(....தொடரும்)

No comments: