
படித்ததில் பிடித்தது. . .
என்னவளின் கண்
(ஒரு பா ஒருபஃது!) நேரிசை வெண்பா
"பைந்தமிழ்ச் செம்மல் " ஸ்ரீவெங்கடேசன்
கொல்லுதே என்ன கொடுமை - மெல்லியளால்
விற்புருவக் கீழே விழியம்பு கொண்டென்னை
வெற்றிகொண்ட விந்தை இது 1
இதுவென்ன விந்தை இருண்ட திராட்சை
மதுவாலே வாரா மயக்கம் - பதுமை
அவளின் திராட்சை அருவிழியி ரண்டால்
அவனியோர்க் கேகுமே யாங்கு! 2
ஆங்கொருக்கால் மீனும் அருங்குளத் தினின்றேக
நீங்கும் தனதுயிரை நீணிலத்தில் - ஈங்கு
முகக்குளத்து மீனோ முகத்தினதே தங்கிச்
செகுத்திடுதே திண்மை உளம். 3
அந்தா மரைமூழ்கி ஆழ்வண்டு தேன்குடித்(து)
அந்தோ மயங்கிய தாங்கென்பர் - செந்தாமரை
அன்ன முகத்தில் அருவிழி வண்டுகள்தாம்
என்னை மயக்குவ தென்? 4
என்ன வொருவிந்தை இவ்வுலகில் தாமரை
தன்னிலை பச்சை தனிலேக - பொன்னார்
கமல முகத்தில் கருப்புவெள்ளை யாய்க்கண்(டு)
இமைக்க மறந்தான் இவன் 5
இவனுக்கோ ரையம் இருநிலத்தீர் தீர்ப்பீர்
அவனியில் ஆதவனும் அல்லோன் - அவனும்
ஒருசேரக் காணார் ஒயிலாள் முகத்தில்
இருசுடரும் சேர்ந்திருப்ப தென்? 6
இருப்பதனை நன்றாய் இளகவைக்கத் தீயில்
உருக்கிட வேண்டா உலகீர் - கருப்பு
விழியாள் விரிபார்வை நோக்க இரும்பும்
உருகாதோ உள்ளே கனிந்து 7
கனிவுளப் பார்வையில் காயைச் சுவையாம்
கனியாக்கும் கன்னி விழிகள் - பனித்திடக்
காணின் மனமும் கரைந்து புவிவாழ்வு
வீணென் றுணர்த்தின வே! 8
வேலை நிகர்த்த விழியினாள் - நீலக்கரு
வேலை நிகர்த்த விழியினாள் - பாலை
நிலமதும் நீரூற் றதனால் நிரம்பும்
சிலையவள் சீர்விழி பார்த்து 9
பார்த்தன் கணையோ மதன்கைச் சிலையம்போ
சீர்த்தமால் சீறு சகடமோ - வார்த்த
சிலையவள் சீர்விழிகள் என்று மயங்கி
வளையுமோ வாட்புருவ வில் 10
ஆக்கம் :
"பைந்தமிழ்ச் செம்மல் "
3 comments:
என்ன தவம்செய்தேன் இப்படியோர் பாராட்டென்
மன்னராம் பாவலர் வாய்மொழிய - என்னுடைய
பங்கென் றெதுவுமில்லை பாவலரின் பாசறையில்
தங்கிப் படித்த தகவு
அருமை. கவிஞர் வெங்கடேசன். பாடலின் சுவை மிகுதியால் இந்தத் தளத்தில் தனிப்பதிவாக்கிக் கொண்டேன். வாழ்த்துகள்.
தகவும் நனித்தமிழ்ப் பற்றும் தனித்த
புகழுடை யாப்பின் புரிந்தீர் - திகழொளி
செங்கதிரோன் செவ்வொளியாய்த் தேனார் தமிழ்குடித்துத்
தங்கக் கவியாய்த் தழை!
Post a Comment