பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Mar 2017

காரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை

காரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை

********************************************
அன்பு நண்பர்களே! கவிஞர்களே.!
வழக்கமாக நம் பயிற்சியின் கருத்துகளைத் தொகுத்துப் பயிற்சிப் பாமாலை எனப் பைந்தமிழ்ச் செம்மல் venkatesan பதிவிடுவது வழக்கம். 
இக்காரிகைக் களிப்புக்கு நான் கொடுத்த வாழ்த்துகளைத் தொகுத்து வாழ்த்துப் பாமாலை
தந்திருக்கிறேன். 
படித்துக் களித்துக் கருத்தைக் கூறுங்கள்.
தமிழன்புடன் 
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
**** **-**** *** ***********************
கவிஞர் GurunAthan RamaNi 
ஞானம் வசப்பட நாட்டம் குறைத்திட நன்மைவரும்
ஊன மிலாதொரு வூட்டக் கருத்தை உளத்தினிலே
தேனைக் குழைத்துத் தடவிக் கொடுத்துத் தெளிவுறுத்தும்
கோனாய் விளங்கும் குருவே ரமணிநீர் வாழியவே! 

கவிஞர் Venkatesan Srinivasagopalan 
வாழ்வில் மகிழ்ச்சியும் வந்திடக் கேளிர் வணங்கிடவே
தாழ்விலாப் பாசமும் அன்பொடும் போற்றித் தழுவிடுவீர்
ஊழ்வினை யாலே உருவான துன்பங்கள் ஓடுமென
வீழ்விலாப் பாத்தந்த நற்கவி வாழ்கவே வெங்கடேசே!

கவிஞர் VivEk BhaRathi 
பொருளீட்டி வாழப் பொறுப்பாய் முயலுதல் பொற்பெனவே
தருகுமே நல்வாழ்வைத் தாழா துயர்வீர் தருவெனவோர்
அருங்கவி யாய்ச்சொன்ன அங்கவி எங்கள் அழகுகவி
பெரும்புகழ் பெற்றுயர் வித்தக வாழி பெயருடனே!

கவிஞர் Srinivasagopalan Madhavan 
நல்லோர் இணைப்பினை நாடுதல் வாழ்வில் நலங்கொடுக்கும்
பொல்லாங் கழிந்திடப் பூத்துக் குலுங்கிடும் புத்துறவே
எல்லா வினைகளும் ஏற்படும் காரணம் இற்றழிய
நல்ல கவிதந்த மாதவன் வாழ்க நலத்துடனே!

கவிஞர் நெடுவை இரவீந்திரன் 
தேர்ந்த முறையினில் தேடி யுழவினைச் செய்குவதால்
நீர்த்துக் கழியும் நிலையிலை என்று நிறைவெனவே
பார்த்துப் பழகியே பாடுகளால் தந்த பாட்டிதிலே
ஆர்க்கும் மறுப்பிலை ஐயா வழுத்தினேன் அன்பினிலே! 

கவிஞர் Raghunathan 
இந்த வுடலுயிர் ஈசன் பதத்தினில் ஏகிடுங்கால்
சொந்தமென் றேதும் தொடர்வது மில்லை துலங்கிடுவீர்
வெந்த அரிசியும் சோறாகிப் பின்னர் விரைந்தெருவாய்
நொந்து விழுமென்னும் நும்பாடல் யாவினும் நோக்கரிதே!

கவிஞர் கோவிந்தராஜன் பாலு 
வாழ்வில் வளம்பெறக் கூட்டுக் குடும்பம் மலர்கவெனப்
பாட்டினில் சொல்லிய பாங்கினைப் பார்த்துப் பணித்துநின்றேன்
நாட்டம் மிகக் கொண்டு நன்மை புரிவதே நல்லதென்று
பாட்டில் உரைத்திட்ட பாலு கவியுனைப் பாடுவனே!

கவிஞர் Somu Sakthi
வாழ்வில் வளம்பெறக் கூற்றக் குடியை மறந்தொழிப்பீர்
தாழ்வைத் தருமந்த சாய்க்கடைத் தீயைத் தவிர்திருப்பீர்
ஏழ்மை யகன்றிட ஏற்ற உழைப்பை இயன்றிடுவீர்
ஆழ்ந்தவும் பாடலின் ஆவி கருத்தினில் ஆழ்ந்தனனே.!

கவிஞர் Dharma Ktm 
உழைப்பின் உயர்வினை ஒப்பில தாகவோர் ஒண்டமிழ்ப்பா
விழைவீர் உயர்ந்திட வேண்டும் வியர்வையின் மீதமென்றீர்
அழையா விருந்தின ரான வறுமையும் அற்றொழிய
மழையாய்க் கொடுத்தவிப் பாட்டுக் குனையுநான் வாழ்த்தினனே! 

கவினப்பன்
ஓடிப் பொருளுக்காய் ஊக்க மிகுதியாற் ஒல்லைவர
ஆடி அடங்குமிவ் வாழ்வின் பொருளுணர்ந் தாய்ந்திடுக
நாடிப் பெரியோரை நாமும் இணைந்திடில் நன்மையுண்டாம்
கேடில்லை என்ற கவினப்பன் பாட்டில் கிறங்கினனே!

கவிஞர் சாமி சுரேஷ் 
உன்றனின் வாழ்க்கையஃ துன்கையில் என்றே வுணர்ந்திடுவீர்
என்றும் நலந்தர ஏத்து மிறைத்தொழில் ஏற்புடைத்தோ?
நன்றும் அதுவன்றித் தீதும் தொடர்வது நம்செயலால்
என்றநற் பாத்தந்த 
ஏற்றகவி வாழ்க இன்புடனே! 

கவிஞர் அர. விவேகானந்தன் 
ஏட்டுச்சு ரைக்காய் கறிக்குத வாதென்னும் இன்கருத்தைப்
பாட்டில் வடித்திட்டீர் பாங்காய் உரைத்திட்டீர் பைந்தமிழில்
நாட்டின் நலமது நாடும் உழவினால் நன்மையுறும்
வாட்டும் துயரிலை என்றவும் பாடல் வளமுடைத்தே.!

Kavingnar Ponn Pasupathy 
சிட்டுக் குருவியின் வாழ்வின் சிறப்பினைத் தேர்ந்தெடுத்து
நெட்டுயிர்க் கின்றவர் நீடு நலம்பெற நின்கவியில்
தொட்டு விடுமின்பம் சோரா துழைப்பினால் தோன்றுமென்றீர்
கட்டுக் கடங்காத அன்பில் வழுத்தினேன் கண்ணிறைவே!

கவிஞர் இளம் பரிதியன் 
சூழும் நெருப்பென ஆணவம் நெஞ்சத்தில் சூழ்ந்திடினோ
பாழும் மலம்வீழ்ந்து பாழ்படும் வாழ்வு பகுத்தறிக
வீழும் நிலையற ஆண்டவன் தாளினை வேண்டுகவே
தாழும் நிலையறும் என்றார் பரிதியன் தாழ்விலையே!

கவிஞர் Ayyappan Ayyappan 
காசு பணநாட்டம் வாழ்வை அழித்திடும் கண்டுணர்வீர் 
பூசலை விட்டுப் பொலிந்திடும் அன்பைப் பொழிந்திடுவீர்
மாசு மிகுத்திடும் நம்மனத் தாட்டம் மகிழ்வறுக்கும்
வீசும் வசந்தமே என்ற நறுங்கவி மேனிலையே!

கவிஞர் Ashfa Ashraf Ali 
வாடிப் பசியில் வதங்கிடும் ஏழைக்கு வாய்க்கவளம்
நாடித் தருகுவீர் நம்முயிர் போலவர் நல்லுயிரே
தேடித் திரிகுவீர் ஈசனைப் பூசனை தேவையில்லை
ஈடில் பெருங்கவி தந்தீர் எவருமிங் கேற்றிடவே!

கவிஞர் Niyas Hasan Maraicar 
எல்லாம் இறையவன் சித்தம் அறிகுவீர் இப்புவியில்
சொல்லப் புகுவதாற் கூடுமோ ஆண்டவன் சூழ்வினைகள்
வல்லான் திருவிளை யாட லறிந்திட வாய்ப்பரிதே
சொல்லில் வடித்தவித் தேந்தமிழ்ப் பாடலில் சொக்கினனே!

கவிஞர் Manjula Ramesh. 
போட்டிப் பொறாமைகள் தீமையை வார்க்கும் புரிந்திடுவீர்
கூட்டும் உயரன்பு பொன்மனங் கொண்டால் குறைவிலையாம்
நாட்டும் உயர்வுற வேண்டிடின் நன்மைகள் நாட்டுவையே
வாட்டும் துயரிலை என்றவும் நற்பாடல் வாழியவே.!

கவிஞர் Aravind Karthick 
கல்வியை மாந்தர் கடனெனக் கொண்டால் களித்திடுவர்
ஒல்லும் வகையினில் கற்றிடு வாழ்வில் உயர்ந்திடுவாய்
எல்லாச் சிறப்பும் எதிர்வந்து தோன்று மெனுங்கருத்தைச்
சொல்லிய தம்பியின் செய்யுளி லின்பந்தான் தோன்றிடுதே!

கவிஞர் Shyamala Rajasekar 
தாயை அரவணைத் தென்றும் அவணலம் தாங்கிடுவாய்
நோயெனுந் துன்பம் நொறுக்கிடா தென்றும்நீ நோவறுப்பாய்
பாயினில் வீழுமுன் பாவங்கள் தீரவுன் பாசத்தினால்
தாயினைக் காப்பாய் எனச்சொல்லும் பாடல் தனிச்சிறப்பே!

கவிஞர் Sara Bass 
செந்தமி ழோங்கும் நிலையினைச் சீரிய சீர்களிலே
தந்த கவிஞரின் ஆர்வத்தில் நம்பிக்கை தான்வருமே
முந்தி இவர்தந்த பாடலின் சொற்சுவை முந்துகிற
இந்தச் சிறுசுவை பாடலும் நன்றாய் இலங்கிடுதே!

கவிஞர் வள்ளி முத்து 
மக்கள் குறைகளைத் தீர்க்கும் தலைவனே மாண்புடையோன்
சிக்கலைத் தீர்க்கும் திறனறி வுள்ளோன் திறத்தலைவன்
அக்கறை காட்டி அரசாளும் நாட்டில் அமைதிவரும்
இக்கருத் தைத்தந்த எங்கள் சிலேடையை ஏத்துவனே!

கவிஞர் Natarajan Balasubramanian 
நோயதன் காரணம் பட்டன வாழ்வே நுவலுகிறீர்
காயம் நலம்பெறக் காலாற வேநட காலமெலாம்
தூய வுடல்நலம் பெற்று மகிழத் துயர்விலகும்
நேயக் கருத்துடைப் பாடலும் நெஞ்சில் நிலைத்ததுவே.!

கவிஞர் தண்டபாணி தேசிகன் 
சுற்றத் துறவுகள் சூழ விருக்கத் தொடர்ந்தவன்பில்
இற்று விழச்செயும் ஈன வுறவினில் இன்பமிலை
மற்று பலபல பாசப் பிணைப்பினில் மாசிலன்பைக்
கற்றுக் கொடுக்குமிப் பாடலில் உள்ளங் களிக்கிறதே!

கவிஞர் Paramanathan Kanesu 
ஆசையே துன்பத்தை அள்ளித் தருகிற காரணியாம்
பாசத்தை வைப்பர் பணத்தினில் பாவம் பலபுரிவர்
மாசொடு தீங்கு மலையெனச் செய்தால் மகிழ்விலையே
காசிலாப் பாடல் கருத்தினில் நானும் களிக்கிறேனே!

கவிஞர்.இரா.கண்ணன்
உழைப்பினில் நாட்டம் உடையராய் வாழ்க உலகினிலே
அழையாம லின்பம் அடுத்து வரக்காண்பாய் ஆற்றலொடு
பிழையான வாழ்வாகும் பீடின்றி வாழ்தல் பெருமையிலை
விழைவான நல்ல கருத்துடைப் பாடல் மிகவினிதே!

கவிஞர் Alagar Shanmugam 
சேர்க்கும் பொருள்களில் இச்சை மிகக்கொண்டு சேர்த்தணைப்பார்
ஆர்க்கும் பயனின்றி ஆளொடு பூட்டும் அடைத்திடுவர்
பார்க்குந் திறனிலாப் பாவியர் வாழ்ந்தும் பயனிலையென்
றோர்ந்திங் குரைத்திட்ட ஒண்டமிழ்ப் பாடல் உயர்வுடைத்தே!

கவிஞர் Nadaraj Maiyan 
செல்வம் நிலையிலை யாக்கை நிலையிலை தேர்ந்திடினோ
வெல்லும் வழியது நன்மை தருஞ்செயல் மிஞ்சுமன்றோ
எல்லோரும் ஓர்நாள் இறப்பதை யாரும் எதிர்க்குவமோ 
சொல்லரும் பாடலில் நம்மனம் ஆடியே துள்ளிடுதே!

கவிஞர் Nirmala Sivarajasingam 
வாராத ஆமை பொறாமையென் றோர்சொல் வழங்கிடுநல்
சீரான பாடலில் சீரிய தத்துவம் சேர்த்துரைத்தீர்
யாரா யிருப்பினும் சேமிப்பி னாலே அருமையாவர்
ஊரவர்க் குற்றநல் பாடல் களிப்பினை ஊட்டிடுமே!

கவிஞர் Bknagini 
மற்ற வுயிர்களை அன்புடன் காத்து மகிழ்வளித்துப்
பற்றும் பணிவுடன் நல்லவர் கேண்மை பகுத்திணைந்து
சுற்றத் தொடுபாசம் அன்பும் கலந்தநல் தூயவாழ்வே
முற்றிய வாழ்வென்னும் நாகினி பாடல் முகிழ்த்திடுதே.!

கவிஞர் Mari Muthu 
நோயின் கொடுமையே மீக்கொடு மையாகும் நோந்தவர்கள்
காயின் கசப்பென வாழ்வி லயர்ந்திடும் காட்சியுண்டாம்
ஆயிர மாயுரம் ஆக வியற்றுதல் ஆற்றல்தரும்
நேயத் துடனிதைச் சொல்லுகி றீர்நெஞ்சில் நின்றதுவே!

கவிஞர் Valayapatti Kanniappan Kanniappan 
இந்தப் புவிவாழ்வில் ஏற்றச் செயல்களால் இன்புறுவோம்
முந்துஞ் செயல்களில் ஊக்கமும் கொண்டே முயன்றிடுவோம்
வந்த பெரியோர்கள் வாழ்வின் வரமெனும் வாகறிவோம்
இந்தநற் சேதியைத் தந்தவிப் பாடல் இனிக்கிறதே!

கவிஞர் Krishnamurthy Nandagopal
நல்ல குருவினை நாடுதல் நாளும் நலம்பயக்கும் 
ஒல்லும் வகையறி வாலே உவகையு முற்றிடலாம்
செல்லும் அறவழி ஈதெனத் தேர்வீர் திறத்தினரே
வெல்லும் கனவெனச் சொன்னவிப் பாடல் மிகவினிதே.!

கவிஞர் Vajjiravelan Deivasigamani 
தேடும் புகழொடு செல்வமும் நல்வழி தேர்ந்திடிலோ
நாடும் மகிழ்வது நம்வாழ்வில் சேரும் நலத்துடனே
ஓடும் மனத்தெண்ணம் ஓரெல்லை கொண்டே ஒழுங்குபெறின்
ஈடிலா நன்மையே என்றவும் பாடல் இனிக்கிறதே.!
★★★

No comments: