பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Nov 2015

7) மதுநோக்கும் பொதுநோக்கும்


வணக்கம்
இவ்வாரத்து ‪#‎இலக்கியத்_தேன்துளி‬ யில் தங்களைச் சந்திக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதோ இவ்வாரத் தேன்றுளி.

8) மதுநோக்கும் பொதுநோக்கும்.

காதலியைக் காண அந்தக் கட்டுடல் கொண்ட காதலன் வருகின்றான். அந்தக் காதலியின் கோட்டை வாயிற் காவலர்களை அழகாக ஏமாற்றி விட்டு அவன் நிழைந்துவிட்டான். அந்தக் கன்னி உரைந்திருந்த அந்தப்புரத்தின் கன்னி மாடத்தை அவன் அடைந்து அவளைக் கண்கொண்டு தேடுகின்றான்.
அந்த அழகிய விதர்ப்ப நாட்டின் இளவரசியான அவனது காதலியை அவன் தேடிக் களைக்கையில் அவனது கண்களுக்கு அவளது ஒளி பொருந்திய எழில் மிகுந்த கண்கள் தென்படுகின்றன. கண்ட மாத்திரத்திலேயே அந்தக் காதலன் வீழ்த்து நொறுங்கிவிட அவனது கண்கள் மட்டும் அவளது கண்கள் விட்டு நீங்காத அளவில் நின்றுகொண்டிருக்கிறன.
அந்த நேரத்தில் அங்கே அழகிய குவளை மலரிலே புதிதாக ஒரு செம்மைத் தாமரை மலர்ந்து குலுங்கியது. அதனைப் போன்றே அங்கே செந்தாமரை மலரில் குவளை மலர் பூத்தது. என்னே அதிசயம் ! அது எப்படிக் குவளை மலரில் தாமரை மலரும்? தாமரை மலரில் குவளை பூக்கும் ? ஆம் அது உண்மை !!
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வேளையில் அந்தக் காதலியது குவளை மலரினை ஒத்த இரு விழியில் அந்தக் காதலனது தாமரை மலர்க் கண் மலர்ந்தது. அவனது செந்தாமரைக் கண்ணில் அவளது குவளைக் கண்கள் மலர்ந்தது.
மதுவினை ஒத்த அந்த தேனைச் சுவைக்க மாலையில் கட்டிய மலர்களை மொய்த்துக் கொண்டிருக்கும் வண்டுகள் நிறைந்த மாலையை அணிந்த தாரனான காதலனும் நிலாவினைப் போன்ற பிறை நெற்றி கொண்ட அந்தக் காதலியும் பொதுநோக்காக தங்களைத் தாங்கள் நோக்கும் பொழுது தாமரையில் குவளையும் குவளையில் தாமரையும் மலர்கின்றன.
கண்ணோடு கண்கள் கலப்பதனை இப்படி வருணிக்கும் நமது புகழேந்திப் புலவன் அந்தக் காதலனான நளனையும் காதலியான தமயந்தியையும் மலர்கள் பூக்கும் கொடியினைப் போலத் தனது நளவெண்பாவில் பாவித்திருக்கிறான்.
இதுவே இவ்வாரத்துத் தேன்துளி, காதல் சிந்திய தேன்துளி, கவிதை சிந்திய தேன்துளி, கற்பனை சிந்திய தேன்துளி, காவியம் சிந்திய தேன்துளி.
பாடல் :
தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப் 
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு 
மதுநோக்கும் தாரனும் மதிநுதலாள் தம்மில் 
பொதுநோக்கும் எதிர்நோக்கும் போது !
-புகழேந்திப் புலவன்

No comments: