பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Dec 2015

11) பாய்புனல் பரந்தது
வணக்கம் பாவலர்களே...
இந்த வார ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத் தேன்றுளி.
12) பாய்புனல் பரந்தது.

மிகுந்த அழகுடன் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த செழுங்கழுநீர் மலர்கள் நிறைந்த அந்தக் குளம் குலுங்கிக் கொண்டு இருக்கையில் திடீரென வந்து அந்தக் குளத்தின் நீர் மட்டம் உயரும் அளவிற்கு செய்துவிட்டது இந்த வெள்ளம் என்று ஒரு புறம் பேசிக் கொண்டிருந்தனர்.
அழகிய பெண்கள் மணல் மேடுகளில் எழுப்பி வைத்திருந்த பாவை பொம்மைகளைப் பாழாக்கி விட்டதே இந்த வெள்ளம் என்று ஒரு புறம் அழுது கொண்டிருந்தனர். ஒரு புறம் துடிப்பறையினைக் கொட்டி ஊரெங்கும் வயலில் உள்ள இளமையான பயிர்களையும் நெற்போர்களையும் வெள்ளம் வந்தடித்து பரப்பி விட்டதெனச் செய்தி முழங்கிக் கொண்டிருந்தனர்.
வெள்ளம் ஊரைச் சுற்றிக் கொண்டது என்றும் வானத்தில் ஓட்டை விழுந்துவிட்டது என்றும் ஒரு புறம் புலம்பிக் கொண்டிருந்தனர். பாடுகின்ற பாணர்களது இல்லங்களும் ஆடுகின்ற ஆடற்கூத்தியரின் சேரிகளும் வெள்ளத்தால் நிரம்பியதே என்று அங்கலாயித்துக் கொண்டிருந்தனர்.
வெள்ளம் நெற் பயிர்கள் விளையும் வயலுக்குள் கால் முழுகும் அளவிற்கு நீரைப் பரப்பி வைத்ததில் வரப்பில் இருந்த வாளை மீன்கள் எல்லாம் பனையளவு உயரமிருந்த பாளைகளை உண்டுவிட்டன என்றொரு புறம் பேசிக் கொண்டிருந்தனர்.
எத்துணை வேண்டிக் கேட்டும் ஊடல் சினத்தைத் தணிக்காதவரான மெல்லியல் பெண்களைக் கூடிடவே வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆடவர்கள் ஆசைப் பெருக்கில் அலைவது போலவே அந்த வெள்ளமும் கட்டுகள் உடைத்திடும் தன்மையதாய்ப் பெருகி வந்துகொண்டிருந்தது.
அப்படிப் பாய்ந்து வந்த அந்த வெள்ளத்தை வயலில் உழுகின்ற உழவர் எப்படியாவது அடக்கிவிட வேண்டுமென கழனிகளில் பரந்து வயிற்றில் கரு வளர்த்துக்கொண்டிருக்கும் வாளை மீன்களைப் போன்று பரந்து தடுத்து நின்றனர்.
தற்பொழுது நீரே கண்ணுக்குத் தென்படாத மதுரை நகரத்து நதி மங்கையான வைகையில் இந்த அளவுக்கு வெள்ளம் வந்திருக்கிறது என்று கொஞ்சம் பெரிய தேன் துளியையே சிந்தியுள்ளது பரிபாடல். இதோ பாடல்
பாடல் :
கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர்
அவிழ்ந்த மலர் மீதுற்றென, ஒருசார்;
மாதர் மடநல்லார், மணலின் எழுதிய
பாவை சிதைத்தது' என அழ, ஒருசார்;
'அகவயல் இள நெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெனத் துடி பட, ஒருசார்;
'ஓதம் சுற்றியது ஊர்' என, ஒருசார்;
'கார் தூம்பு அற்றது வான்' என, ஒருசார்;
'பாடுவார் பாக்கம் கொண்டென,
ஆடுவார் சேரி அடைந்தென,
கழனி வந்து கால் கோத்தென,
பழன வாளை பாளை உண்டென,
வித்து இடு புலம் மேடு ஆயிற்றென,
உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப்
புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து,
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ,
பழன உழவர், பாய் புனல் பரத்தந்து, !

பாடியவர் :: மையோடக் கோவனார்
இசையமைத்தவர் :: பித்தாமத்தர்
பண் :: பாலையாழ்

No comments: