பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Mar 2016

‪பாட்டியற்றுக 25 இன் தொகுப்பு‬


நிறைவு பயிற்சி...
அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 25 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
புதிதாகப் பல கவிஞர்கள் இணைந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது.
பைந்தமிழ்ச் சோலையில் விருப்பத்துடன் பலர் இணைவது, தமிழ் மரபைக் கற்கப் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதையே காட்டுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள எண்கள் தரவரிசைக்குரியதல்ல. கவிஞர் அனுப்பிய வரிசைக்குரியதே.
கவிஞர்களை வாழ்த்துங்கள். 
கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 25

(ஒற்றிலா வெண்பா)
1. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
அரசை நிறுவிட ஆவ லுடனே
வரிசையி லேகி வருவா – ரிருகை
தொழுவா ரரசு தொடவுடனே மாறி 
நழுவு மவரது நா.!

2. கவிஞர் வள்ளிமுத்து
அலையு மலைய அலையினி லாடி
வலைவிரி மீனவ வாநீ-தலைவ
வளையு முருவியே வாடி நெகிழு
மிளையவ ளோடே இணை! 

3. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
வலிய வலையிலே நீயுமே வீழவே;
எளிய முறையிலே ஆசா னிடமே 
யரிய மறையா மதையே யறிய
உரிய வகையிலே நாடு! 

4. கவிஞர் கிருஷ்ணமமூர்த்தி நந்தகோபால்
அகர முதலே! அருளே! அறிவே!
சிகர முதலே! சிவனே! - பகவனை 
நாடு! தொழுகை நலமே தருமமே!
பாடு முறையே பணி!

5. கவிஞர் வீ.சீராளன்
ஓதுமறை யாகவிழி ஊடுருவ வேயெனது 
சாதுமன வாசலிலே தாதுபல - மோதுதடி 
கூடவர நாணமடி கூவிவிட ஆசையடி
ஊடலது போகவழி ஓது!

6. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
நாளு முனையேநா னாடாத நாளிலையே 
கேளு கிளியேநீ கேடெதுவோ - மூளுதடி 
வாழநீ வாராயோ மாளுத லோயுறுதி 
பால ரதியே பணி !

7. கவிஞர் காவியக்கவி இனியா
தாயொடு சேயெனவே தாவியணை ! தீருபிதா
மாயவலி ! காயமது மையாதே - தேயுதே
காலமென வீழுவது காணமன வேதனையே 
கோலமென யாவையுமே கூறு !

8. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
நிலவி னொளியது நீளு மிரவே
கலவி நினைவு களைய - உலக
முறையீ தெனவே முழுமுத லாமே
இறையி னடியை நினை!

9. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
திகடி கடலை தெளிய ருடனா
லகடு முகடு மறியா - வகட
விகட கவித மிதனை யெழுத
வகட கவித மது!

10. கவிஞர் குருநாதன் ரமணி
உளதோ இலதோ உறவோ தனியோ
வளமோ களமோ வழியோ? - அளவோ
டுடலி லுயிரென வோடு மரனை
மடமா மனமே யறி!

11. கவிஞர் இரா.கி. ராஜேந்திரன்
தனலாடு கையா சடையொடு மாது
புனலா டுதலே புனைய - மனமா
கனதி யொடுமே கழலா டுராசா
கனகா கனிய முதே! 

12. கவிஞர் பொன்.பசுபதி
தமிழே தருவே தளிரே மலரே
இமய மலையே யினிய-வமுதே
உனையே தொழுதே யுனதரு ளாளே
புனைவே னழகுள பா!!

13. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
கடலா டுமலை கவிபா டுமொழி
உடலா டுமுயி ருனையே- விடவே
இசையா துமன மினிேயே! திருவே
அசையா துநிறை அறிவு.!

14. கவிஞர் அழகர் சண்முகம்
கலக மிலாத கவலை யிலாத
சலன மிலாத சமமா-யுலகு
நலமொடு வாழ நதிவழி யோடி
நிலமக ளாளை நிறை! 

15. கவிஞர் பாலமுருகன்
தாயா யினையே! தவமே! தமிழமுதே! 
சேயா யினனே சிறுமகவு - ஓயா
துனையே தொழுவே னுளமாற! தாயே!
தனைய னுளமகிழா தா?

16. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
உளவிய லாதியை ஊரது காண
வளமைதரு நூலினை நாட -உளமா
மிணையிணை நூலக வானே வா நீயே!
துணையா யதையே தொடு.!

17. கவிஞர் சியாமளா ராஜசேகர்
உளமே நிறைய உயிரு முருக 
வளமே யருள வருக ! -இளமயி
லாடநீ யேறி இனியவனே சேயோனே 
மாடமதி லாடியே வா! 

18. கவிஞர் தாமோதரன் கபாலி
அழகு முருக னழகு வளமே
பழகு மனமே பழகு - கழலை
நினைய வருளே நெடிய வழியை
முனையு மறிவே மொழி.!

19. கவிஞர் ரமேஷ் மாதவன்
பிடியினி லானை பிளறி யதாலே,
நொடியி லருளிய நூதா - கடின,
பவமு மழியவே பாவ மொழிய,
இவனையே காவிறை யே!!

20. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
பாவை யிவளுளமே பாச முடையதுவே 
சாவை நலமுடனே சாகாத -- நாவையுமே 
நீயு மழகிலே நீயெ னருகினிலே 
காயு முடனே கனி.!

21. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
ஆலென நாவென ஆயிர மாயுள 
வேலென வேயுள தாவர _ மேயுனை 
நானினி நீரொடு நானில மீதினி 
லேநித மூனுவ னே!

22. கவிஞர் சேலம் பாலன்
உடனே வருக உரையே தருக
கடமை எனநீ கருதி--- இடமே 
மகிழ மனமே வரவே விரைக
அகிலே உரைஅர சா!

23. கவிஞர் நாகினி கருப்பசாமி
தலைவ னவனவனா தாரமா யாகி
நிலைபெ றுவதினி நீடு.. கலையா
வருகை யதுவே வலுவென நாளு
முருகிடு மேழை உலகு! 

24. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
முரணா யொருபா முயல உடனோ(ர்)
அரணா யிருநீ அழகா - வரமே
தரவே வருக! தணியா அருளா(ல்)
இரவே விலகு(ம்) இனி.

25. கவிஞர் அர.விவேகானந்தன்
நிலையா யெனையே நினையாத போது
சிலையே எனது ளமுமே- உலையாகி
வேகுமே! ஊனழிய வீணா யுயிரது
போகுமே காதலி லே! 

26. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
கருமியே ஆன கரமது மூட
வருவது தானே வராது - கருது
தருவதை நாமே தினமே பழக
வருமே நிறையவே காசு! 

27. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
மனையா ளிடமாக வாடிடு வோனை 
நினைவினி லாழ நடு!வே – தனையே
பனையள வாயினு மாறிடு மாறா
வினையது தீரு மினி.!

28. கவிஞர் கணேசன் ராமசாமி
காதலா லானவை காவிய. மாயிரமே
காதலை. நாடுவது காம மோ-- கோது
மனமிணைய மாசிலா மான வுறவு
தனதாக நாடு. மனது! 
★★★

No comments: