பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 May 2016

சிந்துபாடுக. - 4 இன் தொகுப்பு - ஒயிற் கும்மி


அன்பு நண்பர்களே !
சோலைக் கவிஞர்களே! சிந்துபாடுக. - 4 இல் பல கவிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் பாக்களைப் படைத்தனர். அனைவருக்கும்நன்றியும், வாழ்த்தும் உரித்தாகுக.
பயிற்சியின் தொகுப்பு, அப்பயிற்சியில் கலந்து கொண்ட கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. 
கொடுக்கப்பட்டுள்ள வரிசை எண் தரவரிசைக்குரியதன்று. கவிஞர்கள் கவிதைளை அனுப்பிய வரிசைக்குரியது.
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...
இந்தத் தொகுப்புப் பாடல்களைப் படிக்க வேண்டா. ★பாடிப் பார்க்கவும். அப்போது தான் சுவைக்கும்.
கவிஞர்களை வாழ்த்துங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.சிந்து பாடுக - 4
(ஒயிற் கும்மி)
1. கவிஞர் சியாமளா ராஜசேகர்
சின்னச்சின் னப்பதம் மெல்லவைத் துக்கண்ணன் 
சிங்கார மாய்நடை போட்டுவந் தான்
சிரமீதினில் மயில்பீலியும் 
திருமேனியில் மணியாரமும்
செவ்வாயில் வெண்ணையும் உண்டுவந் தான்!

2. கவிஞர் விவேக் பாரதி
ஆயிர மாயிர ஆண்டுக்கு முன்னரே 
அன்பினில் நாமுமி ணைந்துவிட் டோம்
அதனாலினி பிரிவேயிலை 
உயர்வோமொரு குறைவேயிலை
அத்தானை முத்தமிட் டாடடி யோ ! 

3. கவிஞர் மாரிமுத்து
கண்மொழி பேசியே காளையை ஈர்த்திட்ட
கன்னியின் தந்திரம் என்னவென் றோ..
அவர்தானடி பிரியாமதி 
உறவாடிட தினமாடிடும்
ஆவலைக் காட்டிடும் வித்தையன் றோ! 

4. கவிஞர் வள்ளிமுத்து
சின்னங்கள் கூட்டணி வாக்குகள் கேட்டிடச்
சிங்காரத் தேர்தலும் வந்தது வே
குடிமேவிடக் கொடிமேலெழக் 
கொடியோரெனக் படியேறிடக்
கொள்கையி லாக்கூட்டம் வந்தது வே!

5. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
உன்னைப்பு றந்தந்த ஊரின்பெ ருந்தெய்வம்
உன்னன்னைத் தாளினைப் போற்றிடு வாய்!
உதிரந்தனில் உயிர்தந்தவள் 
உருவம்வர உரமன்னவள்
ஊனுயிர் என்றுநீ காத்திடு வாய்!

6. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
மாண்டிட வேண்டுமே அன்னியப் பாடல்கள் 
மங்காதச் செந்தமிழ் போற்றுங்க ளேன் . 
மணமேமிகு வளமேதரு 
நலமேவர இதமேதர
மாறாதப் பைந்தமிழ்ப் போற்றுங்க ளேன்.!

7. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
பாயிரம் பாடியும் கும்பிடு வார்நாளும்
பைந்தமிழ் பூமலர் சூடிடு வார்
பலமேயிதிற் பலனேயதைப்
பணியாகிடப் பணியேசெயப்
பண்ணிசை மீட்டியும் வாழ்ந்திடு வார்! 

8. கவிஞர் அழகர் சண்முகம்
செந்தமிழ்ப் பாவலர் சந்தமு டன்தந்த
சிந்தினையும் பாடிப் பார்த்திடு வீர்
தினமேயதை அணியாலுரை
அவையாடிட அழகோடிசை
செந்தமிழ்த் தேன்கவி வார்த்திடு வீர்! 

9. கவிஞர் தாமோதரன் கபாலி
மண்ணினை வுண்டவன் மாசற்ற மாதவன்
மாயத்தைக் காட்டிய வித்தக னாம்
மகனேயிது சரியாயென. 
மணிவாயினை மலர்வாயென
மாவண்ட மாலனும் மாயவ  னாம்.

10. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
அன்புட னேநிறை பண்புட னேபல
ஆன்றகு ணங்களைக் கொண்டிட னும்
அழகாய்மன நிறைவாய்செறி 
வுளதாய்வரு வகையாய்சொல
அங்கேஎல் லாரும்கொண் டாடிட னும்! 

11. கவிஞர் சிதம்பரம் சி.மோகன்
முந்தைப்பி றப்பினில் மூண்டபா 
வங்களை மூச்சிருக் கும்போதே போக்குவ னே..!
முடிவாமிது பெறுவேனிதை 
முழுதாய்நுதல் விழியானிடம் 
மூலம வன்கழல் போற்றுவ னே..!

12. கவிஞர் அஷ்பா அஷ்ரப் அலி
கட்டுக்க டங்காத காதலி னாலிளங் 
கன்னியர் போக்கினைப் பாருங்க டி
கனவேயிது கறையேதரு (ம்) 
நிலையாதது தினமேயினி
கட்டுடன் வாழ்ந்திங்கு மாளுங்க டி!

13. கவிஞர் பரமநாதன் கணேசு
ஆடும்தோ கைமயி லாமென வந்தெனை
அள்ளியே கொஞ்சியே நின்றிருந் தாள்
அழகாய்மிளிர் இதழாலென. 
துயிரேகுளிர் விலையேயிலா
ஆயிரம் முத்தங்கள் கூட்டித்தந் தாள்.!

14. கவிஞர் பொன்.பசுபதி
தேர்தலி லேவெற்றி பெற்றிட வேயவர்
தேர்ந்துரைப் பார்வெறும் பொய்யுரை கள்
தெளிவேவர உயர்வோடுதா . 
னுரியார்பெற வினையேபுரி
தேர்ந்தபின் னாற்றுவ ரோதம்க டன்?

15. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
பூமியாம் என்கிற பூகோளம் நன்றாக
புல்லொடு பூக்களும் சுற்றுதுப் பார்.
புவியாமதில் அழகாய்வரு 
பொருளோடது மிணையேகொடு
பொம்மையைப் போலவே போகுது பார்.

16. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
பாடிடு வாய்மனம் நாடிடு வாய் - அந்தப்
பாவகை யாவையும் தேடிடு வாய்
படியாமையும் ஒருநாளினில்
வழியாகிடும் படியாகிடும்
பண்பினைத் தோண்டவி லக்கண மாம்!

17. கவிஞர்அர.விவேகானந்தன்
பொல்லாத ஆசையால் போய்சேர்ந்தார் வல்லோரும்
பொய்யென்றே மோகத்தை விட்டொழிப் போம்
புகழாகிய வளமோடிடும் 
உளமேதினம் நிலைமாறிடும்
பூமியில் நல்வாழ்வை மீட்டிடு வோம்! 

18. கவிஞர் வீ.சீராளன்
வானமு கில்மழை மண்ணிழை மீட்டிட 
வாஞ்சையோ டென்னவள் பார்த்துநின் றேன் 
வருவாளுயிர் தருவாளெனும் 
பெருமாசையில் கருவாகிடும் 
வஞ்சிக்க னாக்களில் வாழுகின் றேன் !

19. கவிஞர் குருநாதன் ரமணி
தந்தைசொல் லைத்தலை தாங்கியே கையில்கோ
. தண்டமு டன்ராமர் காடுசென் றார்
தனதாடையும் தருமாவுரி 
:உயிர்சானகி துணையாய்வரத்
. தம்பியு டன்தவக் கோலம்கொண் டார்!

20. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
பண்ணுடை நற்றமிழ்ப் பாட்டினைச் சோலையில்
பண்மிகுந் தேவரப் பாடிடு வோம்.
பண்பாடுக செந்தேன்கவி
பண்பாடுடன் வந்தேவிழும்
பன்வளப் பாக்களை  யாத்திடுவோம்.!

21. கவிஞர் நாகினி கருப்பசாமி
வாசலில் மாக்கோலம் வாவென்று கூப்பிட்டு
வாழ்த்திட யிங்கொரு வான்மழை யும்
வரவேதரு திருமாலவன் 
வடிவாகிய கருமேகமும்
வாய்ப்பந்தல் போட்டிட வாய்த்தது வாம்!

22. கவிஞர் நிறோஸ் அ,ரவிந்த்
காசியில் தோன்றிய யோகிராம் சத்குரு
காகுத்தன் நாமத்தைப் பாடிநின் றார்!
கனிவாயுடன் வருவானவன் 
இனிதாயவன் ஒருதூதுவன்
காலமெ லாமதைப் பாடிநின் றான்!


No comments: