பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

13 May 2016

கும்மிப் பாடலில் வெண்டளை வேண்டுமா?

இசைத்தமிழ் வடிவமான சிந்துப் பாடல்களில் ஒன்றான "கும்மிப் பாடல்களில் " வெண்டளை வரவேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். யாப்புத் தொடர்பான தற்கால நூல்களிலும் இந்தக் கருத்துள்ளது.
ஆனால் "கும்மிப் பாட்டில் "வெண்டளை கட்டாயமில்லை என்பதே என் கருத்து. இக்கருத்து இரா.திருமுருகனாரின் வழியொட்டியது. பாடிப் பார்த்துணர்ந்த என் பயிற்சியின் வாயிலாகக் கண்டது.

"இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள்
எல்லோரும் வாருங்கள் தோழர்களே!"


இப்பாடல் பாவேந்தரின் புகழ்பெற்ற பாடல். இதில்,
இந்திக்குத் தமிழ்நாட்டில் / என வெண்டளையின்றி வந்துள்ளதைக் காணலாம்.

"கொம்மியடி பெண்கள் கொம்மியடி -யிரு
கொங்கை குலுங்கவே கும்மியடி
நம்மையாளும் பொன்னம்பல வாணனை
நாடிக் கொம்மி யடியுங்கடி "

மேற்கண்ட வள்ளலாரின் பாடலில்,
பெண்கள் கொம்மியடி/
நாடிக் கொம்மி / இவற்றில் வெண்டளையின்றி வந்ததைக் காணலாம். மேலும், வெண்பாவிற்காகா எனும் கனிச்சீரும்வந்ததைக் காணக.(யடியுங்கடி)

இப்படி இன்னும் பல சான்றுகளைக் காட்டலாம். ஒருசில பாடல்களை வைத்துக் கொண்டு எப்படி முடிவுக்கு வருவீர்கள்? எனக் கேட்கலாம்.
இந்தப் பாடல்கள் மட்டுமல்ல. வெண்டளையோடு இயன்ற பாடல்களையும் இசைத்தமிழ் இலக்கணப்படி அடக்கலாம்.

சான்றுக்கு,

கொங்கை குலுங்கவே என்னும் சீர்களை
கொங்கைகு லுங்கவே என்றே எழுத வேண்டும். இப்படி எழுதினால் வெண்டளையும் இருக்கும். இசைத்தமிழ் இலக்கணமும் இருக்கும்.

ஏன் அப்படி எழுத வேண்டும்?
சிந்துப் பாடல்களைப் பாடித்தான் எழுத வேண்டும். எழுதியதைப் பாடித்தான் காட்ட வேண்டும். படிக்கக் கூடாது. அப்படிப் பாடும் போது,
கொங்கை குலுங்கவே /என்பதில் "கு " எனும் எழுத்து முன்னின்ற கொங்கை யுடன் சேர்ந்தே ஒலிக்கும். அவ்வாறன்றி வெண்டளைப்படி அதைப் பாடினால் குலுங்கவே என்ற சீரைப் பாடும்போது சந்தம் விரைந்து(தனதன) ஓடுவதும், முன்னின்ற சீரோடு இணையாத ஓசையைப் பெறுவதையும் காணலாம்.

இப்படி அனைத்துச் சீர்களையும் வெண்டளைப்படி எழுதிப் பாடினால் கும்மிப் பாட்டுக்குரிய சந்தம் பெருமளவு தவறி ஒலிப்பதை உணரலாம்.

எனவே,
கும்மிப் பாடலுக்கு வெண்டளைக் கட்டாயமில்லை. எல்லாச் சீர்களும் மூன்றெழுத்துச் சீர்களே அமைந்து, குறிலிணையான சீர்களால் தொடங்காமல் (சுருக்கமாக, "கூவிளச்சீர்கள் ஏழும், கூவிளங்காய்ச் சீர் ஈற்றிலும்)
இதுவும் வெண்டளைதான். ஆனால் வெண்டளைவேண்டும் என்ற விதிப்படிஎழுதும் பாடல்கள் மேற்கண்டவாறு கும்மிச் சந்தம் தப்பியே ஒலிக்கும்.

கூவிளச் சீர்கள் இன்றி, புளிமா, கரு விளச்சீர்கள் வரும் பாடல்கள் உள்ளனவே!? என்று சான்று காட்டலாம். ஆனால் அவை இசைத்தமிழ் இலக்கணத்தில்அடக்கக் கூடிய விதத்தில் (கொங்கைகு லுங்கவே) அமையும்.அமைய வேண்டும். அப்படித்தான் எழுத. வேண்டும்.

அடக்க முடியாத குறிலிணைச் சீர்களையும் கும்மி ஏற்கிறது. அதற்குச் சிறப்பிலசை (சிறப்பு இல்லாத அசை) என்றுபெயர். ஆனால் அந்தச் சீரை ஒலிக்கும் போது தேவையான இசையை நீட்டித்துக் கொள்ளும். கொள்ள. வேண்டும்.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

இதில்,
பெண்கள் தொடுவது /என்பதை,
பெண்கள்தொ டுவதை என்று 'தொ முன்னின்ற சீரோடு இணைந்தும்,
டுவதும்/என்பது டூவதும் என நீண்டும் இசைக்கக் காணலாம். அப்படிப் பாடினால் தான் அது கும்மிச் சிந்தில் அமையும். இன்றேல் சந்தம் தப்பி ஒலித்து இடரும்.

ஈற்றசையைக் கூவிளங்காய்ச் சீர் வரவேண்டும் என்கிறார்கள். அதுவும் தவறே.
கொட்டுங்கடி, அடியுங்கடி
என்பவை கனிச்சீர்கள் அல்லவா?
இதுவும் இசைத்தமிழ் இலக்கணப்படியேஅமை வேண்டும்.
அதாவது ஏழு சீர்கள் மூன்றெழுத்தும், எட்டாவது சீர் ஓரெழுத்தும் வரவேண்டும்.அந்த ஓரெழுத்தே இன்னும் இரண்டெழுத்து அளவுக்கு நீண்டொலிக்கும். அப்போது தான் கும்மிச் சந்தம் கிடைக்கும்.

கும்மியை இசைத்தமிழின் வழியே பார்க்க வேண்டும் என்பதற்கு இன்னொரு பாடல்.,

"சீர்திகழ் தோகைம யின்மே லேயிளஞ்
செஞ்சுடர் தோன்றுந்தி றம்போ லே
கூர்வடி வேல்கொண்டு நம்பெரு மான்வரும்
கோலத்தைப் பாருங்கள் கோதையர் காள் "
(சண்முகர் கொம்மி. திருவருட்பா)
இப்பாடலில்,
யின்மே, றம்போ, லே, காள்
இந்தச் சீருள்ள இடங்களைப் பாடும்போது "வெண்டளை வேண்டும் " விதிப்படி பாடினால் அது கும்மிச் சந்தத்தில் அமையாது. அதையே,

"சீர்திகழ் தோகைம யின்மேஎ லேயிளஞ்

செஞ்சுடர் தோன்றுந்தி றம்போஒ லேஎஎ
கூர்வடி வேல்கொண்டு நம்பெரு மான்வரும்
கோலத்தைப் பாருங்கள் கோதையர் காஅஅள் "
என இசைத்தமிழ் கூறுகளின்படி அந்தச் சீருள்ள இடங்களை நீட்டிப் பாடினால் கும்மிச் சந்தம் அமைவதை உணரலாம்.(புரிவதற்காகவே அளபெடையைக் கொடுத்துள்ளேன்.திருவருட்பாவில் மேலுள்ளபடியே இருக்கும். அதிலும் வெண்டளை இல்லாததைக் காண்க)

எனவே,
பாமர மக்களின் இசைவடிவமான சிந்துப் பாடல்களை யாப்பியல் விதிப்படி அடக்குதலும், கும்மிப் பாடலுக்கு வெண்டளை வேண்டும் என்பதும் பிழையானதாகும்.

இந்த முடிவு, இரா.திருமுருகனாரின் ஆய்வு முடிவின்படியும், என்னுடைய புரிதலின் படியும் கூறியதாகும்.
இலக்கண நூல் எழுதியோர் மன வருத்தம் கொள்ளற்க. மேலும் இதன் மீதான விளக்கம் வேண்டுவோர் குரல்வழி தொடர என் அலைபேசிக்குத் தொடர்புகொள்ளலாம். (பாடிக் காட்டித் தெளிவுறுத்துவேன்)
என் அலைபேசி எண்கள் : 9840457176, 7418867669, 9791528122

★★★

No comments: