பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

11 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 4 (வெள்ளொத்தாழிசை.)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:4 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய புலவர் #செந்தமிழ்ச்சேய் அவர்கள் உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchokai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--4

(வெள்ளொத்தாழிசை.)
1. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
இயற்கை தருகின்ற இன்பத்தை நாளும் 
பெயர்க்கும் வகைசெயல் பேரழிவா மென்றும் 
தயக்கமு மேனோ தவிர் .

வியக்கு முலகின் விடிவெள்ளி தன்னை 
மயக்கமும் வேண்டாம் மலர்ந்திடச் செய்யத் 
தயக்கமு மேனோ தவிர் .

செயற்கை நிறைந்தால் செழுமை குறையு 
முயர்ந்த நலனு முலகினில் கிட்டா.
தயக்கமு மேனோ தவிர் .

2. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
ஓரிடம் வீழ்ந்தநீரை ஒன்றுசேர்த்துச் சக்திதந்து
சேரிடம் சேருமாறு சேமமாய்ப் பாயவைத்துப்
பாரிடம் வாழவைக்கும் ஆறு !

நீரிட முள்ளஉப்பு நீங்கிடவே ஆவியாகிக்
காரிடத்தில் மாறிமண் கண்டமாரி ஆழிசேரப்
பாரிடம் வாழவைக்கும் ஆறு !

பேரிடர் வந்துநீர் பீறிட்டு முன்செல்ல
நேரிடும் போதினில் நீருக்கோர் பாதையாய்ப்
பாரிடம் வாழவைக்கும் ஆறு !

3. கவிஞர் கணேசன் ராமசாமி
காலை யெழுந்து கடும்வெயிலால் தாக்கிப்பின்
மாலை மறைகையில் மாந்தர்க் கிதந்தரும்
மாலை மயங்குவதைப் பார்

காலையில் தோன்றுதலால் காடுகரை செல்வோர்க்குக்
காலைக் கடனுணர்த்துங் காவலன் கார்முகிலில் 
மாலை மயங்குவதைப் பார்.

காலை விழித்தெழுங் கால்நடை புள்ளினம்
மாலை தி்ரும்பு மகிழ்ந்து கரணியம்
மாலை மயங்குவதைப் பார்

4. கவினப்பன் தமிழன்
கன்னிறை யம்ம களியுளங் காருடற் 
சின்மென்பன் கைவீசித் தீந்தும்பி மொக்கரண்
கொன்றன்ன செய்தான் கொளை

வன்னுளம் யாழ வளிச்சிவிகை வானூர்ந்து
தன்மனைசென் றேகுந் தகைமுகின் மாமுகடு
தின்றன்ன செய்தாள் சிறை

என்னவோ ஐய இடையிடாப் பூம்பொதும்பில்
தென்றல் திறக்கத் திளைத்தநிலா வொற்றாடி
நன்றன்ன செய்தாள் நகை! 

5. கவிஞர் குருநாதன் ரமணி
துள்ளியெழும் ஆதவனின் தூண்டுகதிர் கண்வழியும்
புள்ளினங்கள் வைகறையில் பூக்களென மாங்கிளையில்
சிள்ளெனவே தேடும்தேன் சிட்டு!

பள்ளமுறும் நீர்வாய்க்கால் பாய்ந்துவரும் சோலையிலே
துள்ளியெழும் மீனொன்றைத் தொட்டுவிழி தானலையும்
சிள்ளெனவே தேடும்தேன் சிட்டு!

வள்ளல் இயற்கையை வண்டமிழில் பாடுகிறேன்
அள்ளியவள் கோலமெலாம் ஆர்ந்துவரும் சொல்லிசையின்
சிள்ளெனவே தேடும்தேன் சிட்டு!

6. கவிஞர் விவேக் பாரதி
வண்ண மனமுண்டு வார்கருமை ! எங்களவர் 
எண்ணத் துயர்வுண்டு ஏக்கத்திற் கிந்நாளில் 
தண்ணீ ரிலையே தவிப்பு !

உண்ண உணவில்லை ஊணுணவு மாக்கிடவே 
மண்ணி லிடமில்லை மண்ணிடந்தான் விட்டாலும் 
தண்ணீ ரிலையே தவிப்பு !

கண்ணிற் றுளியுண்டு காயத்தி லேவியர்வை 
வெண்ணீர்த் துளியுண்டு வெள்ளைநெல் சாப்பிடத்தான் 
தண்ணீ ரிலையே தவிப்பு ! 

7. கவிஞர் தர்மா
முயற்சிகள் செய்து முளைக்கும் விதையைச் 
செயற்கை முறையினில் செய்வதும் தீதே 
இயற்கையோ டொன்றி இரு...!

சுயமாய் வளர்ந்து சுழலும் புவியைத் 
தயவுகூர்ந் தெங்கும் தரங்கெடுக் காதே....! 
இயற்கையோ டொன்றி இரு...!

அயலார் மருந்தை அளவோ டருந்து.. 
முயன்றிங்கு பார்த்திடு மூலிகைக ளுண்டே
இயற்கையோ டொன்றி இரு..!

8. கவிஞர் ரமேஷ் மாதவன்
பளபளக்கும் மெல்லிதழ்ப் பட்டாடைப் போன்றே,
விளங்கிடும் நெற்கதிர்கள் மின்னுவ தன்றோ,
வளமான தேசத்தின் மாண்பு!

நற்றமிழ்ப் பாவலர் நாவரும் பாவினைப்போல்,
வற்றா நதிகள் வளமாக ஓடுவதே,
மற்றுமோர் தேசத்தின் மாண்பு!

வரமாய் இயற்கை வழங்கிய செல்வம்,
சிரமமின்றி வான்மழை சீராய்த் தருமே,
மரங்களும் மற்றுமோர் மாண்பு!

9. கவிஞர் பரமநாதன் கணேசு
கண்ணுள் விரிந்தாடும் காட்சிகள் தந்தள்ளி
எண்ணத்தில் கூத்திட்டே இன்ப மளிக்கின்ற
வண்ண இயற்கையை வாழ்த்து!

மண்ணில் வளர்ந்தோங்கி வாரி வளமீயும்
எண்ணிலா மாமலைகள் ஏரி குளம்தருக்கள்
வண்ண இயற்கையை வாழ்த்து!

வெண்ணிலா வானத்தில் வீதி வலமேகத்
தண்ணெழில் காட்டிடும் தாரகைப் பூக்களாம்
வண்ண இயற்கையை வாழ்த்து!
★'
10. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
தென்னை மரமுந்தான் தெண்ணீர்த் தருதல்போல்
அன்னைத் தமிழ்மொழியை ஆண்டருளி ஈகைசெய்யும்
என்னே இயற்கை இது!

கன்றினைக் கண்டாவும் கட்டாயம் பால்சுரக்கும்
அன்னை முலைசுரந்தாள் அன்பினால் சம்பந்தர்க்(கு)
என்னே இயற்கை இது!

கன்னலின்ப வாசகமாம் கற்கண்டின் தித்திப்பாம்
சொன்மொழிக் கொஞ்சியும் சொன்பேசும் அஞ்சுகமாம்
என்னே இயற்கை இது!

11. கவிஞர் அய்யப்பன்
ஆனைப் படையமரும் ஆல மரநிழலும்
ஆனவரை காக்கும் அரசமர வேம்புகளும்
வானத்தில் இல்லா வனப்பு

மானும் குதித்தோடும் வண்ண மயிலாடும் 
கானக மந்திகளாம் தாவும் மேல் தாவிகளும் 
வானத்தில் இல்லா வனப்பு

தேனாம் அமுதெடுத்துத் தேனீக்கள் சேர்ப்பதுவும் 
ஆனை முகனுக் அகரம்புல் வெள்ளெருக்கும் 
வானத்தில் இல்லா வனப்பு

12. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
குன்றா வளத்தையும் குற்றமிலா வாழ்வினையும்
என்றுமே யுன்மக்க ளெய்திடவும் வந்திடுவாய்
கன்னலென வின்சுவை கொண்டு

வன்முறைகள் மாய்ந்திடவும் வம்சந் தழைத்திடவும்
பொன்னி யெனவந்து பொன்நிறையச் செய்திடுவாய்
கன்னலென வின்சுவை கொண்டு.

இன்பமது தங்கிடவு மின்னலது நீங்கிடவும்
சென்றோடிப் பாய்ந்து செழுமை நிறைத்திடுவாய்
கன்னலென வின்சுவை கொண்டு.

13. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
நன்றா மியற்கை நலமா யிதனையும்
சென்றே யணைத்துச் செழுமை பெறவுமே
என்றுமே காத்த லினிது.

குன்றா யழகுடன் கூர்மைப் பொலிவுடன்
அன்பா யழகா யரவணைக்கு மன்னையை
என்றுமே காத்த லினிது.

ஒன்றா யிணைந்துமே ஒப்பிலா செல்வத்தை
நின்று நிலைபெற நித்த மியற்கையை
என்றுமே காத்த லினிது! 

14. கவிஞர் புனிதா கணேசு
சங்குமணி செம்பவளம் சாலவரு முத்ததுவும் 
அங்கள்ளி ஆர்ப்பரிக்கு மந்தமிலாத் – தங்குகரை 
பொங்கவரு மக்கடல் பார்

தங்கவலை வீசியவர் தாம்பிடிக்க மீனினமும் 
பங்கிடவோர் பாங்கும் பசிதீர – வங்குதிரை 
பொங்கவரு மக்கடல் பார்

பொங்குமொரு நீலவண்ணச் சிங்கார மாயதுவும் 
பொங்கிடு மவ்வலைகள் தாழுமெழு – மங்கதனில் 
பொங்கவரு மக்கடல் பார்

....தொடரும்...

No comments: