பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Nov 2015

பாட்டியற்றுக : 12 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே!
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எவ்வளவு விவாதங்கள்! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!!
தொகுப்பைப் படிக்காதீர்கள்... "பாடிப் பாருங்கள் " யாம் பெற்றுள்ள இன்பத்தை நீங்களும் பெறுவீர்.

இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -12
கட்டளைக் கலித்துறை


1. கவிஞர் வள்ளிமுத்து
கரும்பொடு வாழைக் கடும்பனி சூழக் கவிந்தனவே
அரும்புகள் கோடிச் சுரும்புக ளாடிப் புலர்ந்தனவே
விரும்பிடு பூமி விளைவளங் காட்டி விளைந்தனவே
திரும்பிடு தேசம் தெளிவய லாடத் திமிர்ந்தனவே!

2. கவிஞர் வளன்
மரபு கவிதை மடிந்திடு மோவென வாடிவிட்டேன்
மரபுக் கவிதை மிளிர்வதை எண்ணி மகிழ்வுகொண்டேன்
சிரமம் இருந்தும் செழுந்தமிழ் இன்னும் செழித்திருக்கும்
வருநாட் களிலே வளர்பிறை போல வளர்ந்திடுமே!

3. கவிஞர் சேலம் பாலன்
உறவுகள் இன்றே உளப்பூர்வ மாக உலகமிதில் 
திறமுடன் நன்றே திகழ்கிற தென்றெவர் செப்புவரே? 
அறங்களும் தேய்ந்தே அவரவர் வாழ்தல் அகிலமதில் 
திறமுடன் ஆகிடச் செந்தமிழ் மக்களின் சீர்ப்பெரிதே!

4. கவிஞர் வெங்கடேசன்
கல்லா ரிலையே எவரும் இயல்பாய்க் கவியியற்ற
வல்லார் எனவே பிறரும் புகழ்ந்து வழுத்திடவே
எல்லா நலமும் வளமும் இணைந்தே இனிதுவாழ
வல்லோன் இறைவன் மலரடி போற்றி வணங்குவனே!

5.கவிஞர் நிறோஸ் அரவிந்த்
கவிதையும் பாடக் கருப்பொருள் தேடிக் களைத்திடலால்
புவியினில் உள்ள புதுமைகள் தேடிப் புகன்றிடவே
கவினுறு வாழ்வின் கயமைகள் நீக்கிக் களித்திடவே
செவிக்கினி தாகச் சிறப்புறு பாடல் செயல்நலமே!

6. கவிஞர் விவேக் பாரதி
காதலும் வந்தால் கடைவிழி யோரம் கனவுவரும் !
மோதிடும் எண்ணமும் மொத்தமாய் நீங்கும் ! முழுமைவரும் !
பாதகர் நெஞ்சமும் பாதிரிப் பூவாய்ப் படர்ந்தலரும்
ஆதலி னாலருங் காதலைச் செய்வீர் அனைவருமே !

7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
நன்றி பலநாள் நவின்றிட நானும் நலத்துடனே 
உன்றன் பெயரை உதிரமாய் நெஞ்சில் பதித்திடுவேன் . 
என்ற னுயிரை எனக்கெனத் தந்தே எனைவளர்த்தாய். 
மன்றில் மகவாய் மலர்ந்திடச் செய்த மகத்துவமே!

8. கவிஞர் சியாமளா ராஜசேகர்
பெய்யும் மழையால் பிழைப்பு மிகவும் பிசகியதே 
செய்யும் பணிகளில் தேக்க நிலையும் தெரிகிறதே 
வெய்யோன் வரவை விழிகளுங் காண விழைகிறதே
உய்யும் வழிதனை உள்ளமுந் தேடி உறைகிறதே !

9. கவிஞர் வீ.சீராளன்
மண்ணில் பிறந்தேன் மனவலி கொண்டேன் ! மயக்குமொரு 
கண்ணில் விழுந்தேன் கனவை வளர்த்தேன் ! கனியமிர்தம் 
பண்ணில் வடியப் பலகவி ஆர்த்தேன் !பகலிரவாய் 
எண்ணம் எரிய எழிலை இழந்தேன் இதுவிதியே !

10. கவிஞர் அர.விவேகானந்தன்
விளைந்திடும் பூமிதான் வீணா யழிந்து விதியெனவே
விளைச்சலு மின்றிதான் வீடென மாறி விரைந்தனவே!
இளைத்திடும் ஏரால் உழவனின் வாழ்வும் இறங்கியதே!
களைத்திடு முன்னே கனிவுடன் காப்போம் களிப்புறவே!

11. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
கண்ணின் மணியே அழகே மலரே கவலையேனோ
பெண்ணாய் உலகில் பிறந்து பிழைக்கப் பிறழ்தலுமேன்
மண்ணில் உனையே மதிக்க எவர்க்கும் மனமிலையோ
பெண்மை நமக்குச் சமமாய் இருக்க பெருமைதானே!

12. கவிஞர் பசுபதி
செம்மொழி என்னும் சிறப்பினைப் பெற்றநம் செந்தமிழின்
முந்தும் கணினி ஒருங்குறி யீட்டை முனைப்புடனே
முந்தைக் கிரந்தத் தமிழ்க்குறி யீட்டை முடுக்கிவிட
நெஞ்சில் குறும்பர் நினைப்பதை முற்றாய் நிறுத்துகவே.!

13. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
ஏய்த்துப் பிழைக்கிற மானிடர் வாழ்க்கை எனநடப்பில்
வாய்ப்பில் நுழைந்தே அரசியல் ஆட்சியில் மன்னரென
மாய்ந்து பொருளைக் குவித்திட வாரிசு வாழுவதை
ஆய்ந்தே எவரும் யறிந்துதம் வாக்கை அளிக்கலாமே!

14. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது
பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்
கற்ற பயிற்சிகள் நிற்க மனதிற் கவனமுடன்!
சற்றும் தயங்கா முயற்சி எடுப்போம் சபதமென்றே!

15. கவிஞர் அழகர் சண்முகம்
எட்டிய தெல்லாம் எளிதாய் வலியோர் எடுத்துவைக்கக்
கிட்டிடும் தூரம் கிடப்பது கூடக் கிடைத்திடாமல்
பட்டினி யால்தினம் பாமரர் நாட்டில் பரிதவிக்கும்
பட்டியல் நீங்கிடப் பாரோர் எழுவீர் பரிவுடனே!

16. கவிஞர் குருநாதன் ரமணி
விடியல் விளையொளி வெண்ணிறம் மீள்வரும் விண்பரப்பே
அடிக்கால் புதைத்துநான் ஆழிக் கரையில் அமர்ந்திருந்தேன்
துடிப்புடன் நோக்கத் தொடுவான் சுடரைத் தொடுவிழியால்
குடியாய் உடலில் குழையும் உயிரைக் குலவுவனே!

17. கவிஞர் இராச. கிருட்டிணன்
கள்ள மதனைக் கருத்திற் கலக்கும் கருமனத்தார் 
மெள்ளப் பிறரும் வெறுத்தே ஒதுக்கிட வெம்பிடுவார்! 
உள்ளன் புடனே உலகிற் பிறர்க்கே உதவிடுவார்
உள்ள மதனில் உவகை பெருகி உலவிடுமே! 

18. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
அருவாய் உருவாய் அருளாய் ஒளியாய் அகத்துறையும்்
பொருளாய்ப் பொருள்தன் பொருளாய்ப் பொலியும் பொழில்விருப்பக்
கருவாய்க் குருவாய்க் கனியாய்க் கனிவாய்க் கனிந்தவனே!்
திருவாய்த் திறமாய்த் திருவாய் மொழியாய்த் திகழ்குகனே!

19. கவிஞர் நாகினி கருப்பசாமி
காதலின் உள்ளத்துக் காட்சி எழுத்தினில் காணுமாறு
வேதமாய் ஆழ்ந்த வெறுமையில் நெஞ்சும் வெதும்பிடாமல்
மாதவம் செய்யும் மயங்காத எண்ணத்தின் மாட்சியென்ற
சாதனை காதல் கடுதாசி சொல்லும் சரித்திரமே! 

20. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
வயலில் வரப்பில் வழியிலும் நீரே வழிந்திடவே
இயல்பது மாறி இயந்திர மின்றே இயக்கமிலை
மயக்கும் தமிழை மனமது நாடி மகிழ்ந்திடுதே
புயலின் விளைவினால் பைந்தமிழ்ச் சோலை பொலிவுறுதே!

21. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
நிலந்தரு மின்பம் நிலைத்திட வேண்டின் நிலையறிக!
இலந்தரு மின்பம் இனித்திட வேண்டின் இசைவுறுக!
நலந்தரு மெண்ண முளம்வர நாளும் நயந்திடுக!
பலந்தரும் பண்பு வளர்ந்திட வாழ்வும் பயனுறுமே.!

22. கவிஞர் சுந்தரராசன்
வெற்றித் திருமகள் வேகத் துடனே விரைந்திடுவாள்!
பற்றிக் கலைமகள் பக்கத் திருந்துகண் பார்த்திடுவாள்!
சுற்றுஞ் சுழலெனச் சக்தி யருள்தரச் சூழ்ந்திடுவாள்!
நற்றமிழ் நங்கையென் நாவி லுறைந்தே நடமிடினே! 
★ 
23. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
மன்றாடி என்றாடும் மாதோர்பா கத்தானின் மைத்துனனே 
குன்றோடித் தூக்கிக் குடையாக்கிக் காத்த குலவிளக்கே
மண்ணுண்ட வாய்தனில் மாதாவுக் காகாயம் வாய்த்ததையா
கண்டுன்னை யேத்தும் கருத்தா லடியாரைக் காக்குவையே!

24. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
சிந்தா திருந்தேன் சிரசில் கிடந்தவன் சிந்தையிலே 
தந்தே னெனையே தருவானே வாழ்வைத் தயக்கமின்றிப்
பந்தா யுருட்டிப் பனிபோ லுருகிடப் பாய்விரிக்க
நொந்தே னவனால் நொறுங்கிய நெஞ்சினில் நோவினையே!

25. கவிஞர் பரமநாதன் கணேசு
அன்னைத் தமிழே! அழகுறு தேன்சுவை ஆரமுதே!
உன்னைத் தொழுதே! உனக்கென வாழ்வேன் உயர்வுறவே!
பொன்னும் பொருள்களும் போயழிந் தாலும் புவிதனிலே!
என்னை அழிப்பினும் இன்மொழி காப்பேன் எனதுயிரே!
★★★★★

No comments: