பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Dec 2017

வரதராசன்_பாக்கள்


#வரதராசன்_பாக்கள்
வரமருள்க தமிழே 
*******************
வானப் பரிதியினை நாடித் - தன்னை
   மாய்க்கும் பறவையினைப் போலே
ஞானச் செறிவுகளைத் தேடி - என்ன
   நானும் வருத்துகிறேன் நாளும்!

காணும் பொருள்களிலே தன்னின் - நற்
   கவினை இறைத்தபடி வாழும்
பூணும் வயிரமொழி யான - தமிழ்
   புல்லித் தழுவுகிறா ளென்னை!

அள்ளி யணைத்தபடி நாளும் - தமிழ்
   ஆற்றல் மிகுத்திடவே செய்வாள் 
வெள்ளி மினுக்குவதைப் போல - நான்
   மின்னி ஒளிர்ந்திடவே செய்வாள்!

காட்டும் மனையவளின் பாசம் - அது
   காசில் அடங்கும்சில நேரம்
நீட்டும் உதவிகளுங் கூடச் - சில
   நேரந் தவறிடவுங் கூடும்.

பிள்ளை தருமமைதி தத்தம் - நிலை
   பிறழும் பொழுதுகளு முண்டாம்
முள்ளின் கொடுக்குகளாய்க் குத்தும் - பண
   முதலைக் கொடுமைகளும் எத்தும்.!

காசை யலைந்தலைந்து தேடி - மனக்
   கருணை யொழிந்தவிதங் கண்டு
வேசை யெனும்பலரின் வேடப் - பொய்
   விரிப்பில் விழுந்ததுவு முண்டு.!

எந்த நிலைவரினும் என்றன் - மன
   இணைப்பில் நிறைந்ததமி ழாளின்
உந்தல் துணையிருக்க வாழ்வின் - துயர்
   ஒன்றும் எனையடைய மாட்டா!

பேசும் புளுகுகளும் நாளும் - எனைப்
   பேர்க்கும் பணக்குறைவும் நோயும்
கூசும் அடிவருடு மின்றி - எனைக்
   கொண்டு செலுத்துமவள் வாழி!

மாற்ற மெதுவரினும் என்றன் - மனம்
   மாறும் நிலைவருதல் வேண்டா 
ஏற்றும் இனியமொழி யாளை - நான்
   என்றும் நினைந்திருக்கச் செய்வாள்!

அஞ்சி யடங்காத வாழ்வை - என்
   அன்னை எனக்கருள வேண்டும்
கொஞ்சு தமிழ்மறந்த போதே -கொடுங்
   கூற்றுக் கிரையாக வேண்டும்!!

2 comments:

விழுது said...
This comment has been removed by the author.
விழுது said...

சிம்ம நடையில் கவிபடைத்த
செந்தமிழ் வாழ்த்து கண்டேன் !
வளர்க தங்கள் சீரிய பணி !!