பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

4 Mar 2016

‪பாட்டியற்றுக 24 இன் தொகுப்பு‬
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 24 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 24
சமநிலை மருட்பா 
(கைக்கிளை) 
****************

1. கவிஞர் வள்ளிமுத்து
தித்திக்கும் தேனன்ன தீம்பலாவி னுள்முளைத்துச்
சத்தமின்றிச் செத்துவிடும் வேர்பலவின் நல்விதைபோல்
யாருக்கும் தெரியா தென்காதல்
ஊருக்கும் உனக்கும் தெரியா தழியுதே..!

2. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
நன்னிலம் தானது நன்மாரிக் கேங்கல்போல்
என்மனம் மங்கையை எண்ணி மருகிட
வருவாளோ அவளும் வசந்தமாய்த்
தருவாளோ என்னோய் தனக்கொரு மருந்தே!

3. கவிஞர் அர.விவேகானந்தன்
உள்ளம் நிறைந்திட்ட ஊனழிக்கு மன்பினால்
பள்ளத்தை நோக்கியே பாய்ந்திடும் நீராகி
உள்ளமு மவளால் உருகுதே
முள்ளாய் என்னுள் மோகமும் தீண்டுதே!

4. கவிஞர் சுந்தரராசன்
சொல்லா தொளித்திடச் சோகம் மிகுதலால்,
சொல்லவோ அச்சமே சூழ்ந்து வெருட்டலால் 
ஆற்றொரு காலுமாய் அமைந்தே
சேற்றொரு காலுமாய்ச் சிக்கினை மனனே!

5. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
உன்மனம் நானறியேன் உந்துதல் தானறிவேன்
என்மனம் நீயறிதல் எங்ஙனம் - கன்னியென்
காதல் கைக்கிளை யாமோ
வேதனை தணிந்திட விழைகிறேன் நானே!

6. கவிஞர் இராச.கிருட்டிணன்
ஓரவிழிப் பார்வை உளத்தைக் குடைந்திட 
வேரற்று மண்மீது வீழ்ந்தேன்யான் ஆரணங்கின்
பேரூர் அறியேன் பித்தானேன்
ஆருயிர் காக்க ஆருளார் தாமே?

7. கவிஞர் கணேசன் ராமசாமி
கண்டாங்கிச் சேலைகட்டிக் கட்டுடல் தான்சுமந்து
தண்டைச் சிலம்பணிந்து தாழம்பூ தான்சூடி
நெஞ்சைத் தொட்ட வஞ்சி
தஞ்சம் வேண்டிக் கெஞ்சுது மனமே!

8. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
கரந்துறை நோயன்ன காதலின் வெம்மை
நிரந்தரம் ஆகுமோ நீயென்ன செய்வாய்!
அரும்பு மலராள் அவளை,
நெருங்கிச் சொல்லென் நிலைதான், நெஞ்சே!

9. கவிஞர் பரமநாதன் கணேசு
தோகை மயிலெனத் தோகை விரித்தாடி
மோகத்தை நெஞ்சுள் விதைத்தாளே! நானுற்ற
ஆசை தனையவ ளறிந்திடேல்
ஊச லாடி உயிர்தான் போகுமே!

10. கவிஞர் தாமோதரன் கபாலி
கண்ட முதலே கனிந்ததே என்நெஞ்சம் 
மண்ணிலே காதல் மலர்ந்தது தானாய் 
கள்ளி என்னுளம் கவர்ந்த 
வள்ளி மைவிழி மறைய நொடிந்தேனே.!

11. கவிஞர் காவியக்கவி இனியா
கண்ணிரண்டும் நோக்கியதால் காதல் கருக்கொள்ள
பெண்ணவள் பேரறியாப் பித்தனாய் நானுலவ
ஏது மறியாள் எழிலாள்
கோதை நினைவெனைக் கொல்வது மேனோ?!

12. கவிஞர் பொன்.பசுபதி
கணினி வடித்தெடுத்த கட்டழகி நீயே
இனியும்நான் வாழ்வேனோ இன்னமுதே நீயின்றி
என்னைநீ ஏற்றிடே லின்றே
மண்ணைவிட் டேநான் மாய்ந்தொழி வேனே!

13. கவிஞர் அழகர் சண்முகம்
பிளந்தவடு மாவிழியின் பின்னலில் வீழ்ந்தேன்
உளந்திறந்து சொல்லாமல் ஊமையாய்ப் போனதால்
கலைந்த காதலும் கரைதொடா
அலையாய் மனத்துள் ளாடிய வியுதே!

14. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
அத்தன் அழகன் அவரென் உளக்கள்வன்
பித்தவர்பால் கொண்டேன்பார் பேய்மையென் நெஞ்சே 
சூதினால் அவர்பால் சேர்ந்து
சாதிக் கும்வழி சாற்றிடு வாயே!

15. கவிஞர் சேலம் பாலன்
தின்னக் கனிபோல் வாள்
செப்புச் சிலை போல் வாள்
என்னைக் கவர்ந்து விட்ட
ஏந்திழையால் வாடுகிறேன்
என்னவ ளாயா வாளா
ஒன்றும் புரியா துழலுகின் றேனே!

16. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
மண்ணுக்குள் வேராய் மணலுக்குள் நீராயென்
கண்ணுக்குள் நின்றே கவலையின் ஊற்றானாள்!
காக்க வருவளோ கனிந்தே
ஏக்கம் போக்கிட என்னிலை யறிந்தே!

17. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
கன்னக் குழிதொடுத்தாள் கண்டு கதிகலங்கி
என்னைப் பறிகொடுத்தே ஏங்குகிறே னன்னவளே
வாழ்விலென் தாரமாய் வந்திடேல்
மாழ்குவே னோவென மனத்திலே கிலியே!

18. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
காந்தவிழிச் சக்தியில் காதல் வயப்பட்டுச் 
சாந்தத்தைக் கொள்ளவும் சம்மதிக்க வில்லையே
என்றனின் மனமோ எங்கே 
கன்னியின் நெஞ்சினில் கரை வ தென்றே !

19. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
மாதவத்தாள் மாமயிலாள் மான்விழியாள் மண்மணத்தாள்
ஆதவனாய் வான்பறந்தே யாவலுற்றேன் -கோதையிடம்
காதல் சொலவென் கண்களோ
ஆதல் பயந்தே அடங்கிக் கசியுதே!

20. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
உள்ளத்தை அள்ளியே ஊருக்குச் சென்றவளென்
நல்ல மனதுக்குள் நன்றாகப் பாய்ந்தாளே!
அவளின் மனதை அறியுமுன்
அவளின் நினைவிலே அழிந்திடு வேனே!

21. கவிஞர் நாகினி கருப்பசாமி
எண்ண முணர்ந்தும் எரிந்து விழுகின்ற
வண்ண முளதென வாசல் இதயத்தை
முள்ளாய்க் குத்தி மூர்ச்சிக்க
அள்ளி வீசியவன் அணைத்திட வருவானோ!

22. கவிஞர் குருநாதன் ரமணி
கன்றுப் பருவத்தில் காதலித்த நெஞ்சமே!
இன்றவள் எங்ஙன் இருப்பாளோ? - அன்று
தவறிய தருணம் மீளுமோ?
அவளது நினைவினை அகற்றுதல் அரிதே!

23. கவிஞர் பாலமுருகன்
வண்ணக் கிளியாள் வருவாளோ வான்முகிலாள்
திண்ணத் தெவிட்டாத தெள்ளமுதாம் தண்ணிலவாம்
கன்னல் மொழியாள் கருவிழியாள் 
இன்னல் விலக்கி எழில்தரு வாளோ?

24. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
நிழல்போல் தொடர்ந்தும் நிதமும் நினைத்தும்
அழகி யவளுக்கென் மேலாசை இல்லையே
நிழலாக இருந்தும் நிற்க
நிழலில்லா மல்தவிக்கும் நிலைய றிவாளோ?

25. கவிஞர் வீ.சீராளன்
நறும்பூ விடைவழியும் நற்தேனாய் வார்த்தை
இறும்பூ தடையவிழி ஈன்று மொழிபவளின் 
கரும்பு மனத்துளென் காதல் 
அரும்பிட வோர்வழி அறிந்தி லேனே !


No comments: