பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 19 ( தரவு கொச்சகக் கலிப்பா)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:19 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--19
( தரவு கொச்சகக் கலிப்பா)

1. கவிஞர் ரவீந்திரன்காளிமுத்து
தமிழனின மரபுகளின் எருதுபிடி விளையாட்டை
அமிழ்த்திடவே மடையர்கள் அமைப்புகளும் ஒருங்கிணைந்து
தமிழர்கள் நலவாழ்வைத் தரங்கெடவும் நிலைகுலையத்
தமிழ்நாட்டில் திறமையுடன் தடைசெய்யத் துணிந்தனரே
எனவே
இளையோ ரெல்லாம் இணைவோம் ஒன்றாய்
முளையும் முன்முனை அறுப்போம்
வளத்துடன் தமிழன் வாழ்வும் ஓங்கவே.

2. கவிஞர் சேலம் பாலன்
ஒற்றுமைக்கே இலக்கணமாய் உலகத்தார் வியப்புடனே
பற்றுடனே மிகக்கன்டு பரவசமாய்ப் புகழ்ந்திடவே
நற்றிறமாய் இளைஞர்கள் நனிவிரும்ப இதுவரையும்
நற்றலைவர் ஒருவரின்றி நடந்தஇது மிகச் சிறப்பு.
அதனால்
சல்லிக் கட்டொடு தானும் பற்பல
வெல்ல மாக விளைந்திட
நல்லவர் இணைந்திடில் நன்மைகள் நடக்குமே!

3. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
இந்தியாவில் பிறந்திட்டோர், எவராயின் நலம்பெறுவர் ;
இந்தியனாய் இருந்திடுதல், இனிமைதரு மருமையன்றோ !
வந்துவிட்டோம் புவியிலொரு வளமான நிலந்தன்னில்,
சிந்தனையும் செயல்யாவும் சிறப்பாயின், நலமாகும் !
எனவே,
மனித நேயம் மனத்தில் வைத்து,
இனிய தேசம் எனதென் றுரைத்துக்
கனிவாய்ப் பழகுவோம், கடவுளர் காப்பரே !

4. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
நற்றமிழர் கடமைதனை நலங்கெடாது சிறப்பித்தே 
உற்றவர்கள் சபைதனிலே உறுதியாகப் பதிந்துவிட்டீர். 
சற்றுமினித் தயக்கமில்லை சமுதாயம் பதில்சொல்ல 
ஒற்றுமையே அகலாமல் உருவெடுத்தீர் இளைஞர்காள் 
இதுவே
ஒற்றுமை யுணர்வை ஓர்ந்திடும் செயலாம் 
மற்றைய வழியை மாற்ற 
வெற்றியும் நமக்கே வேதனை யிலையே !

5. கவிஞர் பரமநாதன் கணேசு
கோடிதுயர் விதைப்பதுவும் கொடுத்துப்பின் பறிப்பதுவும்
வாடியழ விடுவதுவும் வழிமாறிப் பறப்பதுவும்
ஓடிவந்து தவிடாமல் ஒளிந்துநின்று குரைப்பதுவும்
நாடிதினில் நடமாடும் நரிக்குணத்தார் செயலாகும்.
ஆகையால்
பாய்ந்திடும் வேங்கையாம் பாரிதில் இளைஞர்
தோய்ந்திடல் நலமாம் தொண்டில்
மாய்ந்திடும் அனைத்தும் வருவாய் எழுந்தே!

6. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
நண்பராகப் பழகிடுவார் நளினமாகத் தொடர்ந்திடுவாய் 
கண்ணியத்தை மறவாதே கடமைசெய்ய உதவிடுவாய்
பண்புகொண்டு பேசிடுவாய் பாரெல்லாம் புகழுமுனை 
வண்புகழை இழந்திட்டால் மகிழ்ச்சியெல்லாம் மறைந்திடுமே
அதனால் 
அளவுடன் பழகியே அன்பைக் காட்டிடு
வளர்ப்பாய் தமிழர் மறத்தை
வளத்துடன் நாட்டை வைத்திருப் பாயே!

7. கவிஞர் புனிதா கணேசன்
அலையெனவே எழுந்தனரே அனலெனவே கொதித்தனரே 
மலையெனத்தான் மலைத்தவரோ மதியாலே விழித்தெழவே 
விலையிலையே விதைநெல்லாம் விழுமியம்கொள் இளவல்கள்
தலைசுமந்த கடப்பாடும் தமிழென்ற உணர்வதுமே!
அதனால் 
காளைகள் கண்ட களமது கூறுமே
களைகள் நீங்கக் கவின்தரு 
கலையாய்த் தமிழ்தான் களிக்கு மென்றே!

8. கவிஞர் அய்யப்பன்
ஆ!கா!வென் றெழுந்ததுபார் அதுபுரட்சி யுகப்புரட்சி 
ஆகா!வா அடலேறே அடலேறு தழுவிட!வா!
ஆகாதா மெனவுரைத்த அரசினுக்கும் உணர்த்திட!வா!
ஆகா!கா விரிக்காக அடுத்தகளம் அமைத்திட வா 
அதுநாள் 
பொறுமை காப்போம் பொறுமை காப்போம்
பொறுத்தார் பூமி ஆள்வார்
கடமை உண்டு களமமைப் போமே!

9. கவிஞர் பொன்.பசுபதி
நீர்வளமும் நிலவளமும் . நிறைந்திருந்த தமிழ்நாட்டில்
கார்முகிலால் பெருமளவில் கனமழைகள் காணலையே
நீரின்றி வயல்களெலாம் நெடும்பாலை யெனவாகி
ஏருழவர் தமதுயிரை இழப்பதுவும் சரியாமோ?
ஆதலால்
அண்டைமா நிலத்தா(ர்) ஆறுகள் குறுக்கே
கொண்ட தடுப்பணை கொள்நீர்ப் 
பங்கினை முறையாய்ப்  பகிரவைப் போமே! 

10. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
எதிர்பார்ப்பு முளைக்கிறதே இளரத்தம் எழுகையிலே 
உதிக்கத்தான் வருகிறதே உயர்ந்தவழி நடக்கையிலே 
மதியுடனே மணல்தடுத்து வயல்களிலே வளங்கொழிக்க
நதிதனையும் பொதுவாக்க நலத்துடனே எழுவீரே
எழுந்தால் 
அறமிலாச் செயல்க ளழிந்தே 
சிறப்புகள் நாட்டில் செழித்தோங் கிடுமே! 

11. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியம்
கூரான கொடுவாளில் குருதியாறு பெருகிவரப்
பாராளும் உரிமத்தைப் பறித்தவனைப் பதம்பார்க்க
யாராலும் பிடிக்காத எருதுவாக உருமாறி
ஓராளாய் ஒளிவீசி வருவாயென் னிளைஞனே!
ஏனெனில்
கடாரம் சென்றதும் கப்பல்க ளோட்டி
விடாத வீணரை வெட்டித்
தடாகத்தில் வீசியதுன் தானைப் பாட்டனே!.

12. கவிஞர் விவேக்பாரதி
இளைஞர்கள் கரங்களிலே இனிநாட்டின் எதிர்காலம் 
விளைகின்ற தெனும்போது விரைவாக நெஞ்சத்தில் 
ஒளிவீசும் சுடர்தன்னை ஒளிப்பார்தாம் எவருள்ளார் ? 
களிபேசி நிலைத்திடுவோம் ! கடமைகள் புரிந்திடுவோம் ! 
எதற்கும் 
அஞ்சல் இனிமேல் ஆகா ! துலகீர் ! 
நெஞ்சம் நிமிர்த்தி நிற்போம் ! 
வஞ்சகம் போக்க வருவார் இளைஞரே !

13. கவிஞர் குருநாதன் ரமணி
இன்றமிழைப் பயிலுவதே இளையோரின் முதற்கடமை
கன்றுகளாம் பருவத்தில் கடமையாகும் உரியகல்வி
ஒன்றியொரு மனையாளோ டுவந்துவாழும் கடமையுடன்
நன்குவளர்த் தபெற்றோரின் நலம்பேணல் கடனாமே.
அத்துடன்
பாரினில் நல்லன பரிந்தாய்ந் துரைக்கும்
வேரினைப் போற்றும் விழைவுறும்
பாரதக் குடிமையிற் பண்புறும் வாழ்வே.!

14. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
வேர்தொடுத்து வளருகின்ற வினைகளினை விளைப்போரை 
நார்உரித்து நடுத்தெருவில் நயப்புடைக்க நமதிளைஞர் 
ஆர்வருவா ரெனவன்றி அவரவரே உணர்ந்தெழுந்தால் 
சீர்பெறுநம் வளமெல்லாம் சிறப்புறுமே எதிர்காலம் 
ஆதலினால் 
ஆனவ ரைக்கும் அவரவ ராகவே 
ஈனரை யொடுக்கவே எழுந்தால் 
மானமி லாரை மடக்கிட லாமே !

15. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
வளையதனில் ஒளிந்திருக்கும் வலியதொரு எலியெனவே
விளைந்திருக்கும் வளமதனை மிகையாகச் சுருட்டுகின்றார்
களையெனவே வளர்ந்திடுமக் கசடையெல்லாம் ஒழித்திடவே
இளைஞரவர் படையதுமிங் கெழுச்சியினோ டெழவேண்டும்
ஆகவே
எழுவாய் தமிழா ஏறே இதுவரை
புழுவாய்க் கிடந்தது போதும்
நழுவா துழைப்பாய் நாட்டைக் காக்கவே!

16. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
செந்தமிழர் சிறப்புறத்தான், செறிவுற்று மகிழ்ந்திடத்தான்,
விந்தியமே குலுங்கிடத்தான், விவசாயம் சிறந்திடத்தான்,
நந்தியதைத் தழுவிடத்தான், நலமாதர் விரும்பிடத்தான்,
இந்தியத்தைத் மிரளவைத்த எழில்வேந்தன் இளைஞனடா...!
இவனே
ஊழ லில்லா உலகம் படைப்பான்
வாழ நன்னெறி வடிப்பான்
தோழன் இவனோர் தோற்காப் படையே !

17. கவிஞர் சாமி சுரேஷ்
தெவ்வோர்க ளெவரென்று தெளிவாகத் தெரிந்தறிந்தீர்
ஒவ்வோர டிவைப்பினிமேல் ஒருக்களித்தும் உணர்வுடனும்
வெவ்வேறுக் களந்தனிலே வெளிக்கொணர்ந்தே யுழைத்திட்டால்
தெவ்வுதல்வேண் டுதலில்லை தெறுநர்கள் தெறித்திடுவர்.
எனவே,
போர்க்குர லொலிப்பைப் பொச்சாப் பாக்கா
நீர்க்கடல் வெற்றி நினைந்தே
ஊர்க்கு ழைத்திட உறுதியேற் பீரே!

18. கவிஞர் சோமு சக்தி
இளையோரே முதியோரின் எழுத்துகளைப் பயின்றேநீர்
வளையாத அறவுணர்வை வைப்பீரே உயர்நெறியாய்
சளையாமல் சமத்துவத்தை சகமனிதர்க் களிக்கின்ற
விளைவாக விதிகளைத்தான் வியனுலகில் விதைப்பீரே
அதற்காய்க்
கலையும் அறிவியற் கணிதமும் கற்கத்
தலைமைப் பண்பும் தழைக்க
நிலையா உலகிலும் நேர்பட நிற்கவே !

19. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
அணியணியாய்த் திரண்டனரே அகிலத்தில் அனைவருமே
துணிச்சலான செயலிதுவாம் துலங்கிடவும் வகைசெய்த
பணிவான இளைஞர்கள் பரவிடவும் தமிழகத்தில்
மணிமகுடம் சிறப்போங்கி மகத்துவமாய்த் தழைத்திடுமே.
அதனால்
இளைஞரின் துணைதனை இனிதென உலகிலே
களையினை அழித்திடக் கருதியே
திளைத்தே வாழ்வோம் திண்ணம் இதுவே! 

20. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
இப்பாரில் தமிழரினம் இனிமையாக இருந்திடவும்
எப்போதும் வளம்பலவும் எளிதாக விளைந்திடவும்
தப்பாம லுழைத்திடுமோர் தரமான மறவரினம்
முப்போதும் நலமனைத்தும் முழுதாகக் கொடுத்திடுவர்
அதனால்
இயக்கம் கண்டிடும் இளைஞரின் மனத்தினை
மயக்க மின்றி மாற்றினால்
தயக்க மின்றியே தரணி ஒங்குமே.

21. கவிஞர் கோவிந்தராசன் பாலு
ஒன்றாக உணர்வோடே உரிமையை நிலைநாட்ட
நன்றாகப் பதித்திடுவாய் நலத்துடனே வாழ்ந்திடவே
வென்றிடவே உறுதியோடு வியந்திடவே உறுதிகொள்வாய்.
நின்றிடுவாய் எரிமலையாய் நிலையினையே உயர்த்திடவே.
அதனால்
தடைகள் வந்தால் தாண்டக் கற்பாய்
இடையூ றென்றால் இடித்தே
நடையை மாற்று நாளை உனதே.!

22. கவிஞர் அர.விவேகானந்தன்
விளைகின்ற நிலமனைத்தும் வெறுமையென வருகுதலும்
விளையாட்டோ?உழவனவன் விதியிதுவோ சதியிதுவோ?
இளையோரே எதுவெனினும் இயங்கியுமே இணைந்திடுவீர்!
இளைப்பாற லொதுக்கிடுவீர் இளமையதி லுழைத்திடுவீர்!
அத்துடன்
உழவைப் படித்திட உறுதி யேற்பீர்!
மழலை தனக்கும் மண்ணை
உழுதிடும் மாண்பதை உரைத்திடு வீரே!

23. கவிஞர் வள்ளிமுத்து
குடிமதுவும் ஒழிக்கவேண்டும் குலத்தமிழும் படிக்கவேண்டும்
மடிதனையும் அழிக்கவேண்டும் மனத்திலின்பம் கொழிக்கவேண்டும்
முடியுமென்றே நினைக்கவேண்டும் முகவரியைப் படைக்கவேண்டும்
அடிதடியைக் குறைக்கவேண்டும் அகத்தன்பு செழிக்கவேண்டும்
ஏனென்றால்
இளைஞர் கையில் இருக்கிற துலகம்
வளமை செழிக்க வாழ்வில்
அல்லதை அகற்றி நல்லதைப் படைப்பீரே.!

24. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
தந்தைதாய்க் கடமையைத் தவறாது நினைத்திடவும் 
சிந்தையிலே இதனையெண்ணித் திருத்தமாய்ச் செயல்படவும் 
நிந்தையிலா வழிவகையை நெடுவாழ்வில் துணைகொளவும்
விந்தையிதை அறிந்திடவும் விவேகத்தால் அடைந்திடவும் 
தேடு 
முன்னோர் நூலின் முதலைப் பாடு 
பின்தலை முறைக்குப் பீடாம் 
இன்சொல் கருத்தை இசைதிடப் பாரே! 

25. கவிஞர் இரா.கண்ணன்
அறவழியில் நடந்தாலும் அடிதடிகள் அரங்கேறும்
அறமில்லா அரசுகளின் அடாவடிகள் இதுவாகும்
புறம்பாகச் சிலபேர்கள் புரளிகளை அவிழ்த்தாலும்
நிறைகுடமாய் இளையோர்கள் நிலைப்பாரே வரலாற்றில்
இனியும்
கொடுமை கண்டு குமுறி யெழுவோம்
அடிமை நிலைகள் அழிந்திடப்
படிப்பினைத் தானே பலமா மிங்கே.....!

26. கவிஞர் சியாமளா ராஜசேகர்
தன்னலத்தைப் புறந்தள்ளித் தனைச்சார்ந்தோர் நலம்பேண 
என்றென்றும் துடிப்புடனே எழுச்சியுடன் உழைத்திடவும் 
வன்கொடுமை தனைக்கண்டால் வயிரமுடன் எதிர்த்துநின்று 
துன்பநிலை ஒழித்திடவே துணிச்சலுடன் புறப்படுவாய் ! 
இளைஞனே !
உன்னால் பெருமை ஓங்கிடச் செய்வாய் 
கன்னல் தமிழைக் காப்பாய் 
நின்கடன் இதுவென நித்தம் உணர்கவே !!!

27. கவிஞர் அழகர் சண்முகம்
இருள்மறைய ஒளிகொடுக்கும் இளங்கதிராய் விழித்தெழுந்து
வருமிடரைத் தகர்த்தெறிந்து வழிநெடுக மறம்விதைத்துத்
தருமரென்ற முகமணிந்தே தவறிழைப்போர் கொடுமையினைக்
கருவறுக்கப் புறப்படுவாய் களமதிரக் கரமிணைத்தே 
இளைஞனே
அயர்வை நீக்கி அலையாய்ப் பொங்கி 
முயன்றால் உன்னால் முடியும்
உயர்த்திடு தோளை ஒளிபெரு முலகே!

28. கவிஞர் நாகினி கருப்பசாமி
உண்மையான உழைப்பினிலே உயர்வென்ன சிறுமையென்ன
மண்ணையென்றும் வளமாக்கி மகிழ்கின்ற நிலையெய்த
வண்ணமாக்கும் செயல்புரிவர் வலிமையுடன் இளைஞர்கள்
விண்ணுலகைப் பெறுகின்ற விவேகமுடன் நடப்பவராம்! 
எனலால்
எண்ணம் ஓங்கிட எழுச்சி யுடனே 
உண்மை நேர்மை யுடையோர்
மண்ணின் மாண்பாம் மதிப்புறு இளைஞரே!
★★★

No comments: