பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

19 Dec 2015

பாட்டியற்றுக - 16


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளில் ஒன்றான பாட்டியற்றுக பகுதி 16 இல் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இயலாதவர்கள் சுவைக்கவும், மற்ற நண்பர்களுக்குப் பகிரவும் கேட்டுக் கொள்கிறேன்.
பாட்டியற்றுக : 16
(தரவு கொச்சகக் கலிப்பா)

பண்டையநாள் இலங்கெழிலின் 
பரவுபுகழ் குறையாமல்
தண்ணிழலாய்த் தமிழோரின் 
தனிப்பெருமை யுயர்த்திட்டாய்
ஒண்டமிழே நறுந்தமிழே 
உயர்மொழியுன் தனித்துவத்தை
விண்டுரைக்க வொருமொழியும் 
மேதினியில் இலையாமே! 
(இது தரவு) 
அதனால், (இது தனிச்சொல்) 
தமிழன் என்பதில் தனிச்செருக் கடைந்தோம்
இமிழ்கடல் உளவரை போற்றி
அமிழ்தே உனையாம் அகத்தேத் துவமே!
(இது நேரிசை ஆசிரியச் சுரிதகம்)
*பாவலர் மா.வரதராசன்*
கருத்தூன்றுக
***************
கலிப்பா நான்கு வகையாகும். அவை ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சகக் கலிப்பா, கட்டளைக் கலிப்பா, வெண்கலிப்பா என்பன.
இப்பாடல் கலிப்பாவின் வகையான "கொச்சகக் கலிப்பா " ஆகும்.
கொச்சகம் என்பது கொச்சை (சிறப்பிழந்த) என்று பொருள்படும். ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்புகளுள் சில பெற்றும், கூடியும், மயங்கியும், பிறழ்ந்தும், உறழ்ந்தும் வருவதால் கொச்சகக் கலிப்பா எனப்பெற்றது.
கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை,
தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃற்றாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃற்றாழிசைக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.
நாம் பயிற்சிக்கு எடுத்துக் கொண்டது "தரவு கொச்சகக் கலிப்பா " ஆகும்.
பொது இலக்கணம்
*********************
★ நான்கடி கொண்டதாய்,
★ நான்கடிகளும் ஒரே எதுகையைக்
பெற்று, 
★ அடிதோறும் பொழிப்பு மோனை
பெற்று,
★ தரவோடு இணைந்த பொருள் 
கொண்ட "தனிச்சொல்" பெற்று,
ஆசிரியச் சுரிதகத்தைப் பெற்று 
(வெண்பா சுரிதகமும் வரலாம். 
ஆனால் பயிற்சியில் ஆசிரியச் 
சுரிதகமே கொள்க)
★கலித்தளையைப் பெற்று 
(காய்முன்நிரை) 
நேரீற்றுக் காய்ச்சீர் ஒன்றிரண்டு
வரலாம். கலித்தளையான் 
வருவது துள்ளலோசையுடன் 
சிறக்கும்.
★ஆசிரியச் சுரிதகம் ஆசிரியப் 
பாவின் இலக்கணம் பெற்றும்,
வருவது "தரவு கொச்சகக் 
கலிப்பா " எனப்படும்.
குறிப்பு:- 
இவ்வகையைத் தற்காலத்தில் தனிச்சொல், சுரிதகம் இல்லாமலும் எழுதுகிறார்கள். கொச்சை என்பதே இதன் பெயர்க்காரணம் என்பதால் அவ்வாறு எழுதுவதும் தவறில்லை.
ஆனால் மரபைக் காப்பதும், பரப்புவதுமே பைந்தமிழ்ச் சோலையின் நோக்கம் என்பதால் பயிற்சியில் உள்ள முறையில் எழுதி மரபைக் காப்போமே!
கவிஞர்களே! இவ்வகையான இலக்கணங்கள் அமையப் பெற்ற "தரவு கொச்சகக் கலிப்பா " ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள், இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள். (தரவு,தனிச்சொல், சுரிதகம் என்று அடியில் பெயர் எழுத வேண்டியதில்லை. பயிற்சிக்காக வேண்டிச் சான்று பாடலில் குறிக்கப்பட்டது) 

அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே எழுதவும். பயிற்சிக்கு நேரமொதுக்க அது உதவியாக இருக்கும்.

★★★

No comments: