பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Dec 2016

சிற்றிலக்கிய விளக்கம் 2





சிற்றிலக்கிய_விளக்கம் : 2


                "ஒருபா ஒரு பஃது "

                *******************
சிற்றிலக்கிய வகைகளில் சற்றே எளிமையானது இவ்வகையாகும். பாடுபொருளில் ஏதும் வரையறையில்லை. எப்பொருளைப் பற்றியேனும் பாடலாம்.

இதன் இலக்கணம்...
   *  ஆசிரியப்பா,  வெண்பா,  கலித்துறை ஆகிய மூன்றனுள் ஏதேனும் ஒரு பா பத்துப் பாடல்களைக் கொண்டது "ஒருபா ஒரு பஃது "ஆகும்.
   * பத்துப் பாடல்களும் ஈறுமுதலித் தொடையான் அமைதல் வேண்டும். (ஈறுமுதலி - அந்தாதி) 
* எந்தப் பாவைத் தேர்ந்தெடுக்கிறோமோ அந்தப் பாவின் இலக்கணங்கள் பொருந்தியிருக்க வேண்டும். 
* ஆசிரியப் பாவெனில் பெரும்பான்மை நேரிசையாசிரியப் பா, சிறுபான்மை நிலைமண்டில ஆசிரியப்பா என அமையும்.
* வெண்பாவாயின் நேரிசை வெண்பாவே அமைதல் வழக்கு.
* கலித்துறையாயின் கட்டளைக் கலித்துறை "வழங்குதல் பெரும்பான்மையாகும்.
* கடவுள் வாழ்த்து ஒரு பாடலும், இலக்கியம் பத்துமாகப் பதினொரு பாடல்கள் இருக்கும். 
* கடவுள் வாழ்த்து கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாது. அந்தாதியும் அமைய வேண்டியதில்லை. 
* ஈற்றுப் பாடலின் ஈற்றுச்சீர் முதற்பாடலின் முதலாகி நிற்பது (மண்டலித்தல்) "மண்டலவந்தாதியாகும் "
(ஆனால் கட்டாயமில்லை. என் இலக்கியத்தில் வந்துள்ளதைக் காண்க) 

இதன் இலக்கணத்தைக் கூறும் சில பாட்டியல் நூற்பாக்கள். . .

வெள்ளை யாதல் அகவ லாதல்
தள்ளா ஒருப தொருபா ஒருபஃது
(பன்னிரு.பாட்டியல்.229)

அகவல் வெண்பா கலித்துறை யாகிய
இவற்றி லொன்றினா லந்தாதித் தொடையாய்
ஒருபஃ துரைப்ப தொருபா வொருபது
(முத்து வீரியம் 1088)

ஓர்ந்தகவல் வெண்பா கலித்துறையென் றொன்றினால்
ஆர்ந்தவொரு பாவொருபது. . 
(வெண்பாப் பாட்டியல் :41)

ஒருபா ஒருபஃ துரைக்கி லகவல்
கலித்துறை வெண்பா கலந்துபத் தியம்பலே
(பிரபந்த தீபிகை 59)

*****     *****     *****     *****     *****
இதோ என் படையல். . .படித்துக் களித்துக் கருத்தைக் கூறவும்.

 மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

       ஒண்டமிழ் ஒருபா ஒருபஃது
       ****************************       
                (கடவுள் வாழ்த்து.)

வெள்ளைக் கமலத்து மெல்லியளே நற்றமிழ்த்
தெள்ளிய தோர்பனுவல் தேர்ந்துரைக்க - உள்ளத்தே
வந்தமர்வாய் வாணீ வரம்செய் கவிதைக்குள்
முந்தியருள் செய்வாய் முகிழ்த்து.
                                                              
                       ( நூல்)
முந்தைப் பழமொழியாம் மூப்பிலா முத்தமிழாம்
சிந்தை குளிர்விக்கும் தேமொழியாம் - விந்தையெனத்
தந்த பனுவல்கள் தந்தப் பனுவல்கள்
அந்தச் சிறப்பை யறி.           

அறிந்தாலு மில்லையென்பார் அந்தமிழின் சீரை
நெறியுணரத் தம்முள்ளம் நேரார் - செறிவுடை
நந்தமிழே வாழ்வில் நலம்விளைக்கும் என்றறிந்தும்
வந்தியார் நன்னெறியின் மாண்பு.

மாண்புயர்ந்த பன்மொழியுள் வண்டமிழே முன்னிற்கத்
தாணண்ணா வாழும் தமிழோரே - வீணென்பார்
நட்பையே நாடி நலங்கெடுவீர் நல்லினத்தின்
உட்பகையே யாவீர் உறைந்து!

 துய்ய மழலைவாய் தோற்றும் பிதற்றலிலும்
செய்யதோ ரின்பம் செவியேற்கும் - வெய்யக்
கொடுமொழியைச் சேர்ப்பீர் குலவுமொழி தீய்ப்பீர்
அடுசெயலால் தோன்றும் அழிவு!

அழியும் மொழிகளிலே அந்தமிழு முண்டாம்
மொழியிய லாளர் முணுப்பர் - செழிப்போடே
தோன்றுதமிழ்ப் பற்றுளரின் தோற்றத்தால் பாரிலெஞ்
ஞான்றும் வளரும் நனி!

நனிசிறப்பைப் பெற்றிலகு நல்லிலக்க ணத்தைத்
தனிச்சிறப்பை எம்மொழியும் தாங்கா - இனிக்கின்ற
சொற்பொருளுங் காட்டும் சுவையதற் கீடின்றி
நிற்காதே எம்மொழியும் நேர்பு!

புதுப்புதுச் சொற்கள் புலர்ந்திடத் தோதாய்ப்
புதுக்கிடும் நம்மினச் சீரைச் - செதுக்கிடும்
வாழ்வில்வளங் கூட்டும் வலையிலும் தேரோட்டும்
தாழ்விலா நந்தமிழ் தான்!

தானாய்ப் பிறந்ததுகாண் தன்னேரொன் றில்லாத
வானாய் உயர்ந்தநம் வண்டமிழின் - தேனான
நற்சிறப்பைப் போற்றுவதும் நாடெங்கும் ஏற்றுவதும்
கற்புடையோர் கொள்ளுங் கடன்!

கடன்பட்டோம் தாயின் கறைநீக்க நாளும்
உடன்பட்டே சேர்ந்திங் குழைப்போம் - உடன்படா
தோரை விலக்கித் தொலைத்திழி வையோட்டித்
தேராம் தமிழ்செலுத்தத் தேர்ந்து!

துப்பாகி வாழ்வின் துயர்நீக்கும் நந்தாயை
எப்போதும் உள்ளில் இருத்திடுவாய் - தப்பாமல்
வின்னப் படாமல் விழிப்போடு நந்தாயை
முன்னின்று காத்திடவே முந்து!
                          ★★★

No comments: