பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 10 (அறுசீர் ஆசிரிய விருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:10 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai.blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--10
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
1. கவிஞர் தர்மா
நன்நெறி கொண்டோர் நட்பினைக் கொண்டால் 
நலமினி யுண்டாகும்.. 
புன்னகை சிந்தும் பூக்களி னாலே 
புவியினி நன்றாகும்.. 
வன்மமுங் கொண்டால் வருத்தமும் விளைந்தே 
வாழ்வினிக் கெட்டிடுமே... 
என்றுமே பொய்யை எடுத்தியம் புதலிங் 
கிழப்பினைத் தந்திடுமே! 

2. கவிஞர் குருநாதன் ரமணி
வெண்ணிற ஒளியிற் பந்தென நின்ற
விண்ணில விறங்கியதோ
மண்ணுறப் பரவ ஆர்ந்ததோ அன்னம்
மாமணி மேனியிலே
கண்ணுறும் உருவம் எங்கிலும் வெண்மைக்
காப்புறக் காப்பருள்வான்
அண்ணலின் நாமம் ஐந்தெழுத் தாக
அகமுறும் நாளிதுவே!

3. கவிஞர் பொன்.பசுபதி
என்னுடல் தன்னில் வந்துள நோய்கள் 
என்றுதான் விலகிடுமோ
உண்டிடும் மருந்தே உனக்கெதிர்
விளைவா(ய்) 
உறுமெனச் சொல்கின்றார்
கண்ணென என்னைக் கருதிடும் முருகா 
கைவிடா தெனைக்காப்பாய்
எஞ்சிய நாளில் என்மனத் துயர(ம்) 
இல்லையென் றாக்குவையே.!

4. கவிஞர் சுந்தரராசன்
ஆடிய பாதம் தூக்கிய வாறே
அருள்மழை பொழிபவனே!
நாடிடு மன்பர் தீவினை யாவும்
நசித்திடு நாயகனே!
தேடிடு வோர்தம் உளக்குகை தோன்றித் 
திருவருள் தேசிகனே!
வாடிடுஞ் சிறுவன் வாட்டமும் நீங்க
வந்தருள் புரிகுவையே!

5. கவிஞர் விவேக்பாரதி
தெய்வத மென்னுஞ் சத்தியைப் போற்றித் 
தேவைதி னங்கோரி 
உய்திடு மெண்ண முற்றிடல் நன்மை 
உண்மையி தென்றாலும்
செய்வினை தன்னைச் செய்யுதல் விட்டுச் 
செயசெய வென்றோதிப் 
பொய்வழி பத்தி காட்டிடின் துன்பம் 
போய்விழுந் தழிந்திடுமோ ???

6. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
உண்டியி லாமல் உலகினி லலைவோர் 
உன்னெதிர் நிற்கையிலும் 
நொண்டிய படியும் நோய்நொடி யுடனும் 
நொந்தவர் காண்கையிலும்
கண்களை மூடிக் கடந்துவி டாமற்
கைகொடுத் தன்னவரின் 
கண்களைத் துடைத்தே அன்பினைக் காட்டு !
கடவுளின் விருப்பமதே !

7. கவிஞர் ரமேஷ் மாதவன்
ஆலிலை மேலே அறிதுயில் செய்யும் 
அழகிய மணவாளா,
பீலியைத் தலையில் சூடிய எங்கள் 
பீடுடைப் பொருளோனே,
வாலியைத் தருமம் காத்திட வேண்டி 
வதைத்தநல் குணநாதா,
பாலினை வழங்கும் ஆவினைப் போலே 
பரமனே அருள்வாயே!

8. கவிஞர் பரமநாதன் கணேசு
ஒசையே யின்றி உள்மனம் தன்னில்
ஓட்டைக ளாயிரமாம்
ஆசையில் வீழ்ந்த ஆடவர் நெஞ்ச
அறைகளில் குப்பைகளாம்
மாசையே உயர்வாய் மதித்திட மனமும் 
மயங்கியே யலைகிறதாம்
மீசையில் நரையோ மிடுக்கென அமர்ந்தும்
மீளவும் முடியலையே!

9. கவிஞர் இரா.கண்ணன்
இழிநிலைப் பொறுத்தே இத்தனைக் காலம்
இருப்பது வாழ்வாமோ?
விழிகளைத் திறந்தே உறங்குவோ மதுதான்
விடுதலை மருந்தாமே!
உழைத்திடும் வர்க்கம் உரிமைகள் வெல்ல. 
உடனடித் தீர்வாமே!
விழித்திடு தோழா! வென்றிட உரிமை
விடியலும் நமக்காமே!

10. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
அன்பினி லாளும் சத்தியே என்று
மாதியாய் நிற்பவளே !
என்றுமே எம்முள் நிறைந்துமே வாழ்வி 
லேற்றமே தருபவளே !
நன்மைகள் பலவும் நலமுடன் தந்து 
நல்லறம் காப்பவளே !
மன்றினில் தங்கி மகிமைகள் செய்யும் 
மாபெரு தாயவளே !

11. கவிஞர் கவிஞர் சேலம்பாலன்
இந்திய நாட்டின் பிரதமர் மோடி
இயற்றிய சட்டத்தால்
நொந்தனர் ஏழை அந்தநாள் செலவை
நோக்கியே அல்லலுற்றார்
சந்ததம் கறுப்புப் பணத்தையேச் 
சேர்த்தோர்
சத்தியம் மருள்கின்றார்
இந்தநல் திட்டம் இறுதியில் வெல்லும்
இந்தியா வலுப்பெறுமே!

12. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
கல்லினால் கட்டும் கோயிலில் தெய்வம் 
காலமும் இருந்திடுமோ 
கல்வியால் ஞானம் நெஞ்சினில் புகட்டிக் 
கடைவரை நிலைத்திடவும் 
சொல்லினால் கட்டி எழுப்பிடல் ஆகும் 
தொன்மறை உரைத்திடவும் 
இல்லற மக்கள் மனதினில் கோயில் 
எழுப்புதல் சாத்தியமே! 

13. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
அன்பினா லெல்லாஞ் சிறப்புறுந் தோழா!
அதுதராப் பயனுண்டோ ?
இன்பமாய் வாழ, என்றுமே இன்சொல்
இயம்பிடு, மனந்திறந்து.
துன்பமே வாரா, காதலாய்ப் பேசத்,
துயரமும் வந்திடுமோ ?
நன்மையே வந்து, நம்மிடம் தங்கி, 
நலந்தரு மறிவாயே!

14. கவிஞர் இளம்பரிதியன்
நெற்றிதன் பொட்டாய்த் திகழ்திரு நாட்டை
நிலைகெட வைத்தாரே!
புற்றுறை அரவாய்ப் பொய்மையில் ஊறிப்
புகழ்கெடச் செய்தாரே!
நற்றவர் உழைப்பை நாயெனத் திருடி
நாட்டினைக் கெடுத்தாரே!
கற்கநந் தமிழாற் கயமையை வெல்வோம்
காசினி மாசறுமே!!

15. கவிஞர் மதுரா
சத்திய முணரச் சாத்திய முண்டோ
சடுதியில் அருள்வாயே..'
புத்தியி லுறைக்க செய்வது போலே
புரிந்திடல் தருவாயே..
முத்தியை யருள வேண்டுமே
இறையே
முன்வினை தவிர்ப்பேனோ..
நித்தமும் வேண்டி நெடுந்தவம் செய்தால் 
நீயருள் செய்வாயோ?

16. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
ஆண்டுகள் கடந்து வேற்றவர் நாட்டில் 
ஆசையாய் வாழ்ந்திடினும். 
ஈண்டநற் றாயின் நிழலடி வாழ்ந்த 
இனிமையைத் தந்திடுமா 
நீண்டதோர் சரிதை படைத்திட நினைத்த 
நினைவுகள் வீணெனவே
மாண்டிடக் கனவு பலித்திடும் காலம் 
மறுபடி வந்திடுமோ!

17. கவிஞர் முத்துக்குமார் பாலசுந்தரம்
ஒலிக்கிற ஒலியில் குறினெடி லுணர்ந்தே
ஓதினர் இலக்கணமே
பலுக்கிற சொல்லின் ஆதியில் அமைந்து
பாங்குடன் தாம்மாறில்
சிலவினை பெயராம் சிலபெயர் வினையாம் 
தேர்ந்தவிம் முறையொடு-ஆங்
கிலமொழி தனிலும் இப்படி யாகக்
கிளக்கிற சொற்களுண்டே!

18. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
நல்லவர் தனையே நலத்துடன் நாடி
நட்பினைக் கொண்டிடுவோம்
நல்வினை புரியும் நலமதை யீயும்
நல்லதோர் நட்பதுவே அல்லவை போக்கு மறமதைச் சேர்க்குl
மன்பினைப் போற்றிடவே
வெல்லவே பகையை வெற்றியைத் தரவே
வேண்டுமே நல்லநட்பே. |

19. கவிஞர் சோமுசக்தி
சூரராய் சாரைத் தூக்கியே வீசி
சோவியத் கண்டனரே
வீரமாய் வர்க்கப் போர்தனில் பாய்ந்து
வென்றநம் பாட்டாளி
பாரது மீதில் பல்கிய ஆற்றல்
பார்த்தவர் போற்றினரே
வேரது மாறா வெந்தழல் மாற்றம்
வேர்விடும் ஒர்நாளே !

20. கவிஞர் சாமி சுரேஷ்
தொழுதுநீர்க் கேட்டும் தருகிலார் நம்மைத்
தொழும்பராய் நினைக்கின்றார்
அழுதுகேட் டினியா வதொன்றுமில் வாடா
ஆற்றலைக் காட்டிடுவோம்
எழில்தமிழ் நாட்டெல் லையிலே கூடி
எழுப்புவோம் நீள்வரை;நா
மெழுதுவோம் புதிய சரித்திரம் இனியு
மிரப்பதில் நீருக்கே!

21. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
தேடியே பறந்து பூக்களை நாடித் 
தேன்மது குடிக்கின்றாய்.
நாடியே தும்பி நலமிகக் கேள்வி
நானுனைக் கேட்கின்றேன். 
பாடியே இசையில் மயங்கிட வைப்பாய்
பயன்மிகு பூவொன்றைச்
சூடிடச் சொல்வாய் என்னவள் தலையில்
சுகம்பெற மணந்திடவே.

22. கவிஞர் சியாமளா ராஜசேகர்
வெண்மதி வானில் முகிலினுள் மறைந்து 
விரும்பியே விளையாடும் !
எண்ணிலா விண்மீன் தோழிய ருடனே
இனிமையாய்க் கதைபேசும் !
மண்ணுள குளத்தில் தன்முகம் பார்த்து
மகிழ்ச்சியில் களித்திருக்கும் !
நண்பனின் வரவில் நழுவிட மெல்ல
ஞாயிறும் உதித்திடுமே !

23. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
கல்வியே வாழ்வில் நவம்பல தருமே
கற்றுமேயுயர்ந்திடுவோம்
நல்வினை செய்யு மூழ்வினை யகற்றும்
நாடுவோம் வாழ்வினிலே.
பல்வகைத் தொண்டு செய்யவே வுதவும்
பாங்குடன் தரணியிலே
செல்வமே பெருக்கிச் சீருடை வாழ்வைச்
சேர்ந்துமே யளித்திடுமே

24. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
வற்றிய குளத்தில் மீனினம் எல்லாம்
வாடிட நாட்டினிலே
முற்றிய நாற்றும் வயலிலே பட்டு
முடங்கிடக் காட்டினிலே
பற்றிய நோயில் உழவனும் செத்துப்
பகவனில் கரைந்திடவே
சுற்றமும் நட்பும் சேர்ந்துமே அழுது
துயரிலே புலம்பினரே

25. கவிஞர் புனிதா கணேஷ்
வானமும் இருண்டு வருமுகில் திரண்டு 
வானிலே மின்னலதே 
வானதிற் கீற்றாய் விண்வெளி பரப்பி 
வாரிய விண்வெளிச்சம் 
கானகம் எங்குங் கடுமிடி முழங்கக் 
காட்டுயிர் கலங்கிடவே
காசினி மீதில் கனமழை கொட்டக் 
காடதும் தோய்ந்ததுவே!

26. கவிஞர் சுந்தரி தேவன்
வேய்ங்குழல் நாதம் வீசிய தென்றல் 
விளம்பிய துன்பெயரே 
வாய்த்தநல் வாழ்க்கை வளமது பெறவே 
வரமருள் குணநாதா 
சாய்த்திடு வாயே சஞ்சல மதனை
சங்கடந் தீர்ப்பவனே 
பாய்ந்துநான் தினமும் உனதிரு பாதம் 
பற்றிட அருள்வாயே! 

27. கவிஞர் க.அர.இராசேந்திரன்
வாடியே பயிர்கள் வருத்தமோ டழவே 
வான்துளி மண்ணிறங்கித்
தேடியே பயிர்க்கால் பாய்ந்திடத் துளிர்க்கும் 
தினம்தினம் வயலதிலே
ஓடியே வரும்பாற் கீரிகள் முயல்கள் 
உறங்கிட நிழல்தேடி
நாடியே வந்து பெண்குயில் பாட
நடமிடு வாய்மயிலே..!

28. கவிஞர் அய்யப்பன்
கார்த்திகை வந்தும் மழையினைக் காணோம் 
கண்மழை பெருகியதே 
கார்(த்)திகைத் தெங்கே முகவரி தேடிக்
காற்றினில் கரைந்ததுவோ ?
பார்(த்)திகைத் திங்கே பறப்பன வெல்லாம்
பாவமாய் அலைகிறதே 
நேர்த்தியாய் முகிலே நீபொழி வாயே 
நிலங்களும் செழித்திடவே
★★★

No comments: