பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

24 Oct 2015

சிலேடை வெண்பா - இரட்டுறமொழிதல்


நண்பரும், கவிஞருமான திரு.Venkatesan Srinivasagopalan அவர்களின் ஓயாத மடக்கு, சிலேடை வெண்பாப் பதிவுகளைப் பார்த்து, அதனால் மகிழ்ந்த என் உள்ளத்தெழுந்த ஓர்
"‪#‎இரட்டுறமொழிதல்‬ 
இப்பாடலை அன்னாரின் தமிழ்ப்பணிக்குப் படையலாக்குகிறேன்.
வெங்கடேசனுக்கும்.- மீனுக்கும்
(இன்னிசை வெண்பா)
*******-**********-*****
ஊனடங்கும் தோல்மிளிரும் ஓய்வின்றிக் கண்டுஞ்சாத் 
தான்மடங்கிச் சேர்ந்திரட்டும் தண்ணென் றமிழ்தமாம்
பொங்குகடல் தானீந்தும் பொற்சிலையே இப்பாரில்
வெங்கடேசன் மீனாம் விளம்பு.!

வெங்கடேசன்.:
1. உண்ணுதல் மறந்து பாவடிப்பார்
2. அவருடைய பாக்கள்.(தோலெனின் 
பாட்டு.) மிளிரும்.
3. கண்ணுறக்கம் துறந்து பாவடிப்பார்.
4. மடக்குப் பா, இரட்டுற மொழிதல் 
எழுதுவார்.
5. தமிழ்க் கடலில் (அவருள்ளம்.) நீந்தும்.
மீனுக்கு.:
1. உணவில் உண்ணுமாறு அடங்கும்.
2. மேல்தோலாகிய செதிள் மிளிரும்.
3. கண்கள் மூடாது. (எப்போதும்.)
4. மடங்கி,வளைந்து நீந்தும். 
துணையுடன் இணைந்து 
இரண்டாகக் காட்சித்தரும்.
5. குளிச்சியான கடலில் வாழும்.
(மற்றவர்களும் என்னை ஈர்த்தவர்களே. அனைருக்கும் அன்பைக் காணிக்கையாக்குகிறேன்.)
தமிழன்புன்,
பாவலர் மா. வரதராசன்

3 comments:

Unknown said...

மரபினைக் காக்கவந்த மாமணியே மன்னா
வரம்பொடு பாபுனைய வார்த்தக் கருத்தில்
தரமான நற்கவிதைத் தந்து பயிற்சி
தரும்நல் தருமதுரை வாழி

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

ந.ன்றி ஐயா

Vivekbharathi said...

"தருமதுரை வாழி" தடம்பிறழும் ! வெண்பா
இருஅசைகள் ஏற்காதே ஈற்றில் - கருத்தினிலே
வாழி எனுஞ்சொல்லை வாழு எனப்போட்டால்
தோழ ! வராதங்கே தோய்வு !