பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

16 Nov 2015

4) மண்ணில் விண்ணில்


அன்புள்ள பைந்தமிழ்ச் சோலைப் பாவலர்களே...!
இந்த வாரத்தின் ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திப்பதில் பேரானந்தம் அடைகிறேன். இதோ இவ்வாரத் துளி

4) மண்ணில் விண்ணில்
அது ஒரு சிவந்த காட்சி. வானில் ஒற்றைச் சூரியன் சாயுவதால் ஏற்படும் செந்நிறமும், கீழே மண்ணில் பல்லாயிரம் சூரர்கள் சாய்ந்ததால் ஏற்பட்ட குருதி வெள்ளத்தின் நிறமுமாக அது ஒரு சிவந்த காட்சி. எப்பொழுதும் போல அந்த வேளையும் மாலை என்பதால் தாமரைகள் இதழ் மூடின, ஆனால் அவை சாய்ந்த வீரர்களின் விழித் தாமரையாக இருந்தன
.
அந்தக் களத்தில் போர் முடியும் தருவாயில் கூரான ஒரு ஈட்டி, மார் நிமிர்த்தி நின்ற ஒரு வீரனின் மாரில் குத்திக் கிழிக்கிறது. யானைகளும் குதிரைகளும் மாண்டு கிடக்கும் அந்தப் போர்க்களத்தில், செந்நிற ஓடை ஓடுகின்ற அந்தப் போர்க்களத்தில், பாலையின் வெம்மை அனைவரையும் பாடாய்ப் படுத்துகின்ற அந்தப் போர்க்களத்தில், காற்றைக் கிழித்துக் கொண்டு விருட்டெனப் பாய்ந்திடும் அம்பினைப் போன்ற அதே விசையுடன் அந்த ஈட்டி விரைவாக வந்து அந்த வீரனின் மாரில் பாய்கின்றது.

அந்த ஈட்டி பாய்ந்து அந்த வீரன் சாயும் நேரம், அழகிய பெண்ணொருத்தி கொடுமை மிகுந்த அந்தப் போர்களத்திற்குள் நுழைகிறாள். அவள் தான் அந்த வீரனது மனைவி. தனது கணவன் ஈட்டி பாய்ந்து மண்மீது சாய்கின்ற நேரம், அவன் மண்ணில் விழுந்தால் மண் மகளோடு சேர்ந்து விடுவானோ என்று அஞ்சி, அவனைத் தன் மடியில் விழச் செய்கிறாள்.

மேலும் அந்த வீரனது உயிர் பிரிந்தால் அவன் மேலே சொர்க்கம் செல்லும் நேரம் தேவலோக மகளிர் அவனை வரவேற்று விடுவரே, என்றும் அஞ்சி அவன் உயிர் போகும் முன்னமே அந்த கற்புக்கு அரசி தனது உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அப்படிப் பட்ட அந்த உயர் மாண்பு கொண்ட மனைவி இறந்த பின்பு அவள் மடியில் இருந்து அந்த வீரன் தனது உயிரையும் நீத்து அவளோடு சேர்ந்து விண்ணுலகம் அடைகிறான். அப்படியொரு வீரனைப் பிற மகளிரோடு சேர விடாது தானே இறந்து விண்ணுலகம் சென்று வரவேற்கும் அந்த காதலுக்குச் சின்னம் வேறென்ன இருக்க முடியும்....
இதுவே இவ்வாரத்துத் தேன்றுளி. கொலைகளம் பற்றிக் கொடூரமாகப் பேசும் கலிங்கத்துப் பரணியில் இருந்து சிந்திய காதல் துளி..
பாடல் :
தரைமகள் தன்கொழுநன் தன்உடலந் தன்னைத் 
தாங்காமல் தன்உடலால் தாங்கி விண்ணாட்டு
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் 
ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின் !

No comments: