பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

25 Dec 2015

எளிதாகக் கற்பிப்பீர்!


இலக்கணத்தைக் கற்பதற்கு முயன்றி டாமல்
         இளையோர்கள் அதைவேம்பாய் எண்ணிக் கொண்டு
விலக்குகிறார்.,விலகுகிறர் மரபை விட்டு.
         விளக்குதற்கென் றாரேனும் இருந்தால் தானே
துலங்குவழி கண்டுணர்ந்து கவிதை செய்வார்?
         துணிவாக இலக்கணத்தைத் தேடிக் கற்பார்?
கலங்கரையின் விளக்காகக் கற்பிப் போர்கள்
        கலக்கத்தை விரட்டுதலை முதலாய்க் கொள்க!


'தமிழ்மொழியோ கடலாகும் அதனுள் நீந்தித்

         தளராமல் முத்தெடுத்தல் அரிதே ' என்பார்
அமிழ்ந்திடுவாய் என்றச்ச மூட்டி விட்டே
        அதிலிறங்கி நீந்தென்றால் எவரும் வாரார்.
அமிழாத வகையிடுப்பில் கயிற்றைக் கட்டி
        ஆழமிலாப் பகுதியிலே நீந்த வைத்தே
இமையாகக் காத்தபடி பயிற்று வித்தால்
        இமிழ்கடலுள் இறங்குவதும் எளிதே யன்றோ?

தாய்மடியை விட்டிறங்காக் குழந்தை கட்குத்

        தாளித்த உணவுகளா செரிக்கும்? நாளும்
வாய்த்திட்ட படிநிலையில் ஊட்டி னால்தான்
       வருந்தாமல் அக்குழந்தை வளரும்! வித்தைப்
பேய்மழையா மரமாக வளர்க்கும்? நெல்லும்
       பெய்யுமழை அளவானால் அரிசி யாகும்.
ஏய்க்காதீர்...ஆப்படித்து விரட்டி டாமல்
       எளிதாக இலக்கணத்தைக் கற்பிப் பீரே!

பாவலர் மா. வரதராசன்  
★★★

1 comment:

பரமநாதன் கவிதைகள் said...

பாவலரே! உண்மையை அப்படியே உரைத்தீர்கள்.

கணேசு பரமநாதன்