பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Oct 2015

பாட்டியற்றுக : 9 இன் தொகுப்பு.



அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முன் பயிற்சிகளைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். பலரும் புதிதாகப் பங்கேற்பது இப்பகுதியின் வெற்றியே. அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.
பாட்டியற்றுக: 9 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். 
நன்றி.!
***** ***** *****
பாட்டியற்றுக:9

*ஆசிரிய விருத்தம்*
1. கவிஞர் வள்ளிமுத்து.
நாடெல்லாம் நல்லமழை நலம்விளையப் பொழியவேண்டும்
நம்மைச் சுற்றிக்
காடெல்லாம் கழனியெலாம் வளங்கொழிக்க விளையவேண்டும்
கலங்கா நீராய்
வீடெல்லாம் கல்லாமை இல்லாமை யாகிப்பின் 
வீதி யெங்கும்
ஏடெல்லாம் எந்தமிழின் மணமணக்க இறைவனிடம்
இறைஞ்சு வேனே.!

2. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
மண்ணிலுள்ள உயிர்களெல்லாம் மங்கிவிடும் வறுமையினால்
மாற்ற மின்றிக் 
கண்ணிலுள்ள காட்சியெல்லாம் கலக்கத்தைத் தந்துவிடும் 
கருத்தும் சொல்ல 
எண்ணமெல்லாம் துயரமன்றோ? எவ்வுயிரும் வறுமையிலே 
என்றும் செல்லத் 
திண்ணமுடன் சொல்லுகின்றேன் தீர்த்திடுவோம் வறுமையினைத் திரள்வீர் ஈங்கே . 

3. கவிஞர் சேலம் பாலன்
திருக்குறளின் சிறப்புகளைச் சீர்தூக்கிச் சிந்தித்தோர்
சிறப்பாய் நாட்டில் 
விருப்புடனே தேசியநூல் ஆக்கிடவே வேண்டுமென
வேண்டு கின்றார்! 
பெருமனமாய் ஆளுபவர் பீடுடனே ஏற்றிட்டால் 
பெட்பாய் நம்மின் 
அருங்குறள்நூல் அகிலமெல்லாம் அரசோச்சும் நாள்வருமே 
அந்தாள் என்றோ ?

4. கவிஞர் சுந்தரராசன்
பனியுடனே முகில்மோதிப் பால்வண்ண முறவாடப் 
பரமன் வாழும்
நனிகயிலை மலையேறி நாதன்தாள் பணிந்தேத்தும் 
நலமே நாடித்,
தனியுருவம் கொண்டாங்கே தமிழ்பாடித் துதித்திடுமோர்
தவமே யாற்றி
இனியொருவர் செயவொண்ணா வினைசெய்யெம் மம்மையடி
இறைஞ்சு வாமே!

5. கவிஞர் நாகினி கருப்பசாமி
பொங்குமிங்கு மழலைச்சொல் இன்னிசையின் சுரமாகிப்
பொலியும் ஏடாய்
அங்குமிங்கும் உயிர்மூச்சாய்ப் பரந்துநிற்கும் காற்றான
ஆற்றல் தேராய்
பங்குபெற நட்பினரை அழைத்திங்கே ஒற்றுமையைப்
பதிக்கும் தூணாய்
மங்கிடாத புகழ்பெறும்நல் பராமரிப்பில் முதியவர்கள்
மகிழும் இல்லே!

6. கவிஞர் பரமநாதன் கணேசு
கொடையென்று கொடுத்துப்பின்
கெடுத்தவரை யாளுவதைக்
கொள்கை யென்பார்
படைகொண்டு பழிதீர்க்கப் 
பலகோடி உயிர்களையும்
பலியெ டுப்பார்
முடைநாற்றம் வீசுகின்ற 
அரசியல்நோய் யுற்றுலகு
முணகு தையோ!
உடலுக்கு நோய்வந்தால் 
உண்டென்பீர் மருந்திங்கே
உலகுக் குண்டோ?

7. கவிஞர் குருநாதன் ரமணி
வானமுகிற் கூட்டமெலாம் வண்ணமுறும் செங்கதிரால் 
மாலை நேரம்
கானமெலாம் புள்ளுருவாய் வண்ணமெலாம் பூவுருவாய்க்
காற்றில் சேரும்
மோனமதில் திரையாக மீனங்கள் கண்சிமிட்டி 
மூடும் போதில்
ஞானமதில் பயிலாத ஈனத்தைக் களையாத
நலிவேன் நெஞ்சே!

8. கவிஞர் அர. விவேகானந்தன்
மனைதனிலே பெண்குழந்தை பிறந்துவிட்டால் நைந்துடனே
மனம்ம ருண்டு
வினையாற்றிச் சுமைக்குறைக்க விரும்பியுமோர் ஆண்மகவை
விமலன் தானும்
நினைந்தபடி அருளவில்லை
யென்றுநீயும் வெறுமையென
நினைய வேண்டா
உனைமகளாய்த் தாங்கிடுவாள் தாயாக முதுமையிலுன்
உளங்கொள் வாளே!

9. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
 (இரட்டுற மொழிதல் – முரட்டுக் காளையும் மங்கையும்)
அடக்கிடவே ஆர்வங்கொண் டாடவனும் தான்முயல
அந்தோ பாவம்
அடக்கிடவே வந்தவனோ அடங்கிடுமோர் நிலைவருமே 
அதுவே சோகம்
மிடுக்குடனேர் பார்வையொன்றில் வீரமதை இழந்திடுவான்
மெய்யே யன்றோ
அடுக்கிடுமிக் குணங்களாலே ஆன்விடையும் அழகுமங்கை
அவளும் ஒன்றே!

10. கவிஞர் சீராளன்
அன்பென்னும் சோலையினை அழிக்கின்ற காமுகர்கள் 
ஆடும் ஆட்டம்
இன்பென்னும் இவ்வாழ்வும் இரவல்தான் என்றறியார் 
என்னே செய்வோம் 
முன்பத்தோ பின்பத்தோ முடிவேதும் தெரியாமல் 
முயங்கும் யாக்கை 
வன்மத்தின் கறைகொள்ளும் வகுந்தெறிந்தால் பூலோக 
வாழ்க்கை தேனே !

11. கவிஞர் விஜயகுமார் வேல்முருகன்
கற்பிக்கும் கல்விதனை விலைப்பொருளாய் மாற்றியேதான்
கயவர் கூட்டம்
புற்றீசல் போலிங்குப் பெருகிடுமோர் வணிகமாகப்
புலமை ஆசை
பற்றாளர் பயின்றிடவே பணமதனைக் கறந்திடுவர்
பா(ங்)காய்ப் பேசி .
விற்கின்றார் வாங்கிக்கற் றதற்கேற்ப பணியமையா...
விபரம் என்னே!

12.கவிஞர்இரா.கி.இராஜேந்திரன்
செங்கழுநீர் மலர்கொத்து மணம்பரப்பி வண்டினமும்
சேர்ந்துப் பாட
அங்கயற்கண் ஆரவள்ளி அசைந்தாடி வரப்பினிலே
அழகாய் வந்தாள்
செங்கமலப் பொற்பாதம் கொலுசாடச் சுந்தரியின்
சிரிப்பில் சொக்கிப்
பங்கயத்தாள் பார்வையினில் விழுந்தவனும் இதழமுதம்
பருகி னானே!

13. கவிஞர் அழகர் சண்முகம்
துறவறத்தின் போர்வையிலே ஏமாற்றும் போலிகளைத்
துரத்தி வீழ்த்திப்
புறமினிக்கப் பேசுவோரின் போதனையை நச்சுநீந்தும்
புனலாய் எண்ணித்
திறமைமிக்க நல்லவரைத் தேர்ந்தெடுத்துப் பொறுப்புடன்சீர்
திருத்தம் செய்தால்
அறம்தழைத்தே ஏமாறும் அவலமின்றிச் செழித்திடுமே
அழகாய் நாடே!

14. கவிஞர் விவேக் பாரதி
புத்திக்கும் சக்திக்கும் எட்டாத தூரத்தின் 
பூங்கா வானம் ! 
எத்திக்கும் விரிந்திருக்கும் பூஞ்சோலை ! சூரியனும்
ஏறி நிற்க 
மத்திக்கு மஞ்சளுறும் மாலையிலே சிவப்பாகும் ! 
மறைந்த பின்போ 
முத்துக்கள் பூத்திருக்கும் இருள்வானம் ! அதன்சோதி 
முழுமை வெள்ளி !

15. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி.
காலோட்டக் காட்டாற்று வெள்ளமது கரைகளையும் 
கரைத்துக் காட்டும்
மேலோட்ட மாய்க்காணச் 'செருக்குற்ற வாழ்வுனது 
மெலியார் தம்மைக்
கோலோச்சும் அதிகாரம் கொண்டாய்நீ' எனச்சொல்லும் 
குறைகா ணுள்ளத்
தாலோட்டம் நிற்காது தடைகளெலாம் கடந்துசெலும் 
தனித்தன் மையே!

16. கவிஞர் சியாமளா ராஜசேகர்
நீலமயில் வாகனனின் திருப்புகழைப் பாடிவந்தால் 
நெகிழும் நெஞ்சம் !
மாலவனின் மருகனவன் மலர்த்தாளைப் பற்றிடிலோ 
மயக்கம் தீரும் !
கோலவிழிக் குறமகளும் குறைதீர்க்க உடன்வருவாள் 
கொழிக்கும் செல்வம் !
வேலவனின் அருள்கிட்ட மேதினியில் சிறப்புற்று 
விளங்கும் வாழ்வே !

17. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
வண்டுண்ணும் மலர்த்தேனே வானுறையும் வெண்ணிலவே 
வாராய் நீயே
கண்டுன்னைக் காதலுடன் கதைபேசிக் களித்திருக்கக் 
காலம் தாராய்
நண்டுந்தன் வளைப்புகல்போல் நன்மனதில் நீபுகுந்து 
நலமே சேராய்
விண்டுள்ளம் மகிழ்வுற்று விழிமூடி நாம்தூங்க 
விரையாய் பெண்ணே!

18. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
யார்பெற்ற வரமோயிங் யார்செய்த தவமோநீ
மகளாய் வந்தாய்!
கார்பெற்ற மேகந்தன் கையசைவில் குளிர்விக்கும்
மழையாய் வந்தாய்!
நீர்பெற்று வாழும்நிலம் நிதமிங்குச் செழிப்பதுபோல்
நிறைவுந் தந்தாய்!
ஊர்பெற்ற நல்வரமாய் உனையிங்குப் பலர்வாழ்த்த
உவக்கும் நெஞ்சே!

19. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
விரும்பியவா றெல்லாமிப் பூவுலகில் பொல்லாதார்
விளைக்குந் துன்பம் 
தருக்குடையா ருள்ளத்தில் தூய்மையிலா எண்ணத்தால்
தளிர்க்குந் துன்பம்
திரும்புகின்ற இடமெல்லாந் தீவினையைக் காணுகையில்
தீயாய் என்றன் 
இதயத்தைச் சுடுகிறதே இருவிழியும் நனைகிறதே
இறைவா இங்கே!

20. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
உன்மனத்தில் தோன்றுகின்ற எண்ணங்கள் கற்பிக்கும் 
உதிப்பைப் பற்றி
நன்மையைநீ உளமார செய்துவந்தால் மன்பதையில் 
நாளும் வெற்றி
வன்முறையை ஒழிப்பதற்கு நாட்டின்பால் பற்றுகொண்டு 
வளங்கள் சேர்த்து
பன்முகத்தில் உழைத்தற்குக் கிடைக்கின்ற பேரன்பின் 
பலனைக் காண்பாய்!

21. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
நாவரசால் நாட்டரசன் நாடியதும் நாடகத்தான் 
நாமத் தாலே
நா”வசை”யால் சுந்தரர்தான் நின்றதுவும் நாடகத்தான் 
நாமத் தாலே
நாவடங்க மாற்றாரை சம்பந்தர் வென்றதுவும் 
நாமத் தாலே 
நாவினிக்கும் வாசகத்தை “வாசகர்”தாம் தந்ததுவும் 
நாமத் தாலே!

22. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
வரதராசன் வளர்த்திடுமிச் சோலையிதில் அடியேனும் 
விருத்தம் பாட
மரபதனோர் பயிற்சியிலே மாசின்றிப் பாயாக்க 
மனம்தா நீயே
பரமசிவன் பத்தினியே உத்தமதா னபுரமதில்
பத்தர் வேண்டும்
வரமருளும் கைலாச நாதனுடன் ஆனந்த 
வல்லித் தாயே!
★★★★★

8 comments:

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

பாட்டியற்றுக 9 இன் தொகுப்பிற்கு கவிஞர்
வெங்கடேசன் சீனிவாச கோபாலன் அனைத்துக் கவிஞர்களையும் ஒன்றுசேர்த்து எழுதிய கவித் தொகுப்பு !

பாவலருக்கும் கவிஞர்களுக்கும் வணக்கங்கள். பாட்டியற்றுக -9 பயிற்சிப்பாக்களைத் தொகுத்து மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்டுற்ற நிலையில் என்மனத்தில் தோன்றியபடி ஒவ்வொருவர் கவிதைபற்றியும் ஒரு வரி எழுதி இந்தப் பாவிலக்கணத்தின்படியே (காய், காய்,காய்,காய்,மா,தேமா) ஆசிரியவிருத்தங்களை எழுதிப்பார்த்தேன். எனக்குச் சரியென்று தோன்றியதால் அதனை இங்கே பதிவிடுகிறேன். தளைதட்டாதிருக்கச் சிலரின் பெயரைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். மன்னிக்க வேண்டுகிறேன். கவிஞர்களின் கருத்துகளை இறைஞ்சுகிறேன். தங்களின் பாடலின் கருவை நான் சிதைத்திருந்தால் அதனைத் தயங்காமல் கூறவும். மாற்ற முயல்கிறேன். நன்றி!
1.
நாட்டில்நல் வளம்வேண்டி வள்ளிமுத்து பாட்டொன்றை
நன்றாய் யாக்க
பாட்டொன்றில் நாடுகொண்ட வறுமைநீங்க சாராபாஸ்
பணிவோ டேங்கக்
கேட்டாரே சேலபாலன் திருக்குறளை நாடுமுற்றும்
கிடைக்கச் செய்யப்
பாட்டாலே காரைக்கால் அம்மைபற்றி அழகுராசன்
பதித்தார் இன்றே
2.
குடும்பமது மகிழ்ச்சியுற பாட்டுரைத்தார் நாகினியார்
கொண்டாட் டந்தான்
இடும்பைதரு அரசியலின் கொடுமைதனை பரமநாதன்
எடுத்து ரைக்க
கொடும்பகலின் முடிவினிலே ரமணியவர் மோனநிலை
குறித்துக் கூற
குடும்பவிளக் காய்மகளை விளக்கிவிவே கானந்தன்
குளிர்வித் தாரே!
3.
பெண்ணவளும் காளையுமே ஒன்றெனவே வெங்கடேசன்
பேசிக் காட்ட
கண்ணெனவே வாழ்க்கையதன் தத்துவத்தைச் சீராளன்
கவியாய்க் கொட்ட
புண்ணெனவே புரையோடும் கல்விபற்றி வேல்முருகன்
புனைந்து காட்ட
வண்ணமிகு காட்சிகளை இராஜேந்த்ரன் கவிதையிலே
வரைந்தார் தாமே!
4.
நல்லவரின் தேவைபற்றி சண்முகமும் எடுத்துரைத்தார்
நாடு வாழ
எல்லையிலா வானத்தின் எழிலதனை விவேக்கவரும்
எடுத்து ரைக்க
வல்லவனோ மெலியானோ தடைவெல்ல சுப்ரமணி
வழியைக் காட்ட
நல்லபடி ஆறுமுகன் புகழ்பாடி சியாமளாவும்
நயந்தார் தாமே!
5.
வெண்ணிலவு உள்ளிட்ட இயற்கையினை நிறோஷரவிந்த்
விளித்தே பாட
பெண்ணிலவு மகள்பெருமை வனராசன் பெரியகண்டர்
பேசி னாரே
புண்ணுழையு மாப்போலே புலம்பிட்டார் அலிஅஷ்ரஃப்
பூமி காக்க
எண்ணமதால் நாட்டினையே வளப்படுத்தக் கவியன்பன்
ஏவிட் டாரே!
6.
ஈசனுடை நாமமதால் நாற்குரவர் பெருமையுற்றார்
என்றார் மோகன்
ஈசனையே வேண்டிநின்றார் நடராசன் பாச்செய்ய
ஏற்ற நெஞ்சம்
பாசமிகு வரதராச னவர்கொடுத்த பாவகையில்
பதிந்த வற்றை
ஈசனவன் அருளாலே தொடுத்தெடுத்துப் புனைந்திட்டேன்
இன்றே யானே!

பரமநாதன் கவிதைகள் said...

ஐயா. எங்களைக் கவிதைக்குள் கட்டி ,மகிழ்ச்சியில் மிதக்க வைத்துள்ளீர்கள். மரபுக்கவிதை பயிலும் மாணவனாய் மனம் களித்துப் பாராட்டுகின்றேன். தொடரட்டும் தங்கள் பணி.

Unknown said...

மிகவும் அருமை

Unknown said...

தொகுப்பும் அருமை. பாடலை எழுதியவர்களை பெருமைப்படுத்தியது மேலும் சோலைக்கு மெருகூட்டுகின்றது. தொடருங்கள்

Unknown said...

தொகுப்பும் அருமை. பாடலை எழுதியவர்களை பெருமைப்படுத்தியது மேலும் சோலைக்கு மெருகூட்டுகின்றது. தொடருங்கள்

Unknown said...

மிகவும் அருமை

Unknown said...

மிகவும் அருமை

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

மிக்க நன்றி கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்.