பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

24 Jan 2017

இந்திய அரசியல் சட்டம் 1


இந்திய அரசியல் சட்டம்
       சில விளக்கங்கள். . . 

(வழக்கறிஞர் திரு.ரவி கல்யாணராமன் )

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக எழுந்த சட்டப் பிரச்சினையின் சுருக்கமான வரலாற்றை
நேற்று நான் முகநூலில் பதிவு செய்திருந்தேன். இன்னும் விளக்கம் தேவை என்று சிலர் கேட்டிருப்பதால், மேலும் விரிவாகப் பதிவு செய்கிறேன்.

சட்ட நுட்பங்கள் பற்றி மாணவர்களும், இளைஞர்களும் எளிதில் புரிந்து கொள்ள வசதியாகத் தமிழில் இதை எழுத முற்படுகிறேன்.

ஓரளவு சுதந்திர இந்தியாவின் அடிப்படை அரசியல் சட்டத்தின் சுருக்க வரலாறாகவும் இது அமையக் கூடும். இதைத் தொடர் கட்டுரையாகப் பதிவிடுகிறேன். இயன்றவரை தினம் ஒரு பகுதி பதிவு செய்ய முயல்கிறேன் ):)

சட்டமும் உரிமையும் : பகுதி 1

இந்திய அரசியல் அமைப்பு முறை ஓர் ஒருங்கிணைப்பு முறை. அது ஒருமை அரசு முறை, பன்மை அரசு முறை ஆகிய இரண்டு முறைகளின் ஒருங்கிணைப்பு .

முழு அதிகாரமும் கொண்ட ஒரே நாடாளுமன்ற அமைப்பு முறை, ஆங்கிலத்தில் Unitary State எனப்படும். தமிழில், "ஒருமை அரசு" எனச் சொல்லலாம். ப்ரிட்டிஷ் அரசு அத்தகையதே. அது சர்வ வல்லமை மிக்கது. என்ன சட்டமும் செய்யலாம்.

"நாளை முதல் பசு மாடுகளைக் காளைகள் என்றும், காளைகளைப் பசுக்கள் என்றும் தான் குறிப்பிட வேண்டும்" என்று கூட ப்ரிட்டிஷ் நாடாளுமன்றம் சட்டமியற்றலாம், ஆனால் பசுக்களைக் காளைகளாகவும், காளைகளைப் பசுக்களாகவும் மாற்ற மட்டும் அதனால் முடியாது என்று ஓரறிஞர் நகைச்சுவையோடு குறிப்பிட்டது பெருமளவு சரியே.

அமெரிக்க முறை வேறுபட்டது. அங்கே federalism என்ற கூட்டாட்சி முறை உள்ளது. மைய நாடாளுமன்றம் சில சட்டங்களே செய்யலாம், மாநிலங்களின் சட்டமன்றங்களே பெரும்பாலான சட்டங்கள் செய்யும் அதிகாரம் உடையவை. இதைக் கூட்டாட்சி முறை என்று சொல்லலாம்.

இந்திய அரசியல் அமைப்பு முறை இந்த இரண்டு முறைப்பாடுகளையும் உள்ளடக்கிய ஐக்கிய அல்லது ஒருங்கிணைப்பு முறை.

Constitution எனப்படும் அரசியல் அடிப்படைச் சட்டமே இந்தியாவில் சர்வ வல்லமை படைத்த ஒரு சாஸனம். அதுவே ஒட்டு மொத்த இந்திய மக்களின் பொதுக் குரல், மனசாட்சி, காப்பகம். இந்திய மக்களாகிய நாம் ( we the people of India), நமக்காக ஏற்படுத்திக் கொண்டதே அந்த அடிப்படைச் சட்டம். அதற்குக் கட்டுப்பட்டே மற்ற எல்லாச் சட்டங்களும், அது நாடாளுமன்றச் சட்டமோ, ஒரு மாநிலத்தின் சட்டமன்றச் சட்டமோ, இயற்றப் பட வேண்டும்.

அடிப்படைச் சட்டத்துக்கு முரணான எந்தச் சட்டமும் செல்லாது என்று அறிவிக்கும் உரிமையை உயர் நீதி மன்றங்களுக்கும், உச்சநீதி மன்றத்துக்கும் அந்த அடிப்படைச் சட்டமே வழங்கியுள்ளது.

அடிப்படைச் சட்டத்தில் திருத்தங்கள், மாறுதல்கள் செய்யும் அதிகாரத்தையும் அந்த அடிப்படைச் சட்டமே ஒரு பேராயத்திடம் வழங்கியுள்ளது.

ஆனால் திருத்தம் என்ற பெயரில் அந்தப் பேராயம் அடிப்படைச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்த போது, உச்ச நீதி மன்றமே, பல தடுமாற்றங்களுக்குப் பிறகு, வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதித் தீர்ப்பை, 13 நீதிபதிகள் அமர்வின் மூலம், கேசவானந்த பாரதி வழக்கில், 1973-ஆம் ஆண்டு வழங்கியது. மக்கள் உரிமைகளை மக்கள் பிரதிநிதிகள் பறிக்க முடியாது என்ற போற்றத்தக்க தத்துவத்தை அசைக்க முடியாத சட்டமாக இத்தீர்ப்பு ஆக்கியது. இந்தத் தீர்ப்பின் கட்டுப்பாட்டை மீற முடியாத நிலையிலேதான், 1975-ல், பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை (Emergency) பிரகடனம் செய்து, அதன் மூலம் அடிப்படைச் சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வந்ததும், உரிமை மறுப்புச் சட்டங்கள் பல இயற்றியதும், அவசர நிலை போன பிறகு, அந்தத் திருத்தங்கள், அந்த உரிமை மறுப்புச் சட்டங்கள் செல்லாதவையாக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப் பட்டதும் வரலாற்றுப் பக்கங்களில் பதிந்து விட்ட செய்திகள்.

கேசவானந்த பாரதி வழக்கின் மையத் தீர்ப்பு என்ன என்றால், அடிப்படைச் சட்டத்தின் சில பகுதிகள் திருத்தப் படவோ, மாற்றப்படவோ முடியாத பகுதிகள் என்று அங்கீகரிக்கப் பட்டதுதான். அவற்றை Basic Structure என்று உச்ச நீதிமன்றம் அடையாளம் காட்டியது. தமிழில் இப்பகுதிகளை ஆதாரப் பகுதிகள் அல்லது உயிர்ப் பகுதிகள் எனப் புரிந்து கொள்ளலாம்.

மருத்துவர் ஒரு நோயாளியின் உடலை அறுப்பது அதைக் குணப்படுத்தி உயிரோடு வாழ வைக்கத் தானே அன்றி அந்த உடலிலிருந்து உயிரைப் பிரிப்பதற்கு அன்று.

கவிதைகள் அதிகம் எழுதாத, ஆனால், எழுதிய வரை அருமையாக எழுதிய நண்பர் சுகி சிவம் அவர்களுடைய ஒரு கவிதை வரி இங்கே நினைவு கூரத் தக்கது. 
"மருத்துவன்கைக் கத்தியடா உந்தன் புத்தி
மடையன்கைக் கத்தியடா எந்தன் புத்தி."

அரசியல் அடிப்படைச் சட்டத்தின் உயிர்ப் பகுதிகள் எவை?

(தொடரும்)p

No comments: