பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

3 Oct 2015

பாட்டியற்றுக 6
நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 6" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக : 6

ஆசிரியத் தாழிசை
********************
வாழ்வியல் நெறியை வழங்கும் குறளைத்
தாழ்வினை யோட்டும் தமிழ்நிதி யதனை
ஆழ்ந்து கற்றால் அரும்பயன் விளையுமே.
முப்பால் கொண்டு முழுமையாய் விளங்கும்
எப்பா ரோர்க்கும் ஏற்றநல் புதையல்
தப்பாது கற்றால் தகுபயன் விளையுமே.
அய்யன் வள்ளுவர் ஆக்கிய குறளைப்
பொய்யிலா நந்தம் புதையலாம் அஃதை
மெய்யாய்த் தொடர மேன்மை விளையுமே.!

*பாவலர் மா.வரதராசன்*
கருத்தூன்றுக.
ஆசிரியப் பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் தாழிசை, துறை, விருத்தம் ஆகிய இனங்களுண்டு. அப் பாவகையின் பெயரை இணைத்தே அவை அழைக்கப்பெறும்.
பயிற்சியில் கொடுத்துள்ள பாவினம் ஆசிரியத் தாழிசையாகும்.
பொது இலக்கணம்.:
*மூன்றடிகளைப் பெற்று,
அடிக்கு நான்கு சீர்களைப் பெற்றுவரும்.
*ஆசிரியவுரிச் சீர்களான மாச்சீர், விளச்சீர்களைப் பெற்றுவரும். சில காய்ச்சீர்களும் வரலாம். அவை மாங்காய்ச் சீராக மட்டுமே வரும்.(வாராதிருத்தல் சிறப்பு.)
*ஒருபொருள் மேல்ஒரு பாடலோ, ஒருபொருள் மேல் மூன்றடுக்கியோ வரும். ஒரே பொருள்முடிவாய் இருக்க வேண்டும்.
*மூன்று அடிகளுக்கும் ஒரே எதுகையும், ஒவ்வொரு அடியிலும் பொழிப்பு மோனையும் பெற்று வரும். (முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது பொழிப்பு மோனை எனப்படும்.)
*ஈற்றடி ஏகாரத்தில் முடியும். ஓ,ஆ,ஆல் என்றும் வரலாம். ஏகாரமே சிறப்பு.

இவ்வகையிலான ஆசிரியத் தாழிசை (மூன்றடுக்கி.) ஒன்றை வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதுங்கள். மூன்று எழுத இயலாதவர்கள் ஒரு தாழிசையும்(ஒரு பொருள்மேல் ஒன்று.) எழுதலாம்.
★★★

3 comments:

Iniya said...

வணக்கம் பாவலரே! தங்கள் அன்பான சேவைக்கு நன்றி ! தமிழ் அமுதை அள்ளிப் பருகுவோம் அனைவரும். நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

ஏதோ எனக்குத் தெரிந்தவரை எழுதியுள்ளேன்.

ஆழ்ந்து கற்றிட ஆர்வம் கொண்டேன்
தாழ்வு நிலையினை தகர்த்து நானும்
ஊழ்வினை உடைத்திட உணர்வு கொண்டேன்
அல்லும் பகலும் அணிந்திடத் துணிந்தேன்
தொல்லைகள் ஏதும் தொடரா துன்னை
செல்லமாய் அணைத்து சீரினை அளிப்பேன்
இன்பம் பொங்கும் அமுதம் உன்னை
என்றும் பருகி எழிலைப் படைப்பேன்
தொன்மைத் தமிழே தொடர்ந்திடு வாயே !

பைந்தமிழ்ச் சோலை said...

நல்ல முயற்சி இனியா அவர்களே. தங்கள் பாடலின் பொருள் ஒருபொருளைக் கொண்டிருப்பினும் வெவ்வேறு வினைமுடிபுகளைக் கொணடுள்ளது. சான்று பாடலைப் பார்த்து மறுபடி முயலவும். நன்றி.

Iniya said...

வணக்கம் பாவலர் அவர்களே தாங்கள் என் விருத்தம் கண்ணுற்று பதில் தந்தமைக்கு மிக்க நன்றி !

இப்போது சரியாகத் திருத்தியுள்ளேனா? தெரிவிக்க வேண்டுகிறேன்.! மிக்க நன்றி வாழ்த்துக்கள் ...!

ஆழ்ந்து கற்றிட ஆர்வம் கொண்டு
தாழ்வு நிலையினை தகர்த்து நானும்
ஊழ்வினை உடைத்திட உணர்வு கொள்ளவே
அல்லும் பகலும் அணிந்திடத் துணிய
தொல்லைகள் ஏதும் தொடரா தென்னை
செல்லமாய் அணைத்து சீரினை அளிப்பையே
இன்பம் பொங்கும் அமுதம் உன்னை
என்றும் பருகி எழிலைப் படைக்க
தொன்மைத் தமிழே தொடர்ந்திடு வாயே !