பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

26 Jan 2017

இந்திய அரசியல் சட்டம், 3

இந்திய அரசியல் சட்டம்
சில விளக்கங்கள். . . 

வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன்


சட்டமும் உரிமையும்: பகுதி 3
****
"தருமத்தில் மகிழ்ச்சியும், அதர்மத்தில் வெறுப்பும் மக்கள் உள்ளத்தில் இருக்க வேண்டும். இல்லாவிடில் எந்த அரசியல் முறையும் எந்தப் பொருளாதார முறையும் சுகம் தராது" (ராஜாஜி)
****
இந்திய அ.அ.ச. வடிவமைக்கப்பட்ட வரலாறே, பல திருப்பங்கள் கொண்ட ஒரு
விறுவிறுப்பான கதை. அதை மிகச் சுருக்கமாக இப்பொழுது சொல்ல முனைகிறேன்.

இந்தியா என்ற ஒரு நாடு, ஓர் அரசியல் கூறாக உருவாவதற்கு முன்பே, அதற்கென்று ஓர் அ.அ.ச. வேண்டும் என்ற கோரிக்கையை 1934 ஆம் ஆஅண்டிலேயே, முதல்முறையாக எழுப்பியவர், அன்றைய, பிளவுபடாத, பொதுவுடைமைக் கட்சியின் (Communist Party of India) முன்னணித் தலைவர் திரு.எம்.என்.ராய். அந்தக் கோரிக்கையை 1935-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் எழுப்பியதும் அது வலுப்பெற்றது. பிறகு பிரிட்டிஷ் அரசும் அதை ஏற்றுக் கொண்டது. 

இந்தியாவின் அ.அ.ச.வை வடிவமைக்கும் அதிகாரமும், பொறுப்பும் உடைய ஒரு மன்றத்தை உருவாக்க 1946-ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. அது அரசியல் அமைப்பு மன்றம் (Constituent Assembly) என்று அழைக்கப் பட்டது. சுருக்கமாக அதை அ.அ.ம. என்று அழைக்கலாம். அதற்கான உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களின் (அன்றைய தமிழில், மாகாணங்கள்) சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். மொத்தம், 389 உறுப்பினர்கள் கொண்ட முதல் அ.அ.ம. வில், 292 உறுப்பினர்கள் மேற்சொன்னவாறு மாநில சட்டமன்றங்களாலும், 93 உறுப்பினர்கள் அன்றைய குறுநில மன்னர்களின் சமஸ்தானங்களாலும், 4 உறுப்பினர்கள் டில்லி, அஜ்மீர்-மேவார், கூர்க், பலூசிஸ்தான் ஆகிய மாநிலங்களிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையை முன் வைத்துப் போராடி வந்த ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக் இம்மாமன்றத்தை ஏற்க மறுத்துப் புறக்கணித்தது. தனி பாகிஸ்தான் கோரிக்கை வலிமை பெற்று, “சேதமில்லாத இந்துஸ்தானம்" என்று பாரதி வணங்கிய அகண்ட பாரதத்தைப் பிரிக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்ததும், அ.அ.ம. திருத்தி அமைக்கப் பட்டது. 

299 உறுப்பினர்களைக் கொண்டதாகத் திருத்தி அமைக்கப்பட்ட அந்தப் பெருமன்றத்தின் முதற் கூட்டம், 1946, டிஸம்பர் 31 அன்று நடைபெற்றது. 166 நாட்கள் அதன் கூட்டம் நடைபெற்று, மிக விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு, உலகின் பல நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களையும் ஆராய்ந்து, நிறைவாக, இப்பெருமன்றம் வடிவமைத்த அ.அ.ச., 1948-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26-ஆம் நாள், சட்டமாக நிறைவேறியது. 

அ.அ.ச. வரைவு தயார் செய்யும் பணி, இம்மாமன்றத்தின் ஒரு குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் தலைவராக டாக்டர் ஆம்பேட்கர் அரும்பணி ஆற்றினார். அவரோடு, கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அய்யர், என்.கோபால்ஸ்வாமி அய்யங்கார், முகமது சாதுல்லா போன்ற சான்றோர் பெருமக்கள் பலர் இணந்து உருவாக்கிய வரைவைப் பல விவாதங்களுக்குப் பிறகு, பல திருத்தங்களோடு அ.அ.ம. மேற்சொன்னவாறு நிறைவேற்றியது.

உணவும், உடையும் இன்றி வாடும் மக்களுக்கு அவற்றை அளிக்கக் கூடியதும்,  ஒவ்வோர் இந்தியனும் தன் திறனுக்கு ஏற்பத் தன்னை வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கக் கூடியதுமான ஓர் அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் இந்தியாவை விடுவிப்பதே அந்த மாமன்றத்தின் முதற் பணி என்று உணர்ச்சி பூர்வமாக ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரை இங்கே நினைவு கூரத் தக்கது. 

பல இன்னல்களுக்கும், இடர்ப்பாடுகளுக்கும் இடையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அ.அ.ச. ஓர் அறிவார்ந்த ஆவணமாக மட்டுமே அமைந்து விடாமல், அறிவைக் கடந்த, உணர்ச்சியும், உள்ளூக்கமும் விரவிய ஓர் அற்புத சாசனமாக அமைந்து, சுதந்திர இந்தியாவின் உயிர்நாடியாக இருந்து நம் அரசியல் அமைப்பை எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கிடையிலும் பாதுகாத்து வரும் பெட்டகமாக விளங்குகிறது.

“அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை” (திருக்குறள்) 

(தொடரும்)

No comments: