பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Jan 2017

இந்திய அரசியல் சட்டம்.2


இந்திய அரசியல் சட்டம்.
சில விளக்கங்கள். . . 

வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன்சட்டமும் உரிமையும்: பகுதி 2Indian Constitution என்ற இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இனி அ.அ.ச. என்று
குறிப்பிடலாம். அதில், மூன்றாவது அதிகாரம், "அடிப்படை உரிமைகள்" பற்றியது. அதில் 12 முதல் 35 வரை பிரிவுகள் உள்ளன. இந்த அடிப்படை உரிமைகள் அ.அ.ச.வின் ஆதாரப் பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றுடன் இந்த அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள உச்சநீதிமன்றத்திலும்,
உயர் நீதிமன்றத்திலும்,  மனுச் செய்யும் உரிமையும், இந்த அடிப்படை உரிமைகளிற் குறுக்கிடும் சட்டங்கள், விதிகள், ஆணைகள், நடவடிக்கைகள் ஆகியவை செல்லாதவை என்று அறிவிக்க அந்த நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரமும் ஆதாரப் பிரிவுகள் என்று உச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப் பட்டன. இவற்றைப் பிரகடனம் செய்யும் பிரிவுகள் 32, 226, ஆகியவையும் அ.அ.ச.வின் ஆதாரப் பிரிவுகள் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதே போல்,  இந்தியா ஒரு குடியரசு, மக்களாட்சி என்பதை உறுதி செய்யும் அ.அ.ச, வின் முன்னுரைப் பகுதியும் ஆதாரத் தன்மையுடையது என்ற அங்கீகாரம் பெற்றுள்ளது. இப்படிப் பட்ட ஆதாரமான பிரிவுகளையும், பொருண்மைகளையும் அழிக்கவோ, திருத்தவோ எந்தக் குழுவுக்கும், யாருக்கும் உரிமையில்லை என்பது நிறுவப்பட்ட, மறுக்கப் பட முடியாத நீதியாகவே, கேசவானந்த பாரதி தீர்ப்பின் விளைவாக நிலைபெற்று விட்டது.

சமீபத்தில், மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றியது. இது நாள் வரை நீதிமன்ற நீதிபதிகளை, நீதியரசர்களின் உயர்மட்டக் குழுவே நியமித்துக் கொண்டிருந்த முறையை மாற்றி, அரசுக்கு அந்த அதிகாரத்தை மறைமுகமாக வழங்குமாறு நாடாளுமன்றம் இயற்றிய ஒரு சட்டத்தை   செல்லாத சட்டம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துத் தீர்ப்பு வழங்கியது. அந்தச் சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகவும், அந்தக் சுதந்திரம் நம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் அடிப்படை உள்ளீடு என்றும் அந்தத் தீர்ப்பில் சொல்லப் பட்டது. நீதித்துறையின் சுதந்திரமும் அ.அ.ச.வின் ஆதாரப் பகுதி என்று உறுதி செய்யப் பட்டது.

இவ்வாறு அங்கீகரிக்கப் பட்ட ஆதாரப் பிரிவுகளில் எது இந்தக் கட்டுரைத் தொடரின் கருத்துச் சூழலில் கவனிக்கத் தக்கது? 

அ.அ,ச.வில் உள்ள கூட்டாட்சிக் கூறுகள். அதாவது, இந்திய அரசியல் அமைப்பில் கூட்டாட்சி முறைப்பாடு ஆதாரத் தன்மை வாய்ந்த ஓர் அடிப்படைக் கூறா?

இதை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள, அ.அ.ச.வின் ஏழாவது இணைப்பில் ( 7th Schedule, ஏழாவது அட்டவணை என்றும் சொல்லப் படுகிறது), தரப்பட்டுள்ள மூன்று பட்டியல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சட்டங்கள் இயற்றும் அதிகாரம் மாநிலச் சட்ட மன்றங்களுக்கும் உண்டு, நாடாளுமன்றத்துக்கும் உண்டு. மாநிலச் சட்டங்கள் அந்தந்த மாநிலங்களின் எல்லைகளுக்கு வெளியில் அமலில் இருக்க முடியாது. ஆனால், மையச் சட்டங்கள் நாடு முழுமைக்கும் பொருந்தக் கூடும். எனவே, சட்டம் இயற்றும் அதிகாரத்தை மைய, மாநில அவைகள் இடையே பிரிக்க வேண்டியிருந்தது. அதனால் தான் அ.அ.ச.வின் ஏழாவது இணைப்பில் மூன்று பட்டியல்கள் உள்ளன. முதற் பட்டியல் " மையப் பட்டியல்" (Union List)என்றும், அடுத்தது, "மாநிலப் பட்டியல்" (State List) என்றும், கடைசிப் பட்டியல், "பொதுப் பட்டியல்" (Concurrent List) என்றும் அழைக்கப் படலாம்.

அ.அ.ச.வின் படி, இந்திய அரசியல் அமைப்பு, முழுக்க, முழுக்கக் அமெரிக்கக் கூட்டாட்சி முறை அரசியல் அமைப்பு இல்லை. அதே சமயத்தில் அது ப்ரிட்டனைப் போல், முழுமையான ஒருமை அமைப்பும் இல்லை.

சட்டம் இயற்றும் அதிகாரம் பகுக்கப் படாமல், முழு அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கே தரப்பட்டிருந்தால் அது ஒருமை முறைப்பாடாக ஆகியிருக்கும். பொதுப் பட்டியல் என ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், மாநிலப் பட்டியல் பொருள்கள் குறித்துச் சட்டமியற்ற எந்தச் சூழ்நிலையிலும் மைய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப் படாமல் இருந்திருந்தால், இந்திய அரசியல் அமைப்பு ஒரு கூட்டாட்சி அமைப்பாக இருந்திருக்கும். ஆனால், அ.ஆ.ச.வை வடிவமைத்த சான்றோர் பெருமக்கள் இரண்டு முறைகளுக்கும் இடைப்பட்ட, ஒரு புதிய , ஒருங்கிணைந்த முறையை அமைத்தனர். யார் அந்தச் சான்றோர்கள் ? அ.அ.ச. எப்படி, யாரால் வடிவமைக்கப் பட்டது?

பி.கு.
பாரத நாடு எத்தகைய நாடு என்ற கேள்விக்கு மிகவும் எளிமையாக விடை சொன்னான் பாரதி:
"பாருக்குள்ளே நல்ல நாடு".
அந்த "நல்ல " என்பதை விட நல்ல அடைமொழி வேறுண்டோ? 
"நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே" என்ற தேவாரப் பாடல் எதிரொலிக்கிறதே!

(தொடரும்)

No comments: