பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

6 Dec 2015

பாட்டியற்றுக 15 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! கவிஞர்களே!
அறிஞர் பலரும் போற்றும் பைந்தமிழ்ச் சோலையின் பாட்டியற்றுக பயிற்சியின் 15 ஆவது பகுதி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய காரணத்தால் தொகுப்பை வெள்ளிக்கிழமை வெளியிட முடியவில்லை. வருந்துகிறேன்...
தொகுப்பைப் படித்து, மற்றவர்க்கும் பகிர்ந்து, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
பாட்டை எழுதிய கவிஞரை வாழ்த்தினால் அது அவர்களை ஊக்கும்.
நன்றி!
தமிழன்புடன்
பாவலர் மா.வரதராசன்


பாட்டியற்றுக 15
கலிவிருத்தம்
****************
1. கவிஞர் வள்ளிமுத்து
கடலில் தோன்றியே கார்மழைத் தந்திடும்
படகில் செல்பவர் பாதையை நீக்கிடும்
திடலில் நின்றிடும் தென்னையை ஆட்டிடும்
உடலில் ஊரினில் தண்மையும் தந்திடும்!

2. கவிஞர் இளம்பரிதியன்
உடலை மெய்யென ஊனினைப் போற்றுவார்
கடலில் மண்ணினால் கட்டடம் கட்டுவார்
குடத்தின் சோதியைக் கொஞ்சமும் உன்னிடார்
நடலை போக்கிடு நாதனைத் தேடிடார்!

3. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
எடுத்த வாழ்வெலாம் எத்தனை யாயினும்
அடுத்த வாழ்வினை ஆசையால் வேண்டுவேன்!
கொடுத்த வாழ்விதன் கோளது நீயெனில் 
விடுக்க வாழ்வினை வேண்டிலேன் ஈசனே!!

4. கவிஞர் அர.விவேகானந்தன்
வருத்து மின்னலால் வாழையாம் சேய்தனை
வருத்தி வேலையில் வாட்டியே தள்ளினால்
சுருங்கு முள்ளமே சூழ்ந்திடும் துன்பமே!
திருந்திக் கல்வியைத் தேடினா லின்பமே!!

5. கவிஞர் கணேசன் ராமசாமி
கடமை செய்திடு காரியம் வெல்லவே
கடந்து சென்றிடு கால்தடை நீக்கியே
கடவுள் என்றதும் கண்ணனை எண்ணுவர்
கடவுள் வாழ்கிறார் கள்ளமில் உள்ளமே!

6. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
முயற்சி யென்பது முற்றிலும் நம்முடை 
அயற்சி யின்றியே ஆர்வமும் சேர்வதாம் 
பயிற்சி பெற்றிடின் பண்புடை வாழ்வினை 
உயிர்க்க வைக்கலா முன்னத நாட்டிலே!

7. கவிஞர் வெங்கடேசன்சீனிவாச கோபாலன்
நதியின் நீரிலே நன்முறை நீந்துமோர்
கதியைக் கண்டபின் கவ்வுமோ அச்சமும் 
மதியைக் கொண்டுதான் வாழ்ந்திடும் கற்றவர் 
விதியை எண்ணியே வெம்புவ தில்லையே!

8. கவிஞர் பரமநாதன் கணேசு
படரப் பேரெழில் பைந்தமிழ்ச் சோலையில்
நடந்து வந்தனள் நற்றமிழ் நங்கையாள்
தடவித் தேன்சுவைச் சாற்றினைச் சொற்களில்
நடனம் செய்தனள் நாம்மகிழ் வாடவே!

9. கவிஞர் வீ.சீராளன்
பொறுமை கொண்டவர் புத்துல கெங்கிலும் 
திறமை குன்றியுந் திண்மையு ளோங்குவார் 
வறுமை சேரினும் வாய்மையின் தூய்மையால்
சிறுமை என்பதைச் சீக்கிரம் போக்குமே

10. கவிஞர் சேலம் பாலன்
இனிய தாகவே இன்னுரை பேசுவோர் 
கனிய தாகவே காப்பவர் என்றெனில்
நனிய தாகவே நல்லவர் என்பரும்
தனித்துக் கூறுவர் தானிலை நேரமே !

11. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
கவிதை என்பதைக் கற்றிட வேண்டிடின்
உவகை கொள்ளவே உற்றவோர் பக்கமாம்
தவற்றைச் சுட்டியே தாய்மொழிச் செய்யுளை
எவரும் யாத்திட இத்தமிழ்ச் சோலையே!

12. கவிஞர் அழகர் சண்முகம்
உழுது காத்ததால் ஓங்கிய நெற்கதிர்
விழுந்த மாரியால் வீணிலே சாய்ந்திட
ஒழுகும் வீட்டினில் ஓய்ந்திடா இன்னலால்
அழுத கண்களால் ஆறது நீண்டதே!

13. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
புவியில் யாருமே புக்கசன் இல்லையே
குவியும் இன்னலால் குற்றமும் தோன்றுதே
தவிக்கும் மக்களின் தண்டனை நீங்கவும்
கவிதை கொண்டுநாம் காத்திட வேண்டுமே!

14. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
மலையு மேவியே மந்திர மானவன்
நிலையு மாகியென் நெஞ்சினில் நிற்கவே
அலையு மென்மனம் ஆழ்ந்திடும் மோனமும்
தலையு மக்கழல் தன்னிலே வைப்பனே!

15. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
கனியும் காய்விலை வாசியு மேறியே 
இனியு மில்லையோ ஏழைகட் கென்றுமே 
நினையும் வண்ணமே நீளுமா றாகுமேல் 
தினமும் வாழ்வதே தீயெனக் காயுமே!

16. கவிஞர் பசுபதி
இனிக்கும் செந்தமி ழென்னுளே யில்லையேல்
தனித்து வாழுமோர் தாழ்நிலை நேருமே
பிணியில் சிக்கிநான் பேதலித் துய்யினும்
கனியும் நற்றமிழ்க் காப்பென வானதே!

17. கவிஞர் பாலசுப்பிரமணியம் முனுசாமி
அழக தென்பதோ அற்புத மானது 
விழிகள் மின்னிட விற்பது தீதது 
பழிகள் சேர்ந்திடும் பண்பது கெட்டிடும் 
அழிவைத் தந்திடும் அன்பரே ஊன்றுக!

18. கவிஞர் விவேக் பாரதி
அழகி லாயிரம் ஆணையை யொத்தவள்
பழகும் பாங்கிலோ பச்சிளஞ் சேயவள்
மெழுகி லாக்கிய மேனியைக் கொண்டவள்
பழர சத்திதழ் பாவையின் பேரெழில் !

19. கவிஞர் நாகினி கருப்பசாமி
விருத்தி யாகவும் வீரமும் வேண்டிடும்
கருத்து தந்தது காற்றெனப் போக்கிடில்
வருத்த மேயென வாதிட உன்னத
இருப்புச் சொல்லிய இன்னமு தூற்றதே!

20. கவிஞர் இராச.கிருட்டினன்
அகத்தில் ஆணவம் ஆழ்ந்தகன் றூறிட
முகத்தில் புன்னகை மோகனம் மேவிடப்
புகழைப் பெற்றிடப் பொய்முகம் காட்டுவோர் 
சகத்தில் வெல்வதைத் தாங்குவ தெங்ஙனம்?

21. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
இயன்ற வாரெலாம் ஈகையே மேலெனத்
துயரி லாழ்ந்தவர் துன்பமே போக்குதல்
பயக்கும் நன்மைகள் பற்பல தோழரே 
துயர்து டைப்பதைத் தொண்டெனக் கொள்கவே!

22. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
அரும்பு தொட்டுளம் ஆவியின் மேலதாய்ப்
பெரும்பொ றுப்பொடு பேணிவ ளர்த்திடுங்
கரும்பு கற்பகக் காவென நிற்பவள்
அருந்த வத்தவள் ஆருயிர் அன்னையே!

23. கவிஞர் சுந்தரராசன்
அறியும் ஆவலால் அர்ச்சுனன் கேட்கவும்!
அறியும் ஆவலை அச்சுதன் மெச்சியே!
அறியத் தந்தனன் அர்த்தமுள் கீதையை!
அறிந்து மானுடம் அர்த்தமாய் வாழவே!
★★★★★

No comments: