பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

6 Feb 2017

இந்திய அரசியலமைப்புச் சட்டம்,4


இந்திய அரசியல் சட்டம்

சில விளக்கங்கள். . . பகுதி : 4

வழக்கறிஞர்விகல்யாணராமன்

இந்திய அரசியல் அமைப்பு முறை முழுக் கூட்டாட்சி அமைப்பு முறை இல்லை
என்று முன்பே சொன்னேன். Constituent Assembly” எனப்படும் அரசியல் அமைப்பு மன்றம் (அ.அ.ம.), அ.அ.ச.வை வடிவமைக்கும் பணியை டாக்டர் ஆம்பேட்கர் ('அம்பேத்கார்' என்று தவறாக உச்சரிக்கப்படும் பெயர்) தலைமையில் ஏற்றுக் கொண்டதும், முதலில், இந்திய அரசியல் அமைப்பு முறை ஒரு கூட்டாட்சி அமைப்பு முறையாக இருக்க வேண்டும் என்றே அறிவித்தது. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை செய்யப்படுவது உறுதியானதும், அதன் விளைவாகக் கலவரங்கள் மூண்டதும், அ.அ.ம.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இந்திய நாடு, பல மாநிலங்களின் கூட்டாக மட்டும் இல்லாமல், ஒரு வலிமை மிக்க ஒன்றியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அந்த மாமன்றம் உணர்ந்து கொண்டது. அந்த வலிமையை எந்த விதத்தில் குறைத்தாலும் அது அதன் கட்டுக்கோப்புக்கே ஆபத்தாகிவிடக்கூடும் என்ற உணர்வு மேலோங்கியது.
ஆம்பேட்கரின் வலியுறுத்தலே, அ.அ.ச. வரைவின் முகப்புரையில் (Preamble) “கூட்டமைப்பு" என்ற சொல் நீக்கப்பட்டு, அந்த இடத்தில், “ஒன்றியம்" என்ற சொல் பதியப்பட்டதற்கு முக்கிய காரணமானது. ஆனாலும், அ.அ.ச.வின் இறுதி வரைவை அ.அ.ம., 26-11-1949 அன்று ஏற்றுக் கொண்டு அதை அடிப்படைச் சட்டமாக ஆக்குவதற்கு முன் அந்த மாமன்றத்தில் ஆம்பேட்கர் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க பேருரையில், அந்த அ.அ.ச.வின்படி இந்திய அரசியல் அமைப்பு முறை ஒன்றியக் கூட்டாட்சி அமைப்பு என்று குறிப்பிட்டார்.  அதற்கு ஆதாரமாக, அ.அ.ச.வில் சில பிரிவுகளை அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக, மூன்று பட்டியல்கள் மூலம் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களிடையே சட்டமியற்றும் அதிகாரம் பிரிக்கப் பட்டிருந்தாலும், மாநிலப் பட்டியலில் உள்ள பொருள்கள் பற்றியும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நாடாளுமன்றம் சட்டமியற்றலாம் என்ற அதிகாரம் வழங்கும் பிரிவுகள் 249, 250, 252 ஆகியவற்றை அவர் தம் கருத்துக்குச் சான்றாகக் குறிப்பிட்டார். இதுவே இங்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள கருத்துச் சூழலில் கருதத் தக்கது.
249 ஆவது பிரிவின்கீழ், நாடாளுமன்றம் மாநிலப் பட்டியலில் உள்ள பொருள் பற்றிச் சட்டமியற்ற, மாநிலங்களவை (ராஜ்ய சபா) மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய நலனுக்கு அப்படிப்பட்ட சட்டம் அவசியம் என்பதாக அத்தீர்மானம் இருக்க வேண்டும்.
250 ஆவது பிரிவு என்ன சொல்கிறது? அவசரநிலைப் பிரகடனம் அமலில் இருக்கும் போது எந்த நிபந்தனையும் இன்றி நாடாளுமன்றம் மாநிலங்கள் பட்டியல் பொருள் குறித்துச் சட்டம் இயற்றலாம் என்பது 250-ஆவது பிரிவின் சாரம்.
252 ஆவது பிரிவின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களின் ஒப்புதலின் பேரில் நாடாளுமன்றம் மாநிலப் பட்டியல் பொருள் குறித்துச் சட்டம் இய்ற்றலாம்.
இவற்றைச் சுட்டிக் காட்டி, இந்திய அரசியல் அமைப்பு முறை முழுக் கூட்டாசி அமைப்பு முறை இல்லை என்று ஆம்பேட்கர் கருத்துத் தெரிவித்தார்.
கூட்டாட்சி முறைக்கு நேரடி முரணான பிரிவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை, சில சூழ்நிலைகளில் கலைத்து விட்டு அந்த மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குக் குடியரசுத் தலைவர் மூலமாக மைய அரசு ஆட்சி நடத்த அதிகாரம் வழங்கும் 356 ஆவது பிரிவு. எந்தப் பிரிவைப் பயன்படுத்த வாய்ப்பே வராது என்று ஆம்பேட்கர் நம்பினாரோ, அந்தப் பிரிவை 100 முறைக்கு மேல் பயன்படுத்தி மைய அரசு பல்வேறு மாநிலங்களின் ஆட்சியைக் கலைத்ததைச் சமீபத்திய வராலாறு சொல்கிறது.
அந்தப் பிரிவு அடிக்கடிப் பயன்படுத்தப்படுவது அ.அ.ச.வின் கூட்டாட்சிக் கூறுக்கு முரணாக இருப்பதை உச்சநீதி மன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட ஒரு சிறப்பு அமர்வு, "எஸ்.ஆர்.பொம்மை" வழக்கில் பரிசீலிக்க நேர்ந்தது.      
(தொடரும்)

No comments: