பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

17 Jan 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . .

கடற்கரைப்_புரட்சி (17/01/2017
செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணி) 

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . .

************************************
அலையலையாய்ச் சேர்ந்ததுபார் இளைஞர் கூட்டம்
   ஆர்ப்பரித்துக் கிளம்புதடா அணிதி ரண்டே.

சிலையாக இருந்தாலே சீர ழிப்பான்
   சிலிர்த்தெழடா அடலேறே! எனத்தி ரண்டார்
விலைபோகா வீரர்கள் கூட்டங் கண்டு
    வேடதாரி அரசியலார் வியர்த்து நின்றார்
உலைத்தீயின் சுடராக முழக்கங் கேட்டே
   ஊமையென ஆனார்கள் எதிர்த்த வர்கள்.!

உணர்வுக்கும் உரிமைக்கும் இடேயே யான
   ஓங்குமிந்தப் போராட்டம் ஓய்ந்தி டாது
உணவுக்குப் பிறந்தவரா தமிழச் சாதி
    உணர்வுகளின் குவியலென உணர்ந்தி டுங்கள்
நிணத்தோடும் சதையோடும் கலந்து விட்ட
   நீர்க்காத போராட்டம் இதுவே காணீர்
தணலாகி எரிப்பதற்குள் தலைதெ றிக்கத்
   தாய்நாட்டுக் கோடுங்கள் பிழைத்துப் போங்கள்!

என்வீட்டில் எப்படிநான் படுக்க வேண்டும்?
   எனச்சொல்ல உனக்கென்ன உரிமை யுண்டு?
என்பசிக்கு நானென்ன உண்ண வேண்டும்?
   எனச்சொல்ல உனக்கென்ன தகுதி யுண்டு?
என்வாழ்வில் ஒன்றிவிட்ட உணர்வை நீக்க
    ஏய்பீட்டா! உனக்கென்ன வேலை?  போபோ
என்னுரிமை காக்காத அரசும் நாட்டில்
     எதைச்செய்ய இருக்கிறது தண்டத் திற்கு?

எச்சரிக்கை யாகஇதை உணர்ந்தி டுங்கள்
    ஏற்பட்ட புரட்சித்தீ பரவ வேண்டா.
துச்சமெனத் எம்முயிரை இழந்தும் கூடத்
   தொலைத்திடுவோம் பிறநாட்டான் சதியை. எங்கள்
எச்சங்கள் இருக்கும்வரை ஓய்வ தில்லை
   எதற்குமினி அச்சமென்ப தில்லை.  . .தம்பீ
இச்செய்தி வரலாறாய் மாற வேண்டும்
   இவ்வுணர்வை எப்போதும் மனத்தில் வைப்போம்!

No comments: