பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

1 Dec 2015

8) கனாக் கண்டேன்வணக்கம் தமிழுறவுகளே
இதோ இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாரத்துத் துளி
9) கனாக் கண்டேன்
"கோட்டை மதில்களை முட்டித் தகர்க்க வல்லதுவாய், இரு பெரிய தந்தங்களைக் கொண்டனவாய், களமாடி வீடு புகுந்து இருக்கும் வைக்கோல் போரினை ஒத்தனவாய் காட்சி தந்தன அங்கு வந்த ஆயிரம் யானைகளும். அந்த யானைகள் ஆயிரமும் சூழ்ந்து என்னை வலம் வந்தன. சூரியனைச் சுற்றும் கோள்களைப் போன்று, தண்ணீரில் கல்லெறிந்தால் உருவாகும் சுழலினைப் போன்று, மலரினை ரீங்காரமிடும் தேனீக்கள் சுற்றுவது போன்று அந்த ஆயிரம் யானைகளும் என்னைச் சுற்றிச் சுழன்று சூழ்ந்து வலம் வந்தன.

அவற்றிற்கெல்லாம் மத்தியில் நான் விரும்பும் அந்த ஆசைக் காதலன் வந்தான். அந்த காதலனானவன் எனக்கு எதிரே ஒளி பொருந்திய கண்களில் என்னை வீழ்த்தும் காந்தம் பொருந்திய கண்களில் காதல் ரசனை ததும்பத் ததும்ப எதிர் நோக்கி என்னை வீழ்த்த வருகை தந்துகொண்டே இருந்தான். அவன் அவ்வாறு நடந்து வந்துகொண்டே இருந்தான்.

இவ்வாறு இவன் ஒருபுறம் என்னை வீழ்த்த வருகையில் மறுபுறமோ அவன் வருகைக்காக, அவனோடு எனக்கு நடக்க இருக்கும் வதுவைக்காக பொன்னால் ஆன குடங்கள் நிறைய அடிக்கு வைத்து அழகு மிகுந்த குடில்களாய்த் தமது இல்லங்களை அலங்கரித்துக் கொண்டே இருந்தனர் ஊர் மக்கள். அந்த புறமெங்கும் பொற்குடம் விட்டு அடுக்கி இருந்த அழகானது கண்களைக் கவரும் வண்ணம், மனதினை ஒரு நிமிடம் சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

அப்படி அவர்கள் அடுக்கிய பொற்குடங்கள் நிறைந்த இல்ல வாயில்கள் எங்கும் பூந்தோரணம் கட்டிப் பூஞ்சொலையினை ஒத்த எழிலாய் அமைந்திருந்தன அவர்களது வீட்டி வாயில்கள். இப்படியொரு தோரணப் பந்தலின் கீழ் என் காதலனான கண்ணன் என்றன் எழில்கரம் பிடித்து என்னை மணப்பதாக நான் கனாக் கண்டேனடி தோழியே ! சூடிக் கொடுத்த ஆண்டாளான நான் நேற்றிரவு இப்படியொரு கனவினைக் கண்டு உள்ளம் முழுதும் களி கொண்டு ஆனந்த நிலையினை அடைந்தேனடி தோழியே"
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி சிந்திய கனவுத் தேன்றுளி, இதுவே இவாரத்துத் தேன்துளி. நாமனைவரும் அறிந்த பாடலே என்றாலும் இதில் ஆண்டாள் பயன்படுத்தியுள்ள நயங்கள் உற்று நோக்கின் உள்ளம் உவப்பது.
பாடல் :
வாரணம் ஆயிரம் சூழவலம் செய்து 
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் 
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் 
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான் !
-ஆண்டாள் !

No comments: