பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

14 Oct 2017

காமாட்சியம்மன்_ஒருபா_ஒருபஃது

காமாட்சியம்மன்_ஒருபா_ஒருபஃது


 சென்னையிலேயே பிறந்து வளர்ந்து 45 அகவை ஆகியும், கோவிலுக்கு மிக அருகில் சொந்த வீடு கட்டிக் குடியேறி,  ஏறத்தாழ 4 திங்களாகியும்
இத்தனை நாளாகப் பார்க்கவியலா என்னன்னை காமாட்சியை இன்றுதான் கண்டேன். . .

        வாடா நிலைதந்த மாங்காட்டுத் தாயைப் பாடாதிருந்தால் நான் பாவலனல்லவே. . .இதோ.  .. .

    காமாட்சியம்மன்_ஒருபா_ஒருபஃது


இன்றுதா னென்னைநீ ஏறெடுத்துப் பார்ப்பதற்குப்
பொன்னாளும் வாய்த்ததுவோ பூங்கொடியே - மின்னற்
கொடியிடையே ஈசன் குலவிளக்கே மீண்டும்
வடிவழகே வாராதோ வாய்ப்பு?  

வாய்திறந்த சொல்லெலாம் மாங்காட்டுத் தாயுன்னைப்
பாய்ந்தே அணைக்குதடி பார்வதியே - தேய்ந்தே
அழியும் நிலையெனினும் அம்மாவுன் சிந்தை
கழியாத நல்லருளைக் காட்டு.

காட்டில்வாழ்ந் தாலும் கருணைமிகக் கொண்டவளே 
பாட்டிலுனை வைத்தேன் பரையேநீ - தேட்டமுடைப்
பொன்னளிக்க வேண்டா பொருளளிக்க வேண்டாவே
நின்னினைவை நெஞ்சில் நிறை!

நெஞ்சத் தொருநினைவால் நீமண்ணால் ஈசனைக்
கொஞ்சிக் களித்திட ஆற்றுவெள்ளம் - மிஞ்சி
அழியாது காக்க அணைத்திட ஈசன்
தழுவக் குழைந்தார் தளர்ந்து!

(அதனால் ஈசனுக்குத் "தழுவக் குழைந்த நாதர் "என்ற பெயர் வழங்கலாயிற்று) சான்று. . .காஞ்சிப் புராணம்

தளர்ந்துநான் வீழாமற் றாயேநீ காப்பாய்
இளந்தளிரே என்னுள் இருந்தே - தளிர்விப்பாய்
ஏவா நிலையும் எதிரிலா நன்னிலையும்
சாவா மருந்தாகத் தா!

தாயே காமாட்சி தாவிவரும் பிள்ளையை
ஏய உணர்வித்தே ஏற்றிடுவாய் - நாயேனின்
துன்ப மகன்றிடத் துய்ய நிலைதோன்ற
இன்ப மளிப்பாய் இருந்து.!

இருந்திருந்து நானுன்றன் இல்லத்தில் வந்தேன்
விருந்தானாய் கண்ணுக்கு மேன்மை - வருமாறே
என்றன் குடும்பமே என்றுமுன் தஞ்சமடி
என்றுதான் வந்தேன் இழிந்து!

இழிநிலை போக்கி எழில்நிலை யாக்க
வழிகாட்டு தாயே மகிழ்ந்து - செழிப்போடும்
தாங்கு பெயரோடும் தாழா நிலையோடும்
வீங்குவாழ் விங்கெனக்குத் தா!

தாயாகிக் காக்கும் தயாபரியே உன்னடியில்
சேயாகி நிற்கின்றேன் தேமலரே - பாய்ந்தோடும்
காட்டாறாய் நின்னருளைக் காட்டிடுவாய் எல்லோர்க்கும்
நீட்டுவாய் காக்கும் கரம்!

அம்மா எமையாளும் அங்காளத் தாயவளே
நம்பித்தான் வந்தோம் நலமருள்வாய் - உம்பரராய்
என்றைக்கும் வாழ இனிய அருடருவாய்
நின்றாளே வாழ்வின் நிலை!

No comments: