பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

5 Nov 2017


படித்ததில் சுவைத்தது.  ..

சிற்றிலக்கிய வரிசை - 6

திருமால் பத்துரு இரட்டை மணிமாலை


    பைந்தமிழ்ச் செம்மல் ஸ்ரீவெங்கடேசன்
வாழ்த்து:


கயல்தொட்டுக் கண்ணன் வரையொன் பதெனப்
பயந்தான் திருமால் பலவாய் - நயப்பொடு
மாலின் பரியாம் வகையுருவும் போற்றியொரு
மாலையிட வண்டமிழே காப்பு!


நூல் :

அன்றொருநா ளூழிவெள்ளம் அண்ட மதைமூட
நன்றொரு மீனாகி நானிலத்தைக் - கன்றதனைக்
காக்குமோர் ஆவென்றே காத்திட்டான் அம்மாலைப்
பாக்கொண்டு வாழ்த்திப் பணி                            ...1

பணிந்திடும் யார்க்கும் பலநலம் செய்யும் பரமனவன்
மணிமார்வன் சத்ய வரத னெனுமன்னன் மாட்டடைந்தான்
அணியார்ந்த நற்கய லாயாங்(கு) உலகம் அதனையூழிப்
புனலினின் றேகாத்த பூமாலை யோனைப் புகழுகவே!    ...2

புகழுக் குரிய பொலிவுடைத் தேவர்
இகழ்ச்சி அடையா திருக்கத் - தகைசான்ற
ஓட்டுடை ஆமை உருவெடுத்துக் கன்மலை
நாட்டினான்  நன்முதுகில் தான்                     ...3

தன்முது கேற்றித் தரங்கினுள் மந்தாரஞ் சாய்ந்திடாது
நன்முறை ஆமையாய் நாரணன் அன்று நலம்புரிந்தான்
வன்முறை செய்யும் வலியாரைக் கொல்ல வழிமுறையாய்க்
கண்முன் னமிழ்தம் கவினுறத் தந்தான் கழல்பணியே!   ...4

ஏவுதல் செய்வாய் இதுகட் டளையென்றே
தேவரை வாட்டிய திண்டிறலோன் - பூவதனை
நீர்க்குள் அமிழ்த்த நெடுவளர்ந்த ஏனமாய்ப்
பேர்க்கும் திருமாலைப் பேசு                                                                       ...5

பேசவும் ஏலுமோ பெம்மான் புகழைப் பிறருணர
வாசவன் உள்ளிட்டோர் வாழ வகைசெய வையமதை
மாசுடம் பேனமாய் மாகடல் மீட்டான் மணிவணனாம்
காசினி போற்றும் கடவுளை எண்ணக் களிமிகுமே!               ...6

மிகுந்த சினத்தொடு மேவி யவுணன்
உகிர்கொண் டுயிரீர்க்க வந்தான் - மகிழ்வொடு
மக்கள் புகழ வலியரியாய் வந்தவனைத்
தக்கவா றேத்தல் தகை!                                                                         ...7

தகைசால் சிறுவன் தனைக்காக்கச் சிங்கத் தலைமனித
வகையாய் ஒருதூண் வழித்தோன்றி யாங்கு மடிக்கிடத்தி
நகைத்தே அவுணன் நலிந்திடச் செய்தநம் நாரணனை
உகக்கும் உலகோர்க் குதவிடும் மாலினை ஓதுகவே!  ...8

ஓதும் குறளாய் உருவெடுத்து நானிலம்
மீதுமூன் றேயடி வேண்டிப்பின் - ஏதும்
இடமிலா தெங்கும் இரண்டடியால் மேவி
அடக்கினான் மாவலியை அன்று               ...9

அன்றொரு வாமன னாய்மா வலியிடம் ஆங்குவரம்
நன்றென மூன்றடி நானில மீதினில் நாடியபின்
நின்றனன் ஈரடி நீட்டி விசும்பொடு நீணிலமும்
வென்றனன் மாவலி மேற்றன் திருவடி மேவிடவே!  ....10

மேவு மிறையாம் வியன்றாய் உயிர்மீட்ட
தேவனாய் நன்கு திகழ்ந்திட்டான் - சீவும்
மழுவால் சிதைத்தான் மணிமுடி மன்னர்
தொழுவாய் அவனைத் துதித்து                                        ...11

துதித்திட்டுப் பெற்றோரின் தூவடி போற்றித் துலங்கியவன்
மதித்தநற் றந்தையை மாய்த்த வரசனை வாழ்வறுத்தே
எதிர்க்கும் பகைமன்னர் எல்லாம் மழுவால் இறக்கவைத்தான்
அதிர்கோ டரியுடை யானைத் தொழுவாய் அறிவுடனே!      ....12

அறிவுடன் அன்பும் அளவிலாப் பெற்றுச்
செறிவுடன் வந்து திகழ்ந்தான் - மறிகடல்
வண்ண னிராமன் வலியரக்கர் கோனிலங்கை
மன்னனைச் செற்றான் வலிந்து                                        ...13

வலிந்தடி சேர்ந்தாரை மன்னிக்கும் மாலன் மனந்துணிந்து
வலிதோள் இலங்கைக்கோன் மன்னன் இராவணன் மாயநின்றான்
நலிந்தவர்க் கென்றும் நலமே இழைத்திடும் நாரணனை
மலிபுகழ் கோசலை மைந்தனை வாழ்த்து மனமினிதே  ...14

இனிய இளவல் இலக்குமண னாயன்(று)
அணிசேர்த்த ஆதி சேடன் - மணிவண்ணன்
கண்ணனுக் கண்ணனாய் வந்தான் பலராமன்
என்னும் உருவில் இசைந்து                                                 ...15

இசையைக் குழலில் இழைத்துத் தெளிக்கும் இறையவனின்
நசையுடை அண்ணனாய் நந்தன் மகனாய் நயந்துதித்து
விசையொடு வீசும் கதைகொடு மல்லரை வேரறுக்கும்
கசடில் பலராமன் கண்ணனின் அண்ணன் கழல்துணையே    ....16

துணையெனச் சேடன் துலங்கப் புவியின்
துணையென வந்து சுரந்தான் - பனையன
தாட்கொண்ட வானை தனைக்கொம் பறுத்துநமை
ஆட்கொளும் கண்ணனை அண்டு              ...17

அண்ட முழுதும் அகன்றவா யுண்டவோ ராண்டவனைச்
சண்டையில் பாண்டவர் சார்பாகச் சாட்டை தரித்தவனைத்
துண்டமாய்த் தீயோரைத் தூள்தூளாக் கிட்டுத் துயரறுக்கும்
அண்டனைக் கண்ணனை ஆறெனக் கொள்ள அயர்விலையே!   ...18

அயர்வறுப்பான் தேவர் அரவணைப்பான் நாமம்
உயர்வுதரும் என்றே உரைப்பார் - மயர்வுறத்
தீயவரே எங்கும்  திரிந்திடுங் காற்பரியாய்
மாயவன் வந்திடுவான் பார்     ...19

பாரெலாம் தீமை பரந்தெங்கும் நல்லவர் பாடுபட
ஊரெலாம் ஒல்லார் உகந்து களிக்கூத்தில் ஒன்றிணையப்
பாரதில் நல்ல பரியேறி வந்து பரிமுகமாய்
பாரதைக் காக்கும் பகவனைக் கல்கியைப் பாடுவையே!   ...20

1 comment:

Anonymous said...

yellow eluththu colour not clear....please..
வேறு நிறத்தில் எழுத்தைப் போடவும் கண் நோகிறது...