பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

21 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 22 (வெண்கலிப்பா)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:22 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--22
(வெண்கலிப்பா)
தலைப்பு : இனியவை கூறல்
1. கவிஞர் விவேக்பாரதி
மொழியினிலே இனிமைதனை முழுதாகப் பதிப்போமால் 
பழியதுவும் நெருங்காத பாங்குவரும் அழியுமுடல்,
புகழ்கீர்த்தி பெருமையெலாம் புவனத்தில் ! அழியாதே 
புகன்றிட்ட இன்சொல்லின் பொலிவு !

2. கவிஞர் இளம்பரிதியன்
இதழவிழும் மலரதுமே எழிலுடனே மணம்பரப்பும்
இதமாகத் தென்றலுமே இனிமையையே இறைத்திருக்கும்
கதவாம்நம் நெஞ்சத்தின் கருத்துரைக்கும் சொற்களதை
நிதமிதமாம் இன்சொலிலே நிறை

3. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
பணத்திற்காய்த் தரணியிதில் படர்கின்ற உறவதனின்
குணத்தின்மேல் விருப்புற்றுக் கொளுநட்பே அணியென்பன்
மனிதகுலம் வளர்வதற்கு மகிழ்ச்சியோ டியைந்தவொரு
இனியசொலால் அனைவரையும் இழு.

4. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
இன்முகம் தந்திடுமே இன்பமெலா, மறிவாயோ !
நன்மைகள் வந்திடுமே நமக்கெலா முணர்வாயோ !
பண்புடை பெரியோர்கள் படைத்திட்ட வழிவகையில் 
கண்டது நற்சொல்தான் காண் 

5. கவிஞர் வள்ளிமுத்து
குயிலோசை வழிந்தொழுகும் குரலேற்போம் நிறம்நோக்கோம்
பயிரிடையே வளர்களையைப் பறித்தெடுப்போம் அதுபோலத்
தீயசொல்லை நீயொதுக்கிச் செழுந்தமிழைக் காத்திடுவாய்
வாயவிழும் இனியசொல் வடித்து!

6. கவிஞர் சாமிசுரேஷ்
மரபணுவில் பதிந்ததெல்லாம் மரணத்தின் பெருமச்சம்
கரமதுவும் உடைவாளைக் கவர்ந்திழுத்தக் கரணியமும்
இதன்பொருட்டே விலங்கெனநா மிதுவரையி லிருக்கின்றோம்
இதமான நமக்கான உரையாடல் திறவுகோலால்
இனிதிறப்போம் புதுக்குடியு மின்று.

7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
நன்னெறியின் வழியினிலே நலம்நாடிப் பணியாற்றும் 
மன்னவனே மரபுடைய மனிதராவான் உலகினிலே 
செந்தமிழைப் புகழ்ந்துபேசும் செறிவான தமிழர்க்கே 
எந்தநாளும் இடையூறு மேது !

8. கவிஞர் ரகுநாதன் ரங்கசாமி
புரையோடும் புன்மைகளும் பொல்லாத பொறாமையும் 
சிறைபடுத்தும் கீழ்மைகளும் சமுதாயக் கேடுகளும் 
கறைபடுத்தா நல்வாழ்வைக் கனிவுடனே நன்குரைத்து 
குறையொடுக்கும் வள்ளுவமாம் குறள் 

9. கவிஞர் இரா.கண்ணன்
நன்மைகள் நாடிவரும் நாற்றிசையும் உறவாகும்
தன்மையும் தரமாகும் தன்மானம் நமதாகும்
இன்சொல்லை நவில்வோமே இனிதாகும் வாழ்வதுவும்
வன்சொல்லைத் தவிர்த்தலே வளம்

10. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
இன்சொலை நயமாக இனிமையாக உரைத்திடலாம்
புன்சொலைப் புழங்குவது பொலிவிழக்கும் மனமுறிக்கும் 
முத்தமிழ்க் கனியான முதியோர்ச்சொல் இருக்கையிலேன்
பித்தராய் மொழிகின்றார் பிதற்று

11. கவிஞர் பொன்.பசுபதி
இனியவை மொழிதலும் இனியபணி புரிதலும்
கனிவுட னெதையுமே கழறிடும் பழக்கமும்
நணிபலவும் வழங்கியே நலமெலாம் பெருக்கிடும்
இனியவாழ் வளித்திடு மிசைந்து!

12. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
மரங்களிலே கனிபறிக்க மற்றதெல்லாம் விடுவதைப்போல்
தரங்களிலே சிறந்துளதை தயக்கமின்றி எடுப்பதுப்போல்
திருவமிழ்தாம் தீந்தமிழில் தித்திக்கும் பலவிருக்க 
ஒருபொழுதும் மொழியாதே உவர்

13.கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
வாழ்வது சிலநாளே வழக்கமு மதுதானே 
தாழ்வான மொழிபேசின் தரித்திரமா முலகினிலே !
தேனடைநற் கிளவிகளைத் தெளிவற்றோர் நாடாது
ஈனரென விழுவராம் இரந்து .

14. கவிஞர் சோமுசக்தி
நாவினிலே இனியசொல்லே நளினமாக நடமாடப்
பாவினிலே பழகுதமிழ்ப் பணிவுடனே பயின்றுவரப்
பூவிதழ்கள் புகுமுறுவல் புதுமுகத்தில் களையாடத்
தாவிவரும் தமிழ்மொழியே தவம்.

15. கவிஞர் குருநாதன் ரமணி
என்குறைகள் கண்டாலும் இறைவாநீ எனக்கருள
என்சுற்றம் என்நண்ப ரிடம்குறைகள் இருந்தாலும்
இனியவையே நான்கூறி என்னுள்ளம் பண்படவே
கனிகொண்டு வாழ்வதென்றன் கடன்.

16. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
இனியசொற்கள் அதனாலே இன்பமெங்கும் பொங்கிடுமாம்
கனிவுகொண்டு பழகிட்டால் கவர்ந்திடலாம் எவரையுமே
வாய்மைபேசி நடந்திடவே மகிழ்வதனை எய்திடலாம்
தூய்மையினோ டிருப்பதற்குத் துணி.

17. கவிஞர் பரமநாதன் கணேசு
கொட்டிடும் அருவியெனக் குறைவற்ற நலமிங்கு
எட்டிடில் வறுமையில் இரந்தேற்கும் நிலைவருமோ?
வாட்டிடும் துயரத்தில் வதைபட்டுக் கிடப்போரை
மீட்டிட எழுவீரே! விரைந்து!

18. கவிஞர் அர.விவேகானந்தன்
இனமென்றும் பிறவென்று மெதையுமிங்கே பிரித்துணர்ந்து
மனங்குமைந்தே உதிர்க்கின்ற மகிழ்வற்ற மொழிவேண்டாம்
பனைவெல்ல இனிப்பெனவே பலமொழியுள் நன்மொழியை
இனம்மறந்தே இயம்பிடுவோம் இனி!

19. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
இனியவையே உரைத்திடலே இனிநன்றாய் அமைந்திடுமாம்
கனிசுவையாய் உலகதனைக் கசந்திடாமல் நிறுவிடுமாம்
இனிமேலே நாளுமேநாம் இனியவையே உரைத்திடுவோம்
நனிநன்றாய் வாழ்வினிலே நாம்!!!

20. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
தித்திக்கும் நலம்பெற்றுத் திடமான மனங்கொண்டு
எத்திக்கும் புகழ்பெற்றிங் கெளிமையாக வாழ்வதற்கே
எப்போது முரைத்திடுவோ மினிமையான மொழியினையே
தப்பாது நலஞ்சேர்க்குந் தான்

21. கவிஞர் கனகத்தினம் செல்லமுத்து
நாதமிங்கு நளினமாகும் நலிவில்லா உரையாலே 
பூதமெங்கும் தெறித்தோடும் புகழ்பாடும் திருச்சொல்லால் 
வேதமெலாம் இசைந்தாடும் விளைவில்லாக் கருத்தாலே 
ஆதலினால் இன்பமெனச் சொல்! 

22. கவிஞர் கவிஞர் கோவிந்தராஜன் பாலு
மலரெனில் மனத்தினை மயக்கிட மகிழ்ந்திடலாம்.
மலர்ந்திடும் இதழ்களும் மயங்கிட இனித்திடுமே.
மலர்ந்திடச் சுவையுறும் மணமிகப் பதமாகப்
பலரும்போற் றிடஇனிதே பேசு.

23. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
மாதவம் புரிவதுபோல் மனத்தினிலே மகிழ்வேகும்
ஆதரம் கொளலதுவும் அடிமனத்தி லெழுகின்ற 
இன்சொலா லியம்புவதும் இனிதுவக்கும் உலகினிலே 
வன்சொலைத் தவிர்த்தேநீ வாழ் !

24. கவிஞர் அழகர் சண்முகம்
பூத்திருக்கும் மலரதனைப் புறக்கணித்துக் கூர்முள்ளைக்
கோத்துமா லையெனக் கொளல்போலே இனிதிருக்க
வன்சொலைவாய் மொழியணிதல் வளத்தைக்கீ றுமாதலால்
இன்சொல்லின் நறுமணத்தா லியம்பு

25. கவிஞர் சியாமளா ராஜசேகர்
வேர்ப்பலா அருகிருக்க வேப்பமரத் தின்கனியை 
யார்விரும்பிச் சுவைத்திடுவர் ? எவருமிலர் என்பதுண்மை!
இன்சொற்கள் அகத்திருக்க இன்னாச்சொல் பேசுவதால் 
என்னபயன் சிந்திப்பீர் ஏற்று .

26. கவிஞர் நடராஜ் மெய்யன்
புன்னகையை அடைத்திடும் புதுப்பெட்டக அதரத்தே 
மென்மொழி பகிர்ந்திட வழியிருக்க, அழுக்குள்ள 
சுடுசொற்கள் உதிர்ப்பது சுகமாமோ? கடுஞ்சொல்லின் 
வடுநீக்க வழியில்லை பார்.

27. கவிஞர் புனிதா கணேசன்
பாலிலே விடங்கலந்தால் பசும்பால துநஞ்சேயாம்
நாலிலே நவின்றதேதும் நலமிற்சொல் இலாதாயின்
ஆலிலே கரைந்துறையும் ஆடரவம் கக்குவிடம்
போலிவை பொசுக்கிடுமே போழ்து

28. கவிஞர் நெடுவை ரவீந்திரன்
நல்லவற்றை நவின்றாலே நனிதாகும் நமதுமனம்
அல்லவற்றை மொழிதலால் அகத்தினிலும் வடுவாகும்
வளத்துடன்வாழ் கவென்றுநாம் வாழ்த்துவதால் வாழ்க்கையுமே
வளம்பெறுமென் பவள்ளலாரின் வாக்கு

29. கவிஞர் தர்மா
நல்வழியில் நடப்போரை நாமும்பின் தொடர்ந்திங்குச்
செல்வதிலெப் பிழையுமிலை சிறப்புற்று வாழ்ந்திடுவோம்.. 
இழப்புகள்நம் எதிர்வரினும் தெளிவாக இருந்திடுவோம்
குழப்பமுறல் கொடுத்திடுமாம் கேடு..!
★★★

No comments: