பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

28 Nov 2015

பாட்டியற்றுக - 14


நண்பர்களே.! கவிஞர்களே.! 

அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 14" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
பாட்டியற்றுக - 14
கலித்தாழிசை
********-*-*****
ஒருவழியுங் காணாமல் ஊமையராய் வாழும்
தெருவோர ஏழைகளின் சிக்கலினை ஆய்ந்தே
உருப்படியாய் வாழ உதவுகின்ற பாட்டே
உயர்தமிழ்ப்பா வேந்தர் உரைத்திட்ட பாட்டே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***

கருத்தூன்றுக.:
வெண்பா, ஆசிரியப் பா, பாவினங்களைக் கடந்த பயிற்சிகளில் கண்டோம். இனி நாம் "கலிப்பா "வின் இனங்களான துறை, தாழிசை, விருத்தம் ஆகியவற்றைக் காணலாம்.
"கலிப்பா வகை"யை இப்பயிற்சியில் கற்பது சற்றே கடினம். அவற்றை "முயன்று பார்க்கலாம் " பயிற்சியில் கற்கலாம்.
மேற்கண்ட பாடல் "கலித்தாழிசை" ஆகும்.
பொது இலக்கணம்.
*அடிவரையறையின்றி,
*அனைத்து அடிகளும் மோனையால் இணைந்து,(பொழிப்பு மோனை 1'3' சீர்களில் அமைவது தேவை.
* மற்ற அடிகளைவிட ஈற்றடி அதிகச் சீர்களைப் பெற்றும்,
★ஒருபொருள்மேல் ஒருபாடலோ, மூன்றடுக்கியோ வருவதும்,
* அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்றும்,
* ஈற்றடி மிக நீண்டிருப்பின் அதை இரண்டாக மடக்கி எழுதும் போது, எதுகை வேண்டா, ஆனால் மோனை கட்டாயம் பெற்றும்,(சான்று பாடலில், உருப்படியாய், உயர்தமிழின் என்ற அடி மோனை பெற்று ஓரடியாய் வந்துள்ளமை காண்க)
*மடங்கிவரும் அடி மடக்காய் வருவதுமுண்டு.(சான்று பாடலில் பாட்டே, பாட்டே) 
*வெண்டளை பயின்ற சீர்களாலும், அடிகளாலும் வரலாம்.(சான்று பாடலில் காண்க) 
* ஈற்றுச்சீர் ஏகாரம் கட்டாயமில்லை.
இவ்விலக்கணங்களைப் பெற்று வருவது "கலித்தாழிசை " ஆகும்.
இவ்வகையான தனித்து வரும் கலித்தாழிசை ஒன்றை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

No comments: