பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Nov 2015

பாட்டியற்றுக : 13 இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! 
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும்.எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!! இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.
வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -13
காப்பியக் கலித்துறை

1. கவிஞர் வள்ளிமுத்து
வாளை யுருவிக் களமேபுக வாழ்த்து வாளே
தோளை நிமிர்த்தி யெறிவேல்பட மார்பை யேந்திக்
காளை யிறக்கக் கலங்காதவன் பீடு பேசித்
தாளை வணங்கித் தமிழ்பேசிடும் மூதின் முல்லை


2. கவிஞர் இளம்பரிதியன்
தேனாம் தமிழாள் திருவாயெனு ளோட வீணே
ஊனாம் பொருளே திருவேயென வாடி னேனே
வாணாள் தனையே கரைத்தேமனம் சோரு நாளில்
நானே எனுமா சறுத்தேயெனு ளூறி னாளே!

3. கவிஞர் மு.பாலசுப்பிரமணியன்
தாயே தமிழே அமிழ்தேநிறை பேரெ ழில்நீ
தூய மொழிநீ துணைநீயிரு சேய னென்னின்
மாய மொழிகள் மயல் நீக்கிடு ஆய யென்னை 
நீயே அருள்க நிதமேயுனைப் பாட வேண்டும்! 

4.. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
மங்கை தனைத்தான் உடையான்மன மாசு மாய்க்க
மங்கை தனைத்தான் உடையான்மன மாசு மாயத்
தங்கை குவித்தே கவிபாடுமத் தாச னையேத்
தங்கை குவித்தே கவிபாடுவோர் தாச னென்றே!

5. கவிஞர் சியாமளா ராஜசேகர்
அன்பாய்த் தொழுதால் அணைப்பாள்பரி வாக நாளும் 
இன்பந் தருவாள் ; இதமாய்ச்சுகந் தந்து, வந்த 
துன்பந் தொலைத்துத் துணையாயிருப் பாளை வாழ்த்தி 
அன்னை புகழை அழகாய்நிதம் பாடு வோமே !

6. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
மாதொ ருபாகா நினையேயினி, மாத்தி ரைதான்
காத முமேபோ கவும்வேண்டியும் கால காலம்
பாத முமேதான் பணிந்தேதினம் பாடு வேனே
மீத மிலாதே யதுவேயெனை விட்டு நீங்கும்!

7. கவிஞர் கைலாசநாதன் காளிதாஸ்
தன்னந் தனியே தவமேநிறை புத்த தேவா! 
கன்னங் கரிய மலைபோலுமு னுள்ள சீர்மை 
உன்னும் பொழுதும் உளமேநிறை உற்ற ஞானம் 
என்னுள் கனிந்து எளிதாய்வர இங்கு பாராய்!

8. கவிஞர் அர.விவேகானந்தன்
வாரா துறையும் வளம்யாவுமே தேடி வந்து
தேரா துளத்தில் தெவிட்டாதுமே யின்ப மூட்டும்
பாரா திருந்தால் பழிபாவமே சுற்று முன்னைச்
சோரா துதாயின் துயர்நீக்கியே போற்று வாயே!

9. கவிஞர் பரமநாதன் கணேசு
கூடு மிடத்தில் கொடும்பேயெனக் குண்டு வைக்கும் 
கேடு தனிலே கிடந்தேயழிந் திங்கு நாளும்
ஓடி யலைந்தே உழைப்போர்இனித் தேடி உண்மை
நாடி யணைக்கில் நடக்காதிவை நம்பு வீரே!

10. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
கற்ற துரைத்தாற் குறியாருள ராத லாலோர்
குற்ற முனக்கே குறிப்பாருள ராத லாலோர் 
அற்ற மழிக்கும் அரிதோர்வழி ஓது கின்றேன்
பற்ற(து) அடக்கிச் சுகமாயிரு பாவி நெஞ்சே!

11. கவிஞர் சேலம் பாலன்
நாட்டில் தமிழைஉளமேபதித் துள்நி னைத்துப் 
பாட்டும் பிறவும் பதித்தேபல நூல்க ளாக்கி 
வாட்டும் வறுமை வதைத்தாலுமே வாழு கின்றோர் 
நாட்டில் மறைந்தும் புகழாலவர் வாழு வாரே !

12. கவிஞர் மாரிமுத்து
வண்ணத் தமிழே மனத்தோடுனைப் பாடி வந்தோம் 
எண்ணத் தினிலே தமிழேயுனை ஆவி என்றோம் 
விண்ணில் பறக்கச் செயற்கோளுடன் பூட்டி விட்டோம் 
மண்ணில் மலர்ந்த மொழியேயினி விண்ணு மாளே..!

13. கவிஞர் பசுபதி
மானே மயிலே மகிழ்வேதரு மங்கை நீயே
தேனே யமுதே திருவேயுனைக் கண்ட போதே
நானே முனைந்து நலமேவிடக் காத லித்தேன்
வானே மழையே தமிழேயுனைப் பற்றி னேனே!

14. கவிஞர் அழகர் சண்முகம்
வாடா மகிழ்வாய் வளமாகவே வாழ்ந்து வந்தார்
கூடாக் குடியால் குணமோடவே சாய்ந்த குன்றாய்
மூடாக் கதவும் முழுதாகவே மோதி மூடும்
தேடாத் துயரை மதுவாயினில் வீழ்ந்து தேடேல்!

15. கவிஞர் நாகினி கருப்பசாமி
சேயின் பிதற்றல் செழுந்தேந்தமிழ் ஒத்த தாகி
நோயின் கொடுமை குறைத்தேமனத் துள்நி றைந்து
தாயின் பரிவாய்த் திகழ்ந்தேமனத் தாக சாந்தி
வாயில் நிறைக்கும் வரைந்தாடிடும் ஓவி யப்பூ!

16. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
மாயோன் தகப்பன் அவரேதுயர் கொண்ட தேனோ
தீய வினையோ தெரியாப்பழி கொண்ட தாலோ
சேயொன் றுவேண்டி தவமேதினம் செய்கு வாரே
தூய மகனாய் ரகுவேவர நன்று தானே!

17. கவிஞர் சுந்தரராசன்
உண்ணா முலையே! உலகாண்டிடும் உன்ம ணாளன்,
கண்ணே புதைத்தாய் விளையாட்டெனக் கைத்த லத்தால்,
விண்ணின் விளக்காம் மதிசூரியர் வீழ வன்றே
மண்ணு மிருளத் தவமாற்றினை மக்க ளுக்கே!

18. கவிஞர் கலாம் ஷேக் அப்துல் காதர்
செய்யும் தொழிலில் சிறப்பேதரும் தூய நோக்கம்
பொய்யும் களவும் கலவாதொரு வந்த பாதை
மெய்யும் மனமும் மிளிர்ந்தேபணி செய்து வந்தால்
பெய்யும் மழையாய் நலமேதரும் பீட தாமே!

19. கவிஞர் குருநாதன் ரமணி
பாளை வடியும் பனஞ்சாறெனத் தீந்த மிழ்ப்பா
ஆளை மயக்கும் அருஞ்சொற்பொருள் ஓசை யாகத்
தோளை நிமிர்த்தித் தொலித்தேன்மனம் நன்கு தோய
வேளை இதுவோ வெளியேமழை உட்கு வேறே!

20. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
தாரா திகழும் மிகுதாய்மையின் தன்மை யாலே
பாரோர் புகழ மனைமாட்சியைத் தந்த பாவை
ஏரா செழித்த எழிலானவ ளோடு சின்னக்
கூரைக் குடிலும் பெருமாளிகை யொக்கு மிங்கே!

21. கவிஞர் நடராசன் பாலசுப்பிரணியன்
காலை எழுந்து கனிவாயிசை பாட வில்லை
மாலை முழுதும் மகிழ்வோருட னாட வில்லை
வேலை யதிகம் விளையாடுத லேது யானும்
சோலை இணைந்து சுவையாகிடும் பாவை யாத்தேன்!

22. கவிஞர் அஷ்பா அஷ்ரஃப் அலி
தன்னந் தனியே தவித்தேமனத் துள்நி னைக்க
அன்னை மொழியால் அணைத்தேயிறு கப்பி டித்து
கன்னித் தமிழே கனிந்தேயெனக் குள்கு விந்தே
என்னைத் தொடவே இதமாய்வரும் பாட லெல்லாம்!

23. கவிஞர் இராச.கிருட்டினன்
வானத் தவரும் தினமேதுதிக் கின்ற மன்னன் 
கானத் துடனே துதித்தாலருள் கின்ற கள்வன் 
மீனக் கொடியார் மதுராபதி காத்த மேலோன்
கூனல் பிறையை முடிமேலணி கின்ற கோவே! 

24. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
வான மழைக்குங் கடல்நீர்தனை மாற்றி வைத்துத்
தான மெனவிவ் வுலகேபெறு மாற ளிக்குங்
கான லெனமுன் கரைந்தேகிடுங் கால வாழ்க்கை
வான மெனச்சேர்த் தளித்தேகளித் தேகு வோமே!

25. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
தாயே உனையே தவித்தேமனம் நாட நேரே
சேயே எனவே சிரித்தேஎனைச் சேர மேவும்
காயே எனையே கனியேவெனக் கூறி நாளும்
ஓயா தெனையே உயர்வாக்கிட வாழு வாயே!

26. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
நேராய்த் தெரியும் நினைவேயுனைக் காண வந்தேன் . 
பாரா முகமாய்ப் பறந்தோடியும் போக வேண்டா . 
வாராய் மலரே வளமாகவும்் வாழ வேண்டிச்
சீராய்ச் சிறந்து சினமேவிடு செல்வ வாழ்வே!

27. கவிஞர் விவேக் பாரதி
தன்னந் தனியாய்த் தனிவீதியில் நீயு நானும்
கன்னல் தமிழை நிதம்பாடிநாம் கண்டி டாத
இன்ப மதனில் ! உயிர்க்காதலில் நிற்ப தாக
என்றன் கனவில் எழிலாயொரு காட்சி கண்டேன் !!
★★★★★

2 comments:

Unknown said...

மரபு மாமணி பாவலர் மகிழும்
25 கவிஞர்கள் கலித்தாழிசை
---------------------------------------------
ஈரடிக் கலித்தாழிசை
---------------------------------------
எழுந்தது எழுச்சி பதிந்தனர் கவிதை
விளைந்தது கலித்தாழிசை விருட்சமாய்
…..விளையட்டும் கவிதைகள் விருட்சமாய்

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

மிக்க நன்றி கவிஞரே Raj Krish. அருமையான பின்னூட்டம்.. வாழ்த்துகள்.