பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

28 Nov 2015

பாட்டியற்றுக : 14 இன் தொகுப்பு


அன்பு நண்பர்களே! 14 வகை (அதற்கு மேலும்) யாப்பு வடிவங்களை இப்பகுதியில் நாம் அறிந்துள்ளோம். பலரும் இவற்றில் முழுமை பெற்றுள்ளனர் என்பதில் பெற்ற தாயின் பேருவகை கொள்கிறேன். (ஈன்ற பொழுதின்..?.) இன்னும் நிறைய உள்ளன. கற்போம், மகிழ்வாக.
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த இந்தப் பயிற்சி அனைவருக்கும் மிகுந்த நிறைவைக் கொடுத்திருக்கும். மிக எளிமையான யாப்பு வகையிது.
எத்தனை ஓசை நயம்! எத்தனையெத்தனை கருத்துகள்.! எவ்வளவு விவாதங்கள்! எண்ணுந்தோறும் இன்பம்! இன்பம்!! தொகுப்பைப் படித்துப் பாருங்கள் " யாம் பெற்றுள்ள இன்பத்தை நீங்களும் பெறுவீர்.இத்தொகுப்புக் கவிஞர்கள் அனுப்பிய வரிசையின்படியே வெளியிடப்படுகிறது. தரவரிசைப் படியன்று.வாழ்த்துங்கள்! கருத்தைக் கூறுங்கள்! பகிருங்கள்.
பயிற்சியில் கலந்து கொள்ளாத மற்ற உறுப்பினர்கள் இதையாவது செய்யலாமே!
பாட்டியற்றுக -14

கலித்தாழிசை

1. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
வான்மழை பெய்தாலும் வாழ்ந்திட நீரில்லை
ஏன்சொல் இந்த இழிநிலை நீர்நிலையை
தான்நாம் மறித்து தயங்காமல் கட்டினோமே
வான்உயர் அங்காடி வேளச்சேரி
வாடுதே தண்ணீரில் வேளச்சேரி!

2. கவிஞர் இளம்பரிதியன்
இனமென்றும் தம்மதம் என்றெண்ணித் துள்ளும்
எனதென்றும் தன்னல இன்பத்தில் மூழ்கும்
மனத்ததையும் மாசறவே மாற்றும் தமிழே!
மாக்களையும் மக்களென மாற்றும் தமிழே!!

3. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
ஆழியுள்ளே உறையும் அழகுநிறை மீனினங்காள்
வாழியென்றே உரைத்து வண்டமிழைப் பாடுகையில்
ஊழி தானு மொழியுமே
~ உயர்வு பெறுமென் மொழியுமே!

4. கவிஞர் வள்ளிமுத்து
கரும்பும் இனிக்கும் கவிதை இனிக்கும்
திரும்பும் திசையெலாம் தீந்தமிழ் தித்திக்கும்
விரும்பும் விழியாள் விரைந்தருகில் வந்தே
தரும்முத்தம் பாகினும் தேனினும் பாற்கடல்
தந்த அமிழ்தினும் தித்திக்குமே..!

5. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
என்பேதை அன்புடையன் இவனென்று ணர்ந்திலங்கா
என்பேதை? அன்புடையள் என்றாலும் மனமில்லாள்
இன்போ?தை இன்னலிதோ? என்றறியேன் மனத்தில்லாள்
எந்நேர முந்தவமாய் இயல்கின்றேன் மனத்தில்லாள்! 

6. கவிஞர் பசுபதி
இச்சை ஏதுமின்றி ஈந்தார் இலங்கைக்கே
கச்சத்தீ வென்னும் கரையோர நம்தீவை
பச்சைத் தமிழருக்கே பங்காய் அளித்தாரே
கொச்சைச் சிங்களரரோ கொன்றே குவிக்கின்றார்
கோதில் தமிழரையே கொன்றே குவிக்கின்றார்!

7. கவிஞர் சுந்தரராசன்
மன்னுதமிழ்ச் சோலை மலர்க்கவிஞ ரெல்லோரும், 
மின்ன உரமிட்டு மேன்மொழியால் சீராட்டிப்
பின்னும் களைதிருத்திப் பீடுறச்செய் பாவலர்போல்
கன்னற்பா செய்வோம் கலித்தா ழிசையாலே
கன்னி மொழிக்கேற்ற மந்தக் கலித்தா ழிசையாலே! 

8. கவிஞர் அர.விவேகானந்தன்.
பாழும் வறுமைதனைப் பாங்கா யொழித்திங்கு
வாழுகின்ற வாழ்க்கையினை வண்ணமென வாக்கிடவே
சூழும் துயரைச் சுகமெனவே மாற்றிடுவோம்
சுட்டெரிக்கும் ஏழ்மையதைச் சூளுரைத்தே மாற்றிடுவோம்!

9. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்.
உளிக்குப் பதுங்கும் ஒருகல் சிலையாய்க்
களிப்பூட் டுமோசொல் கனியவளே வாழ்வில்
சுளிக்கும் வகையினில் சொல்லம் பினாலே
சளைக்கச் செயல்வாரைச் சற்றும் மதியாரே 
சாதிக்க வேண்டி முயலும் மதியாரே!

10. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
கொடையில் குருதியைக் கொண்டவர் தாமும் 
தடையு மகன்றதோர் தக்கதொரு வாழ்வை 
இடையில் வருகிற இன்னலைத் தாங்கி 
விடையாய்த் தருவர் விரும்பியும் ஏற்போம் 
விதந்தே அழைத்து விரைந்துமே ஏற்போம் .!

11. கவிஞர் அழகர் சண்முகம்
தூயபாலன் கூப்பிடவே தூண்பிளந்து வந்ததும்
மாயமானைத் தேடியோடி மன்னவியை விட்டதும்
காயமுற்ற கர்ணனிடம் காப்பவற்றைக் கேட்டோன்
கருணையுடன் காத்துவரும் கள்ளழகர் மாலே!

12. கவிஞர் வீ.சீராளன்
தன்னலத்தைக் காத்திடுவோர் தந்ததில்லை நீதி 
இன்னலதைக் கண்டயர்ந்தால் ஏற்றமிங்குப் பாதி 
என்னுயிரில் ஒன்றுமில்லை என்றுரைக்கும் கண்ணே
இன்னகையால் நெய்துவிட்டால் ஏற்றம் வாழ்வு கண்ணே !

13. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்
ஒருதுளியாம் நீரதனில் ஓரணுவாய் நீந்திக் 
கருத்தொட்டே, நாளொன்றில் கண்மறைவாய் அன்னை
விருப்புடனே உற்றவொரு வெந்துயரம் மாற்றிக்
கருவிழிய வந்து காலிடையில் வீழ்ந்தழுத.. 
...காலமுதல் அந்தோ; கட்டியதாம் என்னை இருவினையே!

14. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
மலருமுன்னே வேலிபோல் முள்ளையே வைப்பாய்
மலரே அதன்பின்னே மனத்தினைத் தருவாய்
மலருன்னைத் தான்பறிக்க மானிடரும் வருவார்
குலமகளின் கூந்தலிலே கொத்தாக வைப்பார்
கடவுளவர் சந்நிதியில் கும்பிட்டு வைப்பார்!

15. கவிஞர் சியாமளா ராஜசேகர்
பாட்டெழுது மாவலினால் பைந்தமிழ்ச் சோலையிலே 
நாட்டமுடன் சேர்ந்திட்டேன் நன்றியுடன் கற்றிடுவேன் 
காட்டாற்று வெள்ளம்போல் கற்பனையும் பொங்கிடுதே 
காகிதத்தில் தீட்டிடவே காதலும் பொங்கிடுதே !

16. கவிஞர் சேலம் பாலன்
சின்னத் திரையோடு செல்பேசி கள்யாவும் 
கன்னல் இளம்வயதுக் காளையைக் கன்னியை முன்னாளில் இல்லாத 
மோகவலைக் குள்தள்ள, இந்நாளில் காப்பாற்றஇப்பவியில் யாரேனும் தோன்றுவரோ?

17. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
வாகனங்கள் சீறிவரும் வீதிகளில் பள்ளம்! நோகவைக்க சேருமதில் நீர்பாயும் வெள்ளம்! வேகமாக சீர்செய்ய வேண்டுமதை அரசே! ஆகவிரை வாகவரின் அறைவோமே முரசே !அகிலமெலாம் எட்டிடவே அறைவோமே முரசே!

18. கவிஞர் பரமநாதன் கணேசு
ஒற்றுமையாய் வாழ்ந்திடவும் ஓங்குபுகழ் சேர்ந்திடவும்
குற்றமற்ற கொள்கைதனைக் கொள்ளமனம் நின்றிடவும் 
கற்றவர்கள் சொல்கேட்டுக் கால்பதித்துச் சென்றிடுவீர்!
காலமெல்லாம் நல்வழியில் கற்றறிந்து சென்றிடுவீர்!

19. கவிஞர் குருநாதன் ரமணி
புழுவோ பறவையோ புன்மைக் கொசுவோ
வழுவில் மரமென்றோ வாழநீர் பூமி
தழுவும் உயிரோ சகலமும் தீபத்
தரிசனம் காண்பதில் நற்பிறப் பெய்துகவே.!

20. கவிஞர் இரா.கி.இராஜேந்திரன்
திருமுகத்தைக் காணாமல் செங்கமலக் கண்ணன்
இருபுறமும் பார்த்தவனும் ஏங்கியவன் குழலால்
இன்னிசையால் அழைத்ததினால் எழிலரசி ராதை
சொன்னவாக்குத் தவறாமல் சுந்தரியும் வந்தாள் மகிழ்வோடே!

21. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
காத்திருந்து காத்திருந்து கண்ணுறங்க வில்லையடி
பூத்திருக்குங் காதலினால் பூவிழியுன் னெண்ணமடி
காத்திருக்க வேண்டுமெனில் காலமெலாங் காத்திருக்கப்
பூத்திருக்கு காதலெனப் பூவிதழால் புன்னகைத்தா லாகாதோ ?

22. கவிஞர் நாகினி கருப்பசாமி
இன்னலைத் தீர்த்தே இனிமையைக் கூட்டிடும்
புன்மைகள் இல்லாத புண்ணிய வாழ்வதன்
நன்மையின் ஏற்றம் நலிவுறாமல் காத்திட
அன்பெனும் கோவிலில் ஆர்வத் திரியேற்றி
என்புருக நெஞ்சமதில் ஏற்றும் கருணைதான்
என்றுமே வாழ்க்கை எழிலின் நகையே!

23. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
தேரோடும் வீதியெல்லாம் தெப்பக்குளம் ஆனதிங்கே
காரோடும் சாலையெல்லாம் கால்வாயாய்ப் போனதிங்கே
ஊரோடு சேராதோர் ஊர்நன்மை நாடாதோர் 
பாராள வந்ததினால் படுந்துன்பம் இதுவென்று
பாழுமக்கள் தெளிவாரா இது-வென்று?

24. கவிஞர் விஜயகுமார் வேல்முருகன்
காசையே மேலாய்க் கருதும் உலகினில் 
ஆசையே இல்லாமல் ஆற்றலுடன் வாழ்பவராய்ப் 
பூசைதான் செய்கின்ற புண்ணியக் கோயிலின் 
ஓசையால் வாழ்வினில் ஓங்குதல் நன்றாகும் . 
ஒற்றுமையால் மக்களிடம் ஒன்றுதல் நன்றாகும் .!

25. கவிஞர் இராச.கிருட்டினன்
தடுத்திடக் கேடயம் தானிருந் தாலே
நடுக்கமும் இன்றி நலமில செய்வார்,
அடுத்தவர் தம்மை அழுத்திடப் பார்ப்பார்!
இடுக்கண் வருமே எதிர்கா லமதில்
இதனால் இவர்க்கே எனவுண ராரே!
★★★★★

No comments: