பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 7 (நேரிசை ஆசிரியப் பா)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:7 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--7
(நேரிசை ஆசிரியப் பா)
1. கவிஞர் தர்மா
சோதனை வந்ததும் சோர்வுக ளுற்று 
வேதனை கொள்வதை விடுத்திடு தோழா.. 
துயரினைப் போக்கிடத் துணிந்திடு.. 
பயங்கொள ளென்றும் பைத்தியச் செயலே..!!

2. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
நன்னூல் வழங்கிடும் நன்மொழி நம்பு 
கன்னல் சொல்லும் கனிதரும் தெம்பு 
கொண்டு மேல்செல் குன்று 
விண்டு சுவைத்து விருந்தளி பெண்ணே

3. கவினப்பன் தமிழன்
உன்னை நம்பி யுலகுவெல் தமிழா
தன்னை நம்புந் தமிழை
அன்னையாய்க் கொண்டாய் அளியென் வேறே.

4. கவிஞர் விவேக் பாரதி
தன்னம் பிக்கை தளரா வுழைப்பு 
முன்வைத் தவினை முடிக்கும் உத்தி 
உலகம் எனக்கென வுணர்ந்து
பலவினை செய்வாய் பார்ப்பாய் வெற்றியே !

5. கவிஞர் சுந்தரராசன்
மாலை வந்திட மறையுங் கதிரைக்
காலை தோன்றிடக் காண்பது திண்ணம்!
சூழுந் துயருஞ் சோர்ந்து
வீழு முறுதி!நீ வெல்வ துறுதியே!

6. கவிஞர் ஜெயபாலன்
உச்சம் தொட்டுநீ உயர்ந்து வாழ,
அச்சம் தொலைத்தே, ஆர்வம் பெருக்கிடு
எச்சம் என்றினி ஏதுமில்லை 
நிச்சயம் உழைத்தால் நின்று வெல்வாயே !

7. கவிஞர் இரா. கண்ணன்
என்னால் முடியும் எதுவு மென்றுநீ
உன்னில் கொண்டே உழைத்தே நாளும்
எண்ணம் கொண்டே ஏறுபோல்
மண்ணில் நிலைப்பாய் மாண்பு காத்தே,!

8. கவிஞர் சோமு சக்தி
உழைத்தால் உயர்வாம் உண்மை உணர்வாய்
பிழைப்பே எனினும் பெருமை உழைப்பு
தளைக்கும் வறுமை தறிக்கும்
சளைக்கா துலகும் சாலப் போற்றுமே! 

9. கவிஞர் பொன்.பசுபதி
எவ்வகைத் துன்பமு மேகிடும் வாழ்க்கைச்
செவ்வனே அமைந்து் சிறப்புக ளோங்கும்
தன்னம் பிக்கை தளராமல்
என்றும் காத்திடி னெனவுணர் வோமே!

10. கவிஞர் பரமநாதன் கணேசு
தொல்லை வாழ்வெனத் துவண்டி டலாமோ? 
நல்லதை யெண்ணி நானிலம் தன்னில்
துள்ளி யெழுவாய் துணிந்தே!
அள்ளுக வெற்றிகள் அவனியி லின்றே!

11. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
உழைப்பு தந்திடு முயர்வே உண்மையாம்.
தழைக்கும் வாழ்வுடன் தரணியும் சிறக்குமாம்.
பொறுப்புடன் பணிதனைப் பொறுமையாய் 
வெறுத்த லின்றேல் வெற்றியு முனக்கே !

12. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
தன்னை யறிந்து, தளரா மனங்கொண்டு,
தன்னையே நம்பித் தரமாய் வருசெயல்,
மண்ணை யடைந்த மனிதரை,
விண்ணையும் வென்றிடும் வேந்தராய் வைக்குமே !

13. கவிஞர் கணேசன் ராமசாமி
வாழ்வா சாவா வாழ்ந்து பார்ப்பாய்
வாழுங் காலம் வாசல் நிற்கும்
துன்பம் யாவும் தூசாம்
உன்னை நம்பினால் உலக முனதே

14. கவிஞர் பாலமுருகன்
முயன்றிடு மோது முடித்திடு நாளும்
நயமுறு நதியது நடையது போலும்
உலகினை வென்றிட ஓடி
இலக்கினைத் தொட்டா லெழிலுறும் வாழ்வே!

15. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலி
உழைப்பொன் றேதா னுயர்த்திடும் வாழ்வைப் 
பிழைப்பதற் கதுவே பெருவழி யுணர்ந்தால் 
களைந்திடத் துன்பம் கனிவாய் ! 
களைப்பென் றயர்ந்தால் கருகிடும் வாழ்வே !

16. கவிஞர் புனிதா கணேஷ்
உன்னில் நிறைவாய் உள்ளுள் தேடுக
உன்னால் முடிந்திடும் உள்ளுக உண்மை 
தன்னால் அறிந்திடு தங்கிடும்
தன்னம் பிக்கை தான்மிகு சிறந்தே .

17. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
மனமே நமது மகிழ்வின் திறவு.
தினமும் வாழ்வில் தீரும் துன்பம்.
வாழ்க்கை யென்றும் வளமே.
தாழ்வைப் போக்கும் தன்னம் பிக்கையே.

18. கவிஞர் ராசாபாபு
பன்னூல் புரட்டிப் பயின்றதால் பெற்ற
உன்னுள் இருக்கும் உன்னதத் திறத்தை
வெளிக்கொணர்ந் திடுவாய் வெள்ளிபோல்
களிக்கலாம் வாழ்வும் கன்னல் சுவையே!

19. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
நஞ்சையும் புஞ்சையும் நன்றா யிருந்தால்
பஞ்சம் நீங்கிப் பாரத நாடும்
நெஞ்சில் துணிவுடன் நேர்மை 
மிஞ்சி உழைத்தால் வளரு மிகுந்தே.

20. கவிஞர் நடராஜ் மெய்யன்
அடுத்தவன் வாழ்வை அடிக்கடி எண்ணி
எடுத்ததற் கெல்லாம் இலக்கணம் சொல்லிப் 
பிழைப்பது என்றும் பெரும்பிழை
உழைப்பது மட்டும் உயர்வை தருமே!

21. கவிஞர் மதுரா
துன்பம் கண்டே துயருற வேண்டாம்
இன்பம் தொடர்ந்தால் இனிக்குமோ வாழ்வு
விழுந்தால் முளைக்கும் வித்தே
எழுதலும் விழுதலும் என்றும் இயற்கையே

22. கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
இலைகள் உதிர்வதை இன்னலாய் நினையாய்
தலைகுனிந் திடாது தளிர்விடும் மரங்கள் 
துன்பம் கண்டே துவழாய்!
இன்ப மென்றுமே இருப்பதை நினையே!

23. கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம்
கடினம் என்று கருதா(து) எதையும்
முடியும் என்றே முயன்றிடு என்றும்
படிக்கல் போன்றதே பயிற்சி 
விடியல் கிட்டும் விரைவில் உனக்கே

24. கவிஞர் அய்யப்பன்
ஒளிமின் விளக்கோ ஒளிர்வ தெதனால் 
தளரா நம்பிக்கை தந்த வரமாம்
நம்பிக் கையால் ஆகாத
தும்பரும் செய்யார் உலகம் அறியுமே! 

25. கவிஞர் ஃபர்சானா ரசீக்
பலரும் உன்னைப் பார்த்து நகைப்பினும்
நிலையைக் குறைத்து நிந்தித்(து) இழிப்பினும்
துணிவு கொண்டு துடைத்தெறி
பணிவு கொண்டு பகையை வெல்கவே!

26. கவிஞர் சாமி சுரேஷ்
உலக முருளை உருளு மோர்நாள்
திலகந் திருநுதற் தீட்டிடு மதுவரை
அயரா துழைப்பாய் அணங்கே!
வியர்வை வென்றிடும் விதியை காண்கவே!

27. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
மனிதா நீயும் மாண்பு பெற்றிடத்
தணியா நெஞ்சம் தானும் கொண்டால்
வாழ்வில் வெற்றியும் வருமே
தாழ்வு நீங்கும் தரணி போற்றுமே

28. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
வாழ்வில் உழைப்பு வற்றா திருந்தால்
தாழ்விலா மனத்தைத் தரணியில் பெறுவோம்
நன்றாம் வாழ்வில் நாளும்
வென்று காட்டும் வெற்றியைத் தருமே! 

29. கவிஞர் சியாமளா ராஜசேகர்
தோல்வி கண்டால் துவண்டு விடாமல் 
சால்புடன் முயன்றால் சாதனை புரிவாய் 
செய்யும் தொழிலே தெய்வமாய்
மெய்யன் புடனே வேலைசெய் வாயே!

30. கவிஞர் ரமேஷ் மாதவன்
அருளினை உடையவன் அடைவான் அங்கே
பொருளினை உடையவன் பொருந்துவான் இங்கே
தன்னம் பிக்கையைத் தாங்கியோன்
இன்றே பெறுவான் இரண்டும் அவனே! 

31. கவிஞர் குருநாதன் ரமணி
தன்னம் பிக்கை தளரா உள்ளம்
முன்னேற் பாட்டுடன் முனைந்து பார்க்கும்
தடைகள் வந்தால் தாங்கியே
முடிவில் வெல்லும் முயற்சியில் மகிழுமே!

32. கவிஞர் சேலம் பாலன்
எனக்கென உதவ எவருமே இலையென
மனத்துள் கவலையை மலைபோல் எண்ணி
வாழவே அஞ்சும் மனிதா
ஆழமாய் உழைநீ அடைவாய் வெற்றியே !

33. கவிஞர் சுந்தரி தேவன்
சுடர்விடும் அகலாய்ச் சூழ்ந்த இருளாம்
தடைதனைக் களையும் தன்னம் பிக்கை
விதியின் சதியினை வெல்லும் மதியின் 
உயர்வால் மனமகிழ் வாழ்வே.
★★★

No comments: