பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

6 Feb 2017

இந்திய அரசியல் சட்டம் 5


இந்திய அரசியல் சட்டம்சில விளக்கங்கள். . . 


சட்டமும் உரிமையும் : பகுதி 5

வழக்கறிஞர் ரவிகல்யாணராமன்


நீதிபதிகள் பலர் சேர்ந்து அமர்ந்து ஒரு வழக்கைக் கேட்டுத் தீர்ப்பு வழங்கும் போது,

பெரும்பாலும் ஒரு மனதாகத் தீர்ப்பு வழங்குவதில்லை. இரண்டு நீதிபதிகள் அமர்வாக இருந்து, இருவர் கருத்தும் ஒத்துப் போகவில்லை என்றால், மூவர் அமர்வுக்குப் பரிந்துரை செய்யப்படும். மூவர் அமர்வில், இருவர் ஒரு விதமாகவும், மற்றவர் மாறுபட்டும் தீர்ப்புச் சொல்லும் பட்சத்தில், இருவர் தீர்ப்பே, அதாவது, பெரும்பான்மைத் தீர்ப்பே உறுதி செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்படும். இது, ஜனநாயக முறை. ஒரு மூவர் அமர்வுத் தீர்ப்பு ஒவ்வாததாகப் பிறகு வரும் இன்னொரு மூவர் அமர்வுக்குத் தோன்றினால், அந்தப் பொருள் ஐவர் அமர்வுக்கு அனுப்பப்படும். அதே போல் ஐவர் அமர்வுத் தீர்ப்பு மறு பரிசீலனைக்கு உரியதென்று இன்னோர் ஐவர் அமர்வு நினைத்தால், அது எழுவர் அமர்வுக்கு அனுப்பப்படும். இப்படியாக, இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் மிகவும் அதிக பட்சமாக விசாரணை செய்த அமர்வுதான் “கேசவானந்த பாரதி" வழக்கில் 13 நீதிபதிகள் அமர்வு. அது பற்றி முன்பே சுருக்கமாக ஓரளவு விளக்கி விட்டேன். இப்பொழுது, இத்தொடரின் சென்ற பகுதியில் குறிப்பிட்ட எஸ்.ஆர்.பொம்மை வழக்கைப் பார்ப்போம். 

எஸ்.ஆர்.பொம்மை வழக்கை விசாரித்ததோ ஒன்பது நீதிபதிகள் கொண்ட ஒரு சிறப்பு அமர்வு. அதில் ஆறு நீதிபதிகள் தனித்தனித் தீர்ப்புரைகள் வழங்கினார்கள். அவற்றுள், மூன்று தீர்ப்புரைகள் இரண்திரண்டு நீதிபதிகளின் இணைந்த தீர்ப்புரைகள். இந்தத் தீர்ப்புரைகளை ஆராய்ந்து பெரும்பான்மைக் கருத்துகளை உருவி எடுப்பதே மிகக்கடினமான பணி. ஆனால், நீதியரசர் சாவந்த், தமக்காகவும், நீதியரசர் குல்தீப் சிங் சார்பிலும் வழங்கிய தீர்ப்புரையின் முடிவில், அந்த வழக்குக்கான பிரச்சினையில், தீர்வுகளாக 8 முடிவுகளை அறிவித்தார். நீதியரசர் ஜீவன் ரெட்டி, தமக்காகவும், நீதியரசர் எஸ்.சி.அக்ராவால் சார்பிலும் வழங்கிய தனித் தீர்ப்புரையில், மேற்சொன்ன 8 முடிவுகளில், முடிவு எண் 3 தவிர மற்ற முடிவுகளோடு தாம் உடன்படுவதாக அறிவித்தார். நீதியரசர் ரத்தினவேல் பாண்டியனும் தம் தனித் தீர்ப்புரையில் மேற்சொன்ன முடிவுகளில் 3-ஆவது முடிவைத் தவிர மற்ற முடிவுகளை ஏற்றுக்கொண்டார். எனவே, நீதியரசர் சாவந்த் அறிவித்த 8 முடிவுகளில் 7 முடிவுகள், ஐந்து நீதிபதிகளின் ஒப்புதல் பெற்றுப் பெரும்பான்மையின் முடிவுகளாகி, அ.அ.ச.வின் 356 ஆவது பிரிவின் பயன்பாடு குறித்த சட்டங்களாக நிறுவப்பட்டன. 
நீதியரசர்கள் அஹமதி, ராமசாமி ஆகியோர் தனித்தனியாகவும், நீதியரசர்கள் வர்மா, யோகேஸ்வர் தயாள் ஆகியோர் இணைந்தும் வழங்கிய மூன்று மாற்றுத் தீர்ப்புரைகள், சிறுபான்மைக் கருத்துகளாக நிராகரிக்கப்பட்டன.  
பெரும்பான்மைத் தீர்ப்பின்படி, சட்டங்களாக நிறுவப்பட்ட 7 முடிவுகளில், மதச்சார்பின்மை என்று தமிழில் புரிந்து கொள்ளப்படும், “செக்யூலரிஸம்”, அ.அ.ச.வின் ஆதாரக் கூறு என்ற முடிவு உள்ளது. ஆனால், கூட்டாட்சி முறை பற்றி அந்த முடிவுகளில் எந்த முடிவிலும் எதுவும் சொல்லப் படவில்லை. இருந்தாலும், அந்த வழக்கின் 6 தனித் தீர்ப்புரைகளில், பல இடங்களில் கூட்டாட்சி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுக் கருத்துச் சொல்லப்பட்டுள்ளது.
அ.அ.ம.வில் பல விவாதங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்ட அ.அ.ச.வின் முறைப்பாட்டில், ஒன்றிய முறைப்பாட்டின் கூறுகளைக் காட்டிலும், கூட்டாட்சி முறைப்பாட்டின் கூறுகளே அதிகம் என்று நீதி.ரத்தினவேல் பாண்டியன் 4-ஆவது பத்தியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அ.அ.ச., முறைப்பாடு, அமெரிக்க அரசியல் அமைப்பு முறையை ஒத்த கூட்டாட்சி முறைப்பாடு இல்லை என்ற கருத்தை பத்தி 49-ல், நீதி. அஹமதி தம் தனித்தீர்ப்புரையில் பதிவு செய்தார். மேலும் நீதி.அஹமதி தம் தீர்ப்புரையில் “ராஜஸ்தான் மாநிலம் எதிர் இந்திய ஒன்றியம்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புரையில், அ.அ.ச.வில் கூட்டாட்சி முறைப்பாட்டுக் கூறுகளைக் காட்டிலும், ஒன்றிய முறைப்பாட்டுக் கூறுகளே அதிகம் என்று நீதி.பெக் சொன்னதையும், அதைத் தொடர்ந்து அவர் முன்மொழிந்த கூற்றையும் ஒப்புதலோடு சுட்டிக் காட்டுகிறார்.
நீதி.பெக்கின் உரை பின்வருமாறு:
(“In a sense, therefore, the Indian Union is federal. But, the extent of federalism in it is largely watered down by the needs of progress and development of a country which has to be nationally integrated, politically and economically coordinated, and socially, intellectually and spiritually uplifted. In such a system, the States cannot stand in the way of legitimate and comprehensively planned development of the country in the manner directed by the Central Government.”)
“எனவே, ஒரு நோக்கின்படி இந்திய ஒன்றியம் ஒரு கூட்டாட்சி ஒன்றியம். ஆனால், தேசிய ஒருமைப்பாடு, அரசியல், பொருளாதார ரீதியாக இயைபு, சமூக, அறிவார்ந்த, ஆன்மிக உயர்வு பெற்று முன்னேறி, வளர்ச்சியடைய வேண்டிய நாடாக இருக்கும் காரணத்தால், அதன் கூட்டாட்சித் தன்மை நீர்த்துப் போனது. அப்படியொரு முறைப்பாட்டில், மைய அரசின் ஆணைகளின்படி,, நாடு, சட்டப்படி, ஒருங்கிணைந்த, திட்டமிட்ட முன்னேற்றம் அடைவதை மாநிலங்கள் தடுக்கக் கூடாது”.
மற்ற நீதிபதிகள் என்ன சொன்னார்கள், கூட்டாட்சி முறைப்பாட்டின் கூறுகள் அ.அ.ச.வின் ஆதாரப் பகுதிகளா என்ற கேள்விகளை இத்தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)

No comments: