பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

1 Dec 2015

பாட்டியற்றுக - 15


நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 15" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***

பாட்டியற்றுக - 15
கலிவிருத்தம்
********-*-****
கவிதை யென்பது கற்பனை சேர்ப்பதும்
தவிப்ப தேயிலாத் தாய்மொழி யாக்கலில்
அவிழும் பூமணம் ஐம்புலன் சேர்வதாய்க்
குவிக்க வேண்டுமே கொள்கையொ டின்பமே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***

கருத்தூன்றுக.:
மேற்கண்ட பாடல் "கலிவிருத்தம் " ஆகும். பலவகை சீர் அமைப்புகளில் வருமவற்றுள் இது ஒருவகை.
கம்பர் தன் காப்பியத்தைத் தொடங்கியதும், மிக அதிக(4000 க்கும் மேல்) எண்ணிக்கையில் பாடியதுமான பாவகை இது .
மிக எளிய வகையான இதைக் கொடுப்பதால், நாளைக்கு "முயன்று பார்க்கலாம் : 2 " வெளியாகும்.
பொது இலக்கணம்.
*ஓரடிக்கு நான்கு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,
* அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்றும்,
* அடிதோறும் புளிமா, கூவிளம், கூவிளம், கூவிளம் என்ற சீர் வாய்ப்பாட்டைப் பெற்றும்,
(புளிமா எனக் குறிப்பிட்ட இடத்தில் குறில், குறிலொற்றையும் ஈற்றில் கொண்ட புளிமாச் சீரே வரல்வேண்டும். நெடில், நெடிலொற்றை ஈற்றில் கொண்ட புளிமா வரலாகாது.)
* ஈற்றுச்சீர் ஏகாரம் பெற்றும், பெறாமலும்,
வருவது "கலிவிருத்தம் " எனப்படும்.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: