பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 6 (வெளிவிருத்தம்.)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:6 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய புலவர் #செந்தமிழ்ச்சேய் அவர்கள் உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--6
(வெளிவிருத்தம்.)
1. கவிஞர் தர்மா
பத்தரை மாதமும் பண்புடன் காத்தது -தாய்மையே... 
நித்திரை களைந்துனை நித்தமும் வளர்த்தது -தாய்மையே...
உத்தம ராக்கிட உலகினி லுழைத்திடும் -தாய்மையே....
வித்தக ராக்கியே வென்றிட வைத்திடும் -தாய்மையே...

2.கவிஞர் சோமு சக்தி
ஐயிரு திங்களாய் அங்கம் சுமந்ததை – மறப்பேனோ ?
கையிரு கவளமும் கனிவுடன் தந்ததை – மறப்பேனோ ?
மையிரு வாழ்வினில் மகிழ்வுற வளர்த்ததை – மறப்பேனோ ?
தையிரு தாயே தாளினில் வீழநான் - மறப்பேனோ?

3. கவிஞர் மதுரா
அன்புக் கடலாய் அணைத்து வளர்த்தது -அன்னையே 
பண்பும் தமிழும் பழகக் கொடுத்ததும்-அன்னையே
உண்மை அன்பில் உருகிக் கரைவதும்-அன்னையே
உன்தாள் பணிந்தே உலகில் உயிர்க்கிறேன் அன்னையே.

4. கவிஞர் ரமேஷ் மாதவன்
வயிற்றில் பத்து மாதம் சுமந்தாள் - அன்னையவள்
உயிரை இந்த உடலில் தந்தாள் - அன்னையவள் 
தயிரும் பாலும் தந்தே வளர்த்தாள் - அன்னையவள்
பயிற்சி தந்தாள் பாரில் வாழ - அன்னையவள்!

5. கவிஞர் கண்ணன். இரா.
உயிரைக் காத்தே உருவங் கொடுப்பவள்--அன்னையே!
வயிற்றில் சுமந்து வளமாய் வளர்ப்பவள்--அன்னையே!
துயிலு மகன்று துணையா யிருப்பவள்--அன்னையே!
உயிர்த்திட நாமும் உவந்திடும் தெய்வம்--அன்னையே!

6. கவிஞர் விவேக் பாரதி
தன்னி ரத்தம் தளிருக் களிப்பாள் - தாயவளே 
பொன்னெனச் சேயைப் பொத்திவ ளர்ப்பாள் - தாயவளே 
கன்ன லெனச்சேய் கக்கலைச் சொல்வாள் - தாயவளே 
இன்ன லவர்க்கெனின் இடியும் தகர்ப்பாள் - தாயவளே !

7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
மண்ணில் பிறந்த மகத்துவம் அம்மா - நீவாழ்க
பண்ணில் வனைந்து பதிப்பேன் தினமும - நீவாழ்க
கண்ணில் தெரியும் கடவு ளுலகில் - நீவாழ்க
எண்ணம் முழுது மெனக்குள் நிறைந்தவள் - நீவாழ்க.

8. கவிஞர் .க.அர.இராசேந்திரன்
நெல்லும் வயலும் நிறைந்திட உழைத்தாய் -அன்னையே
சொல்லும் எனக்குச் சோறாய்த் தந்தாய் -அன்னையே
வெல்லும் வகையாய் வீரமுந் தந்தாய் -அன்னையே
கல்லும் கனியக் கவிதை நீகொடு -அன்னையே

9. கவிஞர் ஃபர்சானா ரசீக்
வண்ண ஆடைகள் வடிவாய் உடுத்திட - மகிழுந்தாய்
சின்ன அடிகள் சீராய் வைத்திட - மகிழுந்தாய்
கன்னத்தில் முத்தம் கனிவாய் கொடுத்திட - மகிழுந்தாய்
மின்னும் உலகில் மிளிர்ந்து சிறந்திட- மகிழுந்தாய்!

10. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
மண்ணி லென்னை மாண்புற வளர்த்தவள் - என்னன்னை
எண்ண முழுது மென்றும் வாழ்பவள் - என்னன்னை
எண்ணிப் புகழ்ந்திட ஏற்றம் பெற்றவள் - என்னன்னை
பெண்களி லெனக்கோ பேரொளி யானவள் - என்னன்னை !

11. கவிஞர் குருநாதன் ரமணி
குழந்தை வளர்ப்பில் குழையும் தெய்வம் - அன்னை
அழுமுன் நினைந்தே அமுதை ஊட்டும் - அன்னை
விழுந்தால் நோயில் மருந்தைக் கொள்ளும் - அன்னை
நழுவும் கால நடப்பில் தனியள் - அன்னை!

12. கவிஞர் பொன்.பசுபதி
என்றாய்க் கிணையா யெவரு மிலையே - இவ்வுலகில்
கண்போ லெனையே கருதி வளர்த்தா(ள்) - இவ்வுலகில்
அன்பா லறிவை யளித்தே மகிழ்ந்தாள் - இவ்வுலகில்
இன்றோ வவளை யெதிர்கண் டிலனே - இவ்வுலகில்! 

13. கவிஞர் கைலாசநாதன் காளிதாசு
உலரும் போதினில் உணவே தந்தாள் _ அம்மா
தளரும் போது துணிவே தந்தாள் _ அம்மா
வளரும் போதினில் உரமாய் நின்றாள் _அம்மா
உலகில் வாழும் உத்தியும் சொன்னாள்_ அம்மா.!

14. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
வயலின் பயிரில் வளம்தர வாராய் - மழைத்தாயே
துயரம் அறவே துடைத்திட வாராய் - மழைத்தாயே
கயலும் விராலும் களித்திட வாராய் - மழைத்தாயே
பயனும் பெறவே பயிரை வளர்த்திடு - மழைத்தாயே! 

15. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
கண்ணின் இனிய கருணை யுருவம் - தமிழ்த்தாயே 
பெண்மைக் குணத்தால் பெருமை யளிப்பாள் தமிழ்த்தாயே 
மண்ணின் கொடுமை மயக்கைக் களைவாள் - தமிழ்த்தாயே 
விண்ணின் பொருளை விளக்கித் தருவாள் - தமிழ்த்தாயே! 

16. கவிஞர் கு.ந.கவின்முருகு
அன்பு தந்தாள் அறிவு சொன்னாள் - தாயவள்
கண்ணில் வைத்துக் கருத்தாய் வளர்த்தாள் - தாயவள்
மண்ணில் சிறக்க மாண்பும் சொன்னாள் - தாயவள்
என்னில் விதைத்தாள் இன்பம் கொண்டாள் - தாயவள்!!

17. கவிஞர் கணேசன் ராமசாமி
பத்து மாதம் பாங்காய்ச் சுமந்தாள்-நாம்வாழ
நித்தம் துயரம் நிழலாய்க் கண்டாள்- நாம்வாழப்
பத்து மாதம் பசியை மறந்தாள்-நாம்வாழ
அத்தா னெருக்க மரிதாய்க் கொண்டாள்-நாம்வாழ

18. கவிஞர் மணிகண்டன் பா.
ஒன்பது மாதமும் உழன்று சுமந்தவள் -- என்றாய்
என்பதும் தேய இனிதே வளர்த்தவள் -- என்றாய்
இன்பது நிறைத்தவள் இழிவு துடைத்தவள் -- என்றாய்
துன்பது தொலைத்தவள் தோல்வியில் காத்தவள் -- என்றாய்! 

19. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
அன்பை நாளும் அள்ளித் தந்த .- தெய்வந்தாய்
பண்பா யென்மேல் பாசம் காட்டும் - தெய்வந்தாய்
உண்மை யுழைப்பா லுயர வைத்த - தெய்வந்தாய்
தன்னை யீந்து தயவாய்க் காத்த - தெய்வந்தாய்!

20. கவிஞர் ராசாபாபு
பத்துத் திங்கள் பாடாய்ப் பட்டாள் -தாய்தான்!
சொத்தாய் எண்ணிச் சுமந்தே வளர்த்தாள் - தாய் தான்!
சித்தம் வளர்ந்து சிறக்கக் காரணம் - தாய்தான் !
நித்தம் நம்மை நினைந்தே வாழ்வதும் - தாய்தான் !!

21. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
தாயவ ளன்பையும் தாங்கியும் காப்போம்- நம் வாழ்வில்
நேயமாய்த் தாயவள் நேசமும் போற்றுவோம்– நம் வாழ்வில்
தூயவள் நன்றெனத் தூய்மையின் தெய்வமாம் _ நம் வாழ்வில்
காயமும் நீக்கியே காப்பவள் நாளுமே – நம் வாழ்வில்! 

22. கவிஞர் பாலு கோவிந்தராஜன்
கருவில் கண்ணாய்க் கருத்தாய்க் காத்தாய்-தாயே!
உருவில் என்னை உயிராய் வளர்த்தாய்-தாயே.!
இருளை நீக்கி இனிதே காத்தாய்-தாயே. ! 
அருளில் தெய்வம் அன்றோ நீயே--தாயே.!

23. கவிஞர் பரமநாதன் கணேசு
மணக்கும் மருகே! மருந்தே என்பாள் - அன்னை
அணைத்தே கையால் அள்ளிக் களிப்பாள் - அன்னை
துணையா யிருந்தே துயரைத் துடைப்பாள் - அன்னை 
இணையிலா அன்பை என்றும் ஈய்வாள் - அன்னை

24. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
மண்ணில் வாழும் மனித தெய்வம் தாயன்றோ 
கண்ணின் மணியாய்க் கனிவாய்ப் பார்ப்பதும் தாயன்றோ 
வண்ண ஆடை வாங்கித் தருபவர் தாயன்றோ
கண்ணியம் கடமை கற்பிக்கும் ஆசான் தாயன்றோ

25. கவினப்பன் தமிழன்
வானை வளைப்ப வாழ்க்கை வதைத்துங் காத்தனையே
ஊனை உருக்கி உயிராய் எம்மைக் காத்தனையே
ஏனை எண்ணம் எதுவும் இலாது காத்தனையே
ஆனோம் ஆளாய் அன்பே தாயே காத்தனையே!

26. கவிஞர் பாலமுருகன்
உலகக் கூட்டில் உயிர்செய் சக்தி- தாயவள்
நிலவு காட்டி நேயம் வளர்ப்பாள்- தாயவள்
உலவும் தெய்வம் உண்மை தெய்வம் - தாயவள்
நலமா யிருக்க நலங்க ளிழப்பாள்- தாயவள்! 

27. கவிஞர் வள்ளிமுத்து
அடிதனைத் தாங்கி அன்பினைத் தருபவள்- தாயாம்
மடிதனில் ஏந்தி மார்பினைக் கொடுப்பவள்- தாயாம்
பொடிசுடும் போதில் பொன்னிடை சுமப்பவள்-தாயாம்
படிப்புடன் பண்பைப் பாங்குடன் தருபவள்-தாயாம்

28. கவிஞர் சியாமளா ராஜசேகர்
உறக்கம் தவிர்த்தாய் ஊணும் மறந்தாய் - பிள்ளைக்காக 
சிறப்பாய் வளர்க்க தெய்வம் தொழுதாய் - பிள்ளைக்காக 
அறப்பா லூட்டி அன்பை விதைத்தாய் - பிள்ளைக்காக 
இறக்கும் வரையில் இமைபோல் வாழ்ந்தாய் -பிள்ளைக்காக !

29. கவிஞர் சேலம் பாலன்
என்னைப் பெற்ற இராசா என்பாள் - அன்னை 
தன்னை வருத்தித் தருவாள் ஏதும் - அன்னை
என்ன தவறே எப்படிச் செயினும் - அன்னை
மன்னன் என்றே மகிழ்வாள் நித்தம் - அன்னை !

30. கவிஞர் சுந்தரி தேவன்
அஞ்சேல் என்றே அணைத்துக் கொள்வாள் - என்னம்மை 
பிஞ்சின் மொழியில் பெரிதும் மகிழ்வாள் - என்னம்மை 
வஞ்சம் தனையே வதைத்துக் காப்பாள் - என்னம்மை 
நெஞ்சில் நிறைந்து நிழலாய்த் தொடர்வாள் - என்னம்மை.

31. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
இல்லத் தெய்வம் இதயத் தூய்மை - தாயேநீ
வல்ல முறையில் வார்த்தாய் என்னைத்- தாயேநீ
எல்லாம் தந்தே என்னைக் காத்தாய்- தாயேநீ
எல்லாம் நீயே எந்தன் வாழ்வே - தாயேநீ. !

32. கவிஞர் புனிதா கணேஷ்
அம்புலி அழகும் காட்டி அன்னமும் அன்னை
அம்புவி மீதில் ஊட்டி அன்பினால் - அன்னை 
எம்நலம் பேணும் எம்மருந் தாயவள் -அன்னை
எம்மருந் தோழியா கும்பெண் ணவளே- அன்னை
★★★

No comments: