பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Nov 2015

6) தேவர் துயரறுத்தான் !


அன்புப் பாவலர்காள் !
வணக்கம் ! இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளிகள்‬ தொடரில் தங்கிச் சந்திக்க வந்துவிட்டேன். இதோ இவ்வாரத்து துளி
6) தேவர் துயரறுத்தான் !

அந்தி மாலை அழகான செவ்வான் விரித்து ஒருபுறம் தன்னை நிகர்த்து யாருமே இல்லையெனச் சிரித்துச் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது. வானை முட்டிக் கிழிக்கும் அளவுக்கு அந்த நிலத்தில் அவ்வளவு பெரிதாய் உயர்த்து ஓங்கி நின்றுகொண்டு இருக்கிறது அவன் அரண்மனை. மேகங்கள் வந்து தூங்கும் மலையினைப் போன்று இருக்கும் அந்த அரண்மனைக் கோபுரத்தில் மயிலினமும் குயிலினமும் கொஞ்சிக் குலவிக் கொண்டிருக்கின்றன.

அப்படிப் பட்ட அந்த மாலை நேரத்தில் அந்த அழகான மாளிகைக்கு உள்ளே கோபக் கனல் கொழுந்து விட்டு எரியும் கண்களோடு தனது பிடரி மயிர் காற்றில் அக்கினிச் சுவாலையை ஒத்து பறக்க அந்தச் சிங்கம் வானைப் பிளக்கும் இடியினை ஒத்த கர்ஜனை செய்துகொண்டு இருக்கிறது. அந்தச் சிங்கத்தின் கை நகங்கள் அத்தனையும் ஈரமற்று காய்ந்து மிகவும் வலிமை பொருந்திய வைரம் போல மின்னுகின்றது.

அந்த சிங்கமானது தனது மடியில் அவனைக் கிடத்தி அழகிய வேலைப்பாடுகள் மிக்குக் காட்சி அளிக்கும் அந்த அரண்மனையினது வாயில் நிலையில் அமர்ந்துகொண்டு கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதினில், மனிதனும் மிருகமும் அல்லாத அந்த சிங்க மனிதன், மனைக்கு வெளியிலும் உள்ளேயும் இல்லாத அந்த நிலைப் படியில் வைத்து, பூமியும் வானிலும் அல்லாது தனது மடியில் கிடத்திக் கொண்டு கர்ஜனை செய்துகொண்டே, அங்கு எட்டு திக்கும் குருதி பீறிட்டுப் பாய அவனது மார்பினைக் கிழித்து உயிரைக் குடிக்கின்றது.

அந்த நேரத்தில் தேவர்க்கும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்த, அந்த பக்தப் பிரகலாதனின் தந்தையான திண்தோள் பொருந்திய இரணியனது இரும்பினை ஒத்த மார்பில் அந்த வைர நகங்கள் பட்டுக் கிழியும் வேளையில் அக்கினிச் சுவாலை புறப்பட்டு தீயாய் எழுந்து கொண்டிருக்கிறது. அந்த சிங்கத்து உருவில் இருக்கும் நாராயணக் கடவுள், தூண்விட்டுப் பிறந்த அந்த சிங்கமுகத் தெய்வம், தேவர்க்குத் துன்பம் தந்துகொண்டு இருந்த அந்த இரணியனைக் கொன்று, தேவர்களது துன்பம் துடைத்து எறிகின்றார்.
ராம காதை எழில்பட உரைக்கும் கம்பன் தனது காவியத்தில் காட்டியுள்ள யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலத்தில் எடுத்துக் காட்டிய காட்சியே இந்த வாரத்துத் தேன்றுளி.
பாடல் :
ஆயவன் தன்னை, மாயன், அந்தியின், அவன்பொன் கோயில்
வாயிலில், மணிக்க வான்மேல் வயிரவாள் உகிரின் வாயின்,
மீயெழு குருதி பொங்க வெயில்விரி வயிர மார்பு
தீயெழப் பிளந்து நீக்கி தேவர்தம் இடுக்கண் தீர்த்தான் !
-கம்பன்

No comments: