பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

18 Dec 2015

முயன்று பார்க்கலாம் : 2 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே ! 

முயன்று பார்க்கலாம் : 2 இன் தொகுப்பு அப்பயிற்சியில் முயன்ற கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்பெறுகிறது. மிகக் கடினமான இப்பா வகையைப் பலரும் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன்.

முயன்று வெற்றி யடைய இயலாதவர்கள் மனந்தளர வேண்டா. உங்கள் முயற்சியே சிறந்த பயிற்சியாகும்.அரிதான ஒரு யாப்பைக் கற்பித்த நிறைவுடன் இத்தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தொகுப்பைப் படித்துப் பார்த்துச் சுவையுங்கள். கவிஞர்களை வாழ்த்துங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்

முயன்று பார்க்கலாம் : 2


(முன்முடுகு வெண்பா)

1. கவிஞர் அர.விவேகானந்தன்
மெத்தப்ப டித்துப்பு துச்சித்த மொக்கப்பு
துத்தெப்ப மிட்டுக்க டத்திட்ட-வித்தொப்ப
வாழும் மனிதரை வாயாராப் போற்றிடுவோம்
சூழும் துயர்களை வோம்! 

2. கவிஞர் பசுபதி
ஏழையெளி யோரைமுதி யோரைமிகு நோ(ய்)களொடு
வாழவழி யேதுமறி யாதவரை-தோழமையொ
டன்புடனே தேற்றி யரவனைத்தல் நன்றாமே 
பண்புடைய செய்கையது தான்!

3. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
நன்றெண்ணி முந்துந்தி வந்தெம்மை உந்துஞ்சொ
லென்றொன்று தந்தெம்மை என்றென்றும் - முன்னின்று
வெல்கின்ற தன்மை கொளவைக்கும் பாவலரே
சொல்கின்றோம் நன்றி உமக்கு!

4. கவிஞர் இளம்பரிதியன்
மெட்டொட்டி முற்பெற்ற முற்றற்ற நற்பொற்பு
முட்டிட்ட மொட்டிட்ட முற்றிட்ட உட்புக்க
நெஞ்சத்து சொற்கொட்ட நிற்கா மழையாய்
நிறைந்தது செந்தமிழால் நெஞ்சு!

5. கவிஞர் வள்ளிமுத்து
சத்தத்தை முத்தத்தி லிட்டுப்பி டித்துக்க
டித்திட்ட யுத்தத்தை மெத்தப்ப-டித்திட்ட
பெண்ணிலவாய் என்னுள்ளே போதைகொள முன்னின்றே
வெண்ணிலவாய் வீசுகிறாள் இன்று! 

6. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
கற்றிற்ற பெற்றிற்ற மற்றற்ற வெற்றிக்கு
நற்கற்று வற்றற்ற முற்றிற்ற -- இற்றைக்கு 
வெற்றியும் கல்வியில் வென்றிட நாளும்நாம் 
பெற்றிடும் பூமியில் பேறு!

7. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
நானுமுனை நாளுமொரு பாடலது பாடிமன
வானுமது வாழுமொரு தோழியென - வானுமுறை
வெண்ணிலவு தானுமொரு வெஞ்சினமுங் கொள்ளுமிங்கு
தண்ணிலவே கோபம் தவிர்!

8. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
கற்றதில் பெற்றதில் உற்றதும் எத்தனை 
பற்றதை அற்றதும் எத்தனை -முற்றிலும் 
கோபமே மோகமே காமமே போகுமேல் 
பாபமே தீருமே பார்!

9. கவிஞர் பரமநாதன் கணேசு
தப்புக்க ளப்பப்ப விட்டிட்ட இக்கட்டி
லப்பப்ப வெட்கத்தி லுட்பட்ட - ஒப்பற்ற
எண்ணத்தை ஈவாய் இறையே எனவேண்டி
மண்ணில் கிடந்தேன் மகிழ்ந்து!

10. கவிஞர் சுதர்சனா
சித்தத்தை எட்டிப்பி டித்துத்த டுத்திட்டு
முத்தொத்த முக்திக்கு முற்றற்ற - வித்திட்ட
முக்தர்கள் பாதை முடிவென்று சேர்ந்தோரை
எக்காலும் போற்று முலகு!

11. கவிஞர் சுந்தரராசன்
செந்தமி ழென்பது நம்திரு வென்றிரு!
முந்திடு விம்மொழி, நம்மொழி! நந்தமி
ழென்றுசொலும் போழ்துவரு மோர்பெருமைக் கீடாக
மன்பதையில் மாற்றுண்டோ கூறு!

12. கவிஞர்தமிழகழ்வன்சுப்பிரமணி
அக்கத்துப் பக்கத்துச் சிக்கித்தத் தித்தத்தித்
திக்கித்தச் சத்துத்திக் குத்திக்குத் - துக்கித்தித்
தண்ணீர் தனில்யாவும் தானிழந்து செல்கின்றார்
கண்ணீ ரொடுங்கொடுமை காண்!

13. கவிஞர் வீ.சீராளன்
முத்தத்தி னுட்பட்டு வெட்கித்த வித்திட்ட 
மத்தக்கு ளக்கட்டை வெட்டிக்க - லைத்திட்டு 
நின்றாள் அருகே நினைவால் உயிரணைக்கும் 
என்றாய் இயல்பை எடுத்து !

14. கவிஞர் நாகினி கருப்பசாமி
பாகமது தேடிமனை பாரதிர ஊனமுற
மோகமதி லாடிமன மோயிளைய - தாகவிலை
சாகரத்தின் போகமெனச் சார்ந்திருக்கும் சொத்தெனும்
வாகனத்தின் மேலேறி வாழ்!

15. கவிஞர் குருநாதன் ரமணி
திக்கித்து விக்கித்து முக்கட்டு முட்டத்த
டுக்கிப்பொ ருட்சொற்க ருத்துச்செ - றிக்கப்பொ
றுக்கிநான் செய்தபாச றுக்குதோ வில்லையோ
விக்கின முண்டோசொல் வீர்!

16. கவிஞர் சியாமளா ராஜசேகர்
கந்தனின் பொன்னுளங் கண்டதும் பொங்கிடும் 
சுந்தரன் மந்திரஞ் சொன்னதும் -சந்ததம் 
மங்களந் தந்திடும் மன்னவன் மென்பதம் 
தங்கிடும் நெஞ்சந் தணிந்து .

17. கவிஞர் அழகர் சண்முகம்
எத்தரைவி ரட்டிவிட எட்டடியெ டுத்துநட
முத்திரைப தித்துயர முட்டியெழு-வித்துடைய
விட்டதைத் தொட்டிட விட்டத்தை நோக்காதே
பட்டத்தை மீட்கப் படி!

18. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
ஞானசிவன் வானமதில் வீதிவலம் காணுகையில்
தானவரின் நாயகியின் தேவியுடன் கூடவரும்
காட்சியினைக் காணுகிற மாமுனிவர் போற்றுகிற
மாட்சிமையைப் போற்றுவதைப் பார்!
★★★

2 comments:

சீராளன் said...

வணக்கம் பாவலரே !

மிக நல்ல முயற்சி கவிஞர்களுக்கும் சிறந்த பயிற்சி
பங்குபற்றிய அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

பெசொவி said...

பாவலருக்கும் கவிஞர்பெருமக்களுக்கும் வணக்கங்கள். முயன்றுபார்க்கலாம் – 2ன் தொகுப்பு படித்தபின் என்னுடைய வழக்கப்படி அந்தத் தொகுப்பிற்குப் பாமாலை முன்முடுகு வெண்பாக்களாகப் பதிவதில் மகிழ்கிறேன்.
குறிப்பு 1 : முதல் பாடலில் மட்டும் இரு கருத்துகளையும் முதலில் கொடுத்துவிட்டுக் கவிஞர்களின் பெயர்களை அடுத்த அடிகளில் கொடுத்துள்ளேன். நிரல்நிறைப் பொருள்கோளாகக் கொள்க.
குறிப்பு 2 : மற்ற பாடல்களில் ஒரு கவிஞரின் பாடலின் கருத்து மட்டுமே முன்முடுகுடன் வரும், பின்னவரின் கருத்தும் பெயரும் கடைசி இரண்டு அடிகளில் வரும்.
கருத்துகளை இறைஞ்சுகிறேன்.
முன்முடுகு வெண்பா:
படிப்பே சிறப்பா மெனப்பா வடித்தே
முடித்தா ரிரப்பா ரிடத்தே - கொடுப்பா
ரவரைப் புகழ்ந்தா ரரவிவேகா னந்தும்
கவிஞர் பசுபதி யும்
பாவியற்ற ஓதுவிக்கு மாவலுற்ற நாயகற்கு
நாவசைத்து மேடைகட்டி மாலைகட்டி – மேவலுற்ற
வெங்கடேசன் பின்னே இளம்பரிதி யாரவர்
இங்குரைத்தார் நற்றமிழ் நெஞ்சு.
பெண்ணூட லின்றேகு மொன்றோதி நின்றாடு
பண்ணோடு வந்தாரு மண்ணோடு - விண்ணாள
வள்ளிமுத்து கல்வியால் வெல்லச் சரஸ்வதி
மெள்ளவே சொன்னார் கவி.
வெண்ணிலவே தண்ணிலவா மென்றுடனே நின்றிடவே
பண்ணிசையே தந்திடுவா ரெம்மிடையே – கண்ணெனவே
நிற்கும் அரவிந்தும் காளிதாசோ பாவம்போம்
பற்றுவிட என்றுரைப் பார்.
தப்பேது மெக்காலு மொப்பாத நச்சாத
அப்பாவி யொப்பாக வுற்றேக – இப்பாரி(ன்)
நாதனைப் பாடும் கணேசுடன் முக்தரின்
பாதம் பணிசுதர்ச னா.
நந்தமி ழந்தமி ழென்றுபு கன்றிட
வந்திடு பொங்கிள நங்கவி – சுந்தர
ராச னவர்பின்னே வெள்ளக் கொடுமையைப்
பேசும் தமிழகழ்வ னார்.
தாயென வேவரு மோருயி ராமதை
வாயுரை மேவிட யேகிடு – சேயென
வந்தாரே வீசீரா ளன்மோகந் தன்னையே
நொந்தாரே நாகினி யார்
முன்முடுகு வந்தவித மொன்றுசொலி நம்மிடமு
யன்றவழி நன்றுமது சிந்தனையு - மென்றுசொல
வேண்டும் ரமணியின் பின்வந்தார் கந்தனை
வேண்டும் சியாமளா வே
கற்பத னற்புத மத்துனை செப்பிட
முற்படு நற்றமி ழற்புத – நற்கவி
யாமழகர் சண்முகம் பின்னே சிவனையெண்ணி
னோமே இராகியிரா வால்.
Like