பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

19 Dec 2015

பாட்டியற்றுக : 16 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! கவிஞர்களே! பாட்டியற்றுக : 16 இன் தொகுப்பு அப்பாடல்களை இயற்றிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.கவிஞர்களை வாழ்த்துங்கள். கவிதைகளைப் படியுங்கள். நண்பர்களுக்குப் பகிருங்கள்.
பாட்டியற்றுக : 16
தரவு கொச்சகக் கலிப்பா


1. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
இரவுகளின் பொழுதுகளில் இனியவளின் நினைவுகளில்
வரவினையும் எதிர்பார்த்து வசந்தமதை வழிபார்த்துக்
கருத்தினிலே கவியெழுதிக் களிப்பினிலே மனம்நிறைந்து
இருக்கின்றேன் அவளின்னும் எனைக்காண வரவிலையே!
என்னவள்...
எனக்காய்ப் பிறந்தவள் என்றுவ ருவாளோ
கனத்தம னத்திலே கவலைகள் கூடுதே
இனிய வளுக்காய் இசைத்துப் பாடவோ
பனித்த கண்களும் பாவையைத் தேடுதே!
★ 
2. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
அன்னையெனப் பெரும்புலவர்
அனைவருமே புகழ்ந்திடுவர்
பொன்னெனவே மதித்திட்டே
புவியினிலே வழுத்திடுவர்
இன்னமுதத் தமிழ்க்கண்ணை
இமைபோலே காத்திடுவர் 
தன்னுயிரைக் கொடுத்தேனும்
தரணியிலே தமிழ்காப்பர்.!
இந்நிலையில்
மரபினை அழித்து மாண்பினை மறந்து
தரமிலாச் சொற்களால் தாழ்ந்த அறிவொடு
தருஞ்சில ஈனரைத் தரணியும் தாங்குதே,
உரக்கச் சொல்லுவேன் உண்மையில் அவர்தாம்
மரபுணர் கவியல மரத்துள கவியே!

3. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
மண்ணிலுள்ள உயிர்களிடம் மனிதநேயம் பதித்திடுவோம் .
கண்ணிலுள்ள கனிவையெல்லாம் கணப்பொழுதும் மறந்திடாது 
பெண்மையினைக் கருத்தோங்கப் பெறுவதற்குப் பொறுத்தருளப் 
பண்களெல்லாம் பலவனைந்து பரிந்தோம்பி வணங்கிடுவோம்! 
அதனால் 
மனிதம் காத்திட மனிதர் வாழ்வராம் 
புனிதம் பெண்மையைப் புரிந்துக் காத்தலும் 
கனிந்து நோக்கிக் கண்போல் பேணிட 
இனிதாய்ப் பண்களை இருளை மாற்றிட 
வனைவோ மென்றும் வந்திடும் 
மனித நேயம் மண்ணில் வாழ்க !

4. கவிஞர் இரா.கி.இராஜேந்திரன்
பருவமங்கை உருவமதில் பழச்சுவையும் உடற்கட்டும்
பெருமையோடு வருமருகில் பிரவாகம் உடலுணர்வில்
குருதியெழ இதழ்விரிந்து குமாரத்தி இதழ்பிடித்துப்
பருவசுகம் அதையடக்கிப் பழகிடவே அருள்புரிவாய்
எனவே
தலைவா அய்யா தரும துரையே
முலையம் மார்பக முடனே கருப்புச்
சிலையும் கொண்ட சூலாள் அருளில்
மலையைப் போன்ற மனதைக் காக்கவே!

5. கவிஞர் கணேசன் ராமசாமி
நிலவில்கால் பதித்தோம்நாம் நினைவாய்க்கோள் நிறுத்தியுள்ளோம்
உலகில்நாம் உரியவிடம் உயர்வாக அடைந்திட்டோம்
பலகோடி செலவிட்டே பவளநிறச் செவ்வாய்க்கும்
உலகுமெச்சத் தனிப்பாதை உருப்படியாய்க் கணக்கிட்டோம்
ஆனால்
இயற்கைச் சீற்றம் இயல்பாய் எதிர்கொள
உயரிய வழிகள் உளவா நாட்டில் 
வியந்து கேட்கிறேன் விளைந்த இன்னலால்!

6. கவிஞர் பரமநாதன் கணேசு
கோடிதுயர் மனக்கூட்டில் குடிகொண்ட மனிதரினைத்
தேடிவந்து கரம்பற்றும் 
திறனற்றுக் கிடப்போரே!
நாடிதிலே அழகுறவே
நடைபோட்டு நடிக்கின்றீர்
சூடிப்பு களனைத்தும்
சுகிக்கின்றீர் தினமிங்கே!
அதனால்,
அளப்பெரும் பணிதனை ஆற்றிட எழுவீர்
வளம்பல சேர்க்க வறுமையை வீழ்த்த
உளத்தினைப் பண்புற உழுதே
களத்தினில் இறங்குக களிப்புற இன்றே!

7. கவிஞர் அர. விவேகானந்தன்
ஆசையினால் அறிவிழந்தே
அளவின்றிப் பொருளினையே
பூசைகொண்டே பெருக்கியுந்தான்
புவியதனில் குவித்திட்ட
மாசையெல்லாந் துடைத்திடவும்
மனத்தினிலே நினையாதே
ஆசைகொண்ட அகவாழ்வை
அழித்திடுவா னிறைவனுமே!
அதனால்,
இல்லா தோர்க்கே ஈயும் வகையினில்
எல்லாப் பொருளையு மாக்கி
நில்லா வுலகில் நிலைபெறு வாயே!

8. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
கலிப்பாதன் பெருந்துள்ளல் கனிந்தமனத் தடங்காத
வலிப்பாவிங் கெழுந்தோடு மழைநீராய் அலைந்தேகிக்
கலிதானுட் புகுந்தவனுங் கலங்காநின் றேநலிந்தான்
நலிந்தானுன் நினைவாலே நலிந்தானே நலிந்தானே
அவனைக்
கள்ளுங் காலம் கொள்ளுங் காலம்
தெள்ளுத மிழ்ச்சுவை போலே
அள்ளுங் காலமெக் காலம் அம்மே?

9. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
நீயிலாத புவிவாழ்வு நரகமென விளங்கிடுமால் 
பாயிலாத கலமெனவே படர்கடலில் தவித்திடுமால் 
மாயவனு மிதையறிந்தே மலர்மார்பில் உனைவைத்தான் தோயமென வரவேண்டும் தரவேண்டும் சுகம்பலவும் 
அதனால் 
திருவே பணமே தவிசே கற்பகத் தருவே உனையே தினமே தொழுவேன் வருவாய் நிரைவாய் தருவாய்.!

10. கவிஞர் விவேக்பாரதி
எதிர்வீட்டில் இருக்கின்ற எழிலாளின் குழலாறோ
புதிதாகும் எவருக்கும் புரியாத புதிராகும் !
மதிதன்னை நுதலாக்கி ! மயில்தோகை விழியாலே 
சதிராடச் செய்திடுவாள் ! சபலமனம் மயங்கிடுமே !
அவளால் 
என்னை நான்மறந் தெப்பொழு துங்கனா 
தன்னில் உழன்றே தவிப்பேன் 
கவியில் கற்பனை இங்கேபோ துந்தானே !

11. கவிஞர் நாகினிகருப்பசாமி
உள்ளொன்று வைத்துவெளி உரையொன்றாய் நடிக்கின்ற
கள்ளத்தை மனத்திருந்து கடிதினிலே வெளியேற்றாப்
பள்ளத்தில் வசிப்பதனைப் பழகியுள்ள மனிதரினை
எள்ளித்தான் மறைமுகமாய் எழுப்பிடவும் தவறாதீர்!
இதற்குமுன் 
தன்னிடம் இருந்திடும் தவறிடாக் குறையுடன்
அன்னியர் எவர்க்கும் ஆசிகள் உரைத்தே
இன்முகந் தரித்த ஈனமனத் துடன்வெற்றுக்
கன்னலாய் மொழிவதைக் கசப்பெனத் தவிர்ப்பிரே! 

12. கவிஞர் பசுபதி
பொற்றமிழாம் தமிழ்மொழியில் பொலிவிலா வயற்சொற்கள்
கற்றவரும் புகுத்துகின்றார் கவிதையுளும் கணக்கின்றி
நற்றமிழின் தனித்துவத்தை நலமில்லாப் பிறமொழிச்சொல் பற்றியதன் செழுமைதனைப் பறிக்குமென வுணர்ந்திலரே!
ஆதலினால்,
அருந்தமிழ் தன்னில் அயற்சொல் கலப்பினைப்
பெரும்பிழை என்றுநாம் கருதித் திருவுடைத் தமிழைத் திறமுடன் காப்பொமே!

13. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
வருடமெல்லாம் படித்திடுவார் வருமந்தத் தேர்வுக்கு
இருவிழிகள் சிவந்திடவே இரவெல்லாம் பயின்றிடுவார்
வருவோரும் அறிவுறுத்தி வகைவகையாய்ப் பயந்தருவார்
பெருமளவு மதிப்பெண்ணைப் பெறுவதற்கே முயன்றிடுவார்
ஆனால்
அறிவை மதிப்பெண் அளந்து காட்டுமோ
அறிவினைத் தருவது அனுபவம் அல்லவோ
அறிந்து கொள்வோம் அல்லல் நீக்கியே!

14. கவிஞர் குருநாதன் ரமணி
தமிழென்றும் தமிழரிடைத் தழைத்திருக்க விழைந்துபழந்
தமிழ்நூல்கள் தினமும்நாம் தளர்வின்றிப் படித்திடுவோம்
தமிழ்ச்சொற்கள் அகராதி சரிபார்த்தே பொருளறிவோம்
தமிழ்மொழியின் இலக்கணத்தைச் சரியாக அறிந்திடுவோம்
அத்துடன்
தமிழர் இருவர் தலைப்படும் போது
தமிழில் பேசும் தகுதியை வளர்த்தால்
தமியாய் ழகரம் கொண்ட
தமிழ்மொழி வளரும் தானாய் அதுவே!

15. கவிஞர் அழகர் சண்முகம்.
பருவமதைத் தவறவிட்டுப் பறந்துவந்து பொழிந்தழித்த
பெருமழையால் தமிழகமே பெருந்துயரில் பரிதவிக்க
வருமிடரைத் துணிந்தெதிர்த்து வருந்தியவர்க் குதவிசெய்த
கருணைமனம் உடையவரைக் கருவுயிரும் வணங்கிடுமே
ஆதலால்
ஏத்தியே தொழுதுயான் எந்தையர் நலம்பெறக்
காத்திடு தேவனே கவிமழைப்
பாத்தமி ழாலுனைப் பாடுவேன் தினமே!

16. கவிஞர் சுந்தரராசன்
இருந்தமிழே! உனைநினைந்தே இடர்களெலாம் மறப்பேனே!
வருந்துயரோர் அலைகடலாய் வருமெனினும் எதிர்ப்பேனே!
பொருளிழப்போர் இழப்போ? பாப்
பொருளிழந்தால் பெருமிழப்பே! 
அருள்பொழிவாய் தமிழணங்கே!
அடிபணிந்தேன் இளையமகன்!
முன்போல்
பாவில் தினமும் பலவகை யாக்க
நாவில் நடம்நீ நடாத்தி
மேவியென் னுள்ளே மிளிர்ந்திடு தாயே!

17. கவிஞர் சியாமளா ராஜசேகர்
முற்றமதில் சுழிக்கோலம் முறுவலித்துச் சிரித்திடுமே 
சிற்றெறும்போ அதையுண்டுத் திளைப்புடனே நகர்ந்திடுமே 
நற்றமிழி லிசைவெள்ளம் நயமுடனே ஒலித்திடுமே 
குற்றமிலா இறைபக்தி குலம்விளங்கச் செய்திடுமே !
மார்கழியில் ,
பாவை நோன்பைப் பக்தியாய் நோற்றுப் 
பாவையர் பாவைப் பாட 
பூவையர் வாழ்வும் பூத்துக் குலுங்குமே !

18. கவிஞர் வள்ளிமுத்து
மீன்களெலாம் அலைமீதே அழகோடு விளையாட
மான்களுடன் மயிலினங்கள் கரைமீது நடமாடத்
தேன்றுளியை மரைமலரில் தேடியூதிச் சுரும்பாட
வான்மகனாம் ஆதவனோ வடிவழகு காட்சிகண்டே
மயங்கிக்
கண்ட காட்சி கண்ணை மயக்கக்
கள்ளை யுண்ட மாந்தர் போலத்
தன்னை மறந்துப் போதை கொண்டே
தடாகத்தில் விழுந்து கிடந்தது
விண்ணை யளக்கும் விரிகதி ரோனே!

19. கவிஞர் நடராசன் சீனிவாசன்
வார்த்தைகளில் உனதழகை வடித்திடவே முயற்சிசெய்து
பார்த்திட்டேன் நெடுநேரம்! பலனென்ன? முடியாமல்
வேர்த்திட்டேன்! உணர்ந்துகொண்டேன்! வெறும்பாட்டில் அழகியுனை
வார்த்திடவே முடியாது வகையாக எவராலும்!
ஆகையால்
அந்தம் கொண்ட அழகி உன்னைச்
சந்தப் பாவில் தந்திடா எம்மை
நிந்திக் காதே நிலவே!
எந்தக் கவியால் ஏலும் இதுவே?

20. கவிஞர் வீ.சீராளன்
கனவுருகும் நினைவுருகும் 
கயல்விழியால் மதியுருகும் 
மனமுருகும் இருபொழுதும் 
மரணவலி உயிர்பிழியும் 
தினமுருகும் விழிமடலைத் 
திருத்தவழி உனக்கிருந்தும் 
எனையுருக்கும் தனிமைகளை 
எடுத்தெறிய வரவிலையே !
வந்தால் 
கனித்தேன் சுவையைக் கவிதைப் பொருளில் 
தனித்தேன் ஆக்கித் தருவேன் தினமும் 
இனித்தேன் இதுவென இயன்றமிழ் கொஞ்சவே !

21. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
வருவாய்நீ யெனநாளும்
வழிமீது விழிவைத்துப்
பெருமூச்சு விடுகின்றேன்
பெருவாழ்வு தருகவென
ஒருபோது முனைமறவேன்
உயிரேவுன் தடந்தொட்டு
வரும்பாதை தனைப்பார்த்து
வயதேறப் பதறுகிறேன்
ஆதலினால் 
உயர்வாம் காதலை உயர்வெனப் போற்றித்
துயர்க ளிலாமல் தூய்மையுங் கொண்டே
உயர்வாய் வாழ்வோ முலகில்
இயம்பிடு ஒருசொல் இன்மொழி கொண்டே !

22. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியண்
பாவலராம் வரதராசைப் பலருமேமுன் னறிந்திடோம்
ஆவலுடன் கலந்தோமே அருந்தமிழின் மரபுதனை
யாவருமே அறிந்தேதான் யமகமெனும் மடக்கிலும்
கைவண்ணம் கனிந்தவராய்க் கவியியற்ற முடியுமே
எனலால்
சோலையில் பயில்வோர் சொல்வகை அறிந்து
காலையில் கவியைக் கற்போர்
மாலையில் படைப்பரே மயக்கும் பாடலே!

23. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
சேர்ந்திருப்பாய் சிரித்திருப்பாய் சிறப்பாக இணைந்திருப்பாய் 
நேர்ந்திருப்பாய் நினைத்திருப்பாய் நிலையாக உடனிருப்பாய்
பார்த்திருப்பாய் பதைத்திருப்பாய் பரிவோடே அணைத்திருப்பாய்
காத்திருப்பாய் கரம்பிடிப்பாய் கனவுமகள் எனவிருந்தேன்
ஆனால்
நெஞ்சம் நோய்பட நினைவுகள் தீப்பட
எஞ்சும் வாழ்வதும் இருளெனப் போய்விடப்
பஞ்செனை நீங்கிப் பாவைநீ போனதேன்?
நஞ்சாய்ப் போனதே நாளுமென் வாழ்வே.!
★★★

1 comment:

பெசொவி said...

பாவலருக்கும் கவிஞர்களுக்கும் வணக்கங்கள். வழக்கம்போல் பாட்டியற்றுக-16 தொகுப்பினை ஒட்டி என்னுடைய பயிற்சிப்பாமாலையினை இங்கே பதிகிறேன். வழக்கம்போல் கருத்துகளை இறைஞ்சுகிறேன்.
தரவுக் கொச்சகக் கலிப்பா:
1.
தன்னவளை எதிர்பார்த்துத் தரமுயர்ந்த சொற்கொண்டே
இன்னமுதப் பாவடித்தார் எங்கவிஞர் நிறோசரவிந்த்
பின்னிணைந்த வெங்கடேசன் பெருந்தமிழின் அருமைசொல்லிப்
பின்னமுறக் கவியெழுதும் பேதையினைக் குரங்கென்றார்
அந்நேரம்
மனிதம் காக்க மாதரைக் காத்திடென்
றினிதே உரைத்தார் இன்கவி சரஸ்வதி
மனத்தைக் காக்கும் மகிமை
இனிய கவிஞர் இராகியிரா இயம்பவே!
2.
சலிக்குவகை அறிவியலில் சாதனைகள் புரிந்தாலும்
பலிக்கவிலை இயற்கையின்முன் பார்த்தீரா எனக்கேட்டுக்
கலக்கியொரு கவிபடைத்தார் கணேசனி ராமசாமி
வலிமையற்றோர் துயர்நீக்கப் பரமனாதன் கணேசுமவர்
பாவியற்ற
இல்லா தோர்க்கே ஈதலைச் சொன்னார்
அல்லல் போக்க அரவிவே கானந்தன்
கலியால் நலிந்ததைக் கவிசொலி
நலிந்தார் தமிழகழ்வ நற்கவி தாமுமே!
3.
திருமகளின் பதம்தொட்டுத் திறமுடனே பாடியவள்
கருணையினை வேண்டிட்டார் கவிக்காளி தாசனவர்
கருங்குழலாள் எதிர்வீட்டுக் காரிகையும் ஈர்த்தவிதம்
அருமைவிவேக் பாரதியும் அமைத்திட்டார் கவிதையிலே
இவ்விடத்தே
உன்குறை மறந்தே ஓதல் பிறர்குறை
நன்றிலை என்றார் நாகினி யாரும்
கன்னல் தமிழில் கலக்கேல்
அன்னிய மொழியென் றடுக்கினார் பசுபதியார்!
4.
அறிவினைத்தான் மதிப்பெண்ணால் அளந்திடலும் தவறென்னும்
மறையுரைத்தார் சுரேஷ்சீனி வாசனவர் ஓர்கவியால்
மறவாது தமிழ்மொழியில் மட்டுமேநாம் பேசுவதால்
குறையாது வளருமென்றார் குருநாதன் ரமணியவர்
இடர்க்காலம்
கடுமையாய் உழைத்துக் காத்திட்ட நல்லவர்
அடிபணிந் தேத்தினார் அழகர் சண்முகம்
இடர்வரினும் தமிழ்மறவேன் என்றே
சுடராய் ஒளிர்ந்தார் சுந்தர ராசனே!
5.
மார்கழியில் இளமங்கை மனமகிழ்ந்து நோன்புகொளும்
ஓர்கதையை சியாமளாவும் உரைத்திட்டார் ஒருகவியில்
ஆர்வமுடன் இயற்கையிலோர் அழகுதனை இயம்பிட்டார்
சீர்மையுடன் கவியியற்றிச் சிறப்பாக வள்ளிமுத்து
அப்போது
அழகுநற் பாவையை அந்தமிழ் கொண்டே
மொழிந்திட முனைந்து முடியா விதத்தைச்
சிறப்புற நடராச சீனிவாசன்
குறிப்பா லுணர்த்திக் குமைந்திட் டாரே!
6.
கன்னியினை அழைத்திட்டே கனியன்னக் கவிதைதர
முன்னிட்டே ஒருகவிதை மொழிந்திட்டார் சீராளன்
கன்னியவள் ஒருசொல்லைக் கவியஷ்பா அஷ்பரலி
இன்னிசையாய் விரும்பிட்டார் வியனுலகு தனிலுயர
அங்கேகிச்
சோலையின் பெருமையைச் சுவையொடு கவிதையின்
மூலமாய் நடராசர் மொழிந்திட வனராசர்
ஆலையின் கரும்பாய் அல்லலுற்
றோலமிட் டாரே ஒருத்தியை நினைந்தே!