பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு 16 (காப்பியக் கலித்துறை)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:16 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் 
http://painthamizhchsolai.blogspot.com/?m=0
பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--16
(காப்பியக் கலித்துறை)
1. கவிஞர் தர்மா
எங்கள் மொழியை இழிவாக்கிட எண்ணி வந்து 
பொங்கித் திரிவர் புவிமீதினில் புத்தி கெட்டோர் 
சங்கத் தமிழைச் சரிவாக்கிட விட்டு விட்டால் 
பங்கம் விளைந்து பரிதாபமாய் வீழ்ந்து போவோம்! 

2. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
ஏழை வயலில் உழுவானவன் ஏரு மோட்டிக்
காலைப் பொழுதில் களைவானவன் புல்லு நீங்க
வேலை முடித்த செயலோடவன் வீடு சென்று
மாலை யுரைவன் மனையாளுடன் கூடி நின்றே!

3. கவிஞர் சேலம் பாலன்
பாடாய் நிதமும் பலவாயிரம் பட்ட போதும்
வாடா திருக்க வருமேபெரு செல்வ மென்று
மாடாய் உழைத்தும் வளமேஇலை என்ற நாளில்
ஓடாய் இளைத்தர் உளமேமிக சோர்வ துண்டே!

4. கவிஞர் வள்ளிமுத்து
மானே மயிலே மதிபோலொளி மின்னு மீனே
வானே கடலே வனமோகினி யன்ன வந்த
தேனே தெளிந்த குளமீதினில் பூத்த பூவே
ஊனே உயிரே எனைக்காதலி இல்லை வீணே!

5. கவிஞர் நாகினி கருப்பசாமி
காழ்ப்புச் செயல்கள் கடுகேனுமி லாத நேய
வாழ்த்து நிரம்ப இளையோரணி வாட்டு மிந்தத்
தாழ்ச்சி உயர்ச்சித் தளைவேரறுத் தேயி ணைவார் 
வாழ்வு பயிரை வளமாக்கிடும் வல்ல ரென்றே!

6. கவிஞர் கோவிந்தராசன் பாலு
பூக்கள் புவியில் மணமேயழ காய்ம லர்ந்தேப் 
பாக்கள் பயிற்சிப் பயின்றேமன முங்க ளித்தே
ஊக்கம் மனத்தில் உயர்வாய்ப்பெற லாம்இ னித்தே
காக்கும் தமிழைக் கருவேயென லாம்சி றப்பே. !

7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
கண்ணே கனியே உனையேநினைத் திங்கு வாழ்வேன் 
பெண்ணே அழகே உறவேயெனக் கிங்கு நீயே
விண்ணே மதியே வியனேயுனக் காகி நிற்பேன்
பண்ணே பதமே எழிலேயெனைப் பற்று வாயே !

8. கவிஞர் ஃபக்ருதீன்
எண்ணும் எழுத்தும் இயல்பாகிய சிந்த யெல்லாம்
மண்ணில் வழுத்தும் மரபாகிய பந்த மெல்லாம்
கண்ணுங் கருத்தாய்க் கவியாகிடும் காட்சி யெல்லாம்
முன்னோன் முதலோன் முனைவாயிருக் கின்ற தாலே!

9. கவிஞர் பரமநாதன் கணேசு
ஆழத் துயரில் கிடந்தோரினி ஆடி யோடி 
வாழ, மனதி லெழுவேதனை மாய மண்ணில்
ஈழத் தமிழர் எழுவாரெனத் துள்ளி யென்றும்
வாழை யடிபோல் வளர்வோமெனப் பாடு வாயே!

10. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி
உள்ளத்(து) உடன்பா(டு) உடையாளொடும் ஒன்றல் இன்றிக்
கொள்ளும் துயரோ சிறிதாயினும் கொண்டு செல்லும்
வெள்ளத்(து) அனைய மனத்தாள்வது வேத னையே!
கள்ளந் தவிர்த்துக் கனியாமென வாழ்க இங்கே!

11. கவிஞர் சியாமளா ராஜசேகர்
குன்றி லுறையுங் குமராவுனைக் காண வந்தேன் 
கன்றை யிழந்த பசுவாயுளங் காய்ந்து நின்றேன் 
நின்தாள் பணிந்து நிலையேனெனக் கேள்வி கேட்டேன் 
துன்பந் துரத்தி யடித்தாலெனைத் தேற்று வாயா?

12. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
அன்னைத் தமிழே உனையேதுதித் திங்கு வாழ்ந்து 
கன்ன லினிய மொழியைக்கடி தாக வின்றி
நன்சொல் நவின்று புவிமீதினில் நாளு மேநான் 
இன்சொற் களாலே இனிதேயுரைத் திங்கு வாழ்வன்! 

13. கவிஞர் ரமேஷ் மாதவன்
மாயன் தலையில் மயிற்பீலியும் சூடி வந்தான்,
தூய மனத்தில் சுடராயொளி வீசி வந்தான்,
தீய வினைகள் தெறித்தோடிடச் சீறி வந்தான்,
ஆயர் குலத்தின் அருந்தோன்றலைப் பாடு வோமே!

14. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
சோலை அடைந்தே, பசும்பாவலர் கண்டு, சொற்பா
மாலை தொடுத்துப் புதிதாய்க்கவி செய்து, வாழ்நாள்
வேலை தொடங்கித் தளராமனத் தோடு கல்விச் 
சாலை இறுக்கிப் பிடித்தேதமி ழென்று காணே !

15. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்
நாயும் நரியும் நயமாகவே நன்றி கொள்ளும்
மாய உலகில் மயங்காதிரு மாண்பு பெற்றே
தீய வழியில் திளைத்தோடிடும் மாந்த ரெல்லாம்
சாயம் வெளுக்கும் இடிமேலிடி வந்து சேரும்! 

16. கவிஞர் குருநாதன் ரமணி
மாலைப் பொழுதில் விழிமேல்வரும் வான வண்ணம்
கோலம் முழுதும் கொளுமாமனம் ஆன்ற டங்கும்
ஆலம் விழுதை மலைப்பாம்பென வாக்கு மல்லில்
காலத் தொடரில் கழிநாளென ஒன்று போமே.

17. கவிஞர் பொன்.பசுபதி
அன்போ டறனும் அகலாதெனை ஆக்கி வைப்பாய்
பண்போ டொழுக்க(ம்) இணைந்தேயெனுள் பற்ற வைப்பாய்
என்று(ம்) மெதிலும் எழிலோடெனை ஏற்றி வைப்பாய்
குன்றி(ல்) லுறையுங் குமராவுனை வேண்டி னேனே! 

18. கவிஞர் சோமு சக்தி.
காலங் கனியுங் கலங்காதிரு காத்தி ருந்தே
ஆலம் விழுது மசைந்தாடிட ஆற்று வாயே
கோலங் கொளுமிக் குரங்காடிடு கொப்பு தாவே
பாலம் பனியாற் படராமுனம் பாதை மாறே.

19. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
எண்ணிப் புனைய எளிதாய்நமக் குள்க னிந்துப் 
பண்ணா யியற்றப் பலவாறது வோயி னிக்கும் !
எண்ணு மெதையும் எழிலாய்ப்புனைந் தாலி லங்கும் 
வண்ணத் தமிழை வளர்ப்போமென நீவி ளம்பு !

20. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி
மண்ணும் ,மரமும் ,மணம்வீசிடும் பூக்க ளெல்லாம்,
விண்ணும் ,விலங்கும் விசமேதரு பாம்பு மெல்லாம்,
கண்ணாம் ,களிப்பாம், கருத்தாகிய பெண்க ளெல்லாம்,
பண்ணாம் ,பதமாம் ,பரமாகிய சித்த னாலே 

21. கவிஞர் சாமி சுரேஷ்
வாக்கு ரிமைத்தேர் தலிலேவலி மிக்க ஒன்று
நாக்கு நகைப்பேச் சினிலேநய மாக வென்று
காக்கின் றபணி தனிலேதரங் கெட்டு வந்தால்
ஆக்கு கிறதெய் வமெல்லாம்அணி நிற்ப தேனோ?

22. கவிஞர் அய்யப்பன்
நாறும் மலர்மா மகள்சூடிய மாலை தந்தே 
நாறும் மலராள் மதனேவிய மாலை வென்றாள்
மாறா மனத்தால் மகள்பாடிய மாலை கொண்டே 
மாறா மலராள் மனமேவிய மாலை வென்றாள்

23. கவிஞர் தங்கமணி சுகுமாரன்
புல்லாள் புலப்பாள் தளிர்ப்போலொரு தென்ன கத்தாள்
எல்லி நகைப்பாள் இயலாதவ னாயிம் மீளி
அல்லங் கடித்து நெடியேறிடும் போலப் பாய்ந்து
கொல்ல வருமாம் கொலையேற்றினைக் கண்ட சேனை!

24. கவிஞர் இதயம் விஜய்
முந்துந் தமிழே யுகந்தோன்றிட முன்பி றந்தாய்... 
இந்தப் புவியில் இளந்தேகமும் பெற்று நின்றாய்... 
செந்த மிழாய்நீ செழிப்போடொளி தந்து மீர்த்தாய்... 
கந்தன் மனத்தைக் கவியேகொடு வென்றி கொண்டாய்! 

25. கவிஞர் புனிதா கணேசன்
பொன்னே பொதிகை பொலிந்தாடிடப் பொங்கு பொற்பா 
சொன்னா லதிலே சொரிந்தாடிட விங்கு சொர்க்கம் 
தொன்மைத் தமிழால் தெளிகாப்பியம் காட்டு மாப்போல்
ஒன்றை விருப்பாய்த் தொடுத்தேனவை ஏற்கு மாறே!

26. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்
தேனா டதெப்ப மதுவாடவும் கார்கு ழல்தான்
வானோக் கிவளைந் துமேலாடவும் காது கம்மல்
கீனோக் கியசைந் தசைந்தாடவும் பார்ப்ப வர்கண்
தானும் பதைத்தா டவும்பாவைய ராடி னாரே! 

27. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
சோலை மலரே நிதமேஇனி சொந்த மண்ணில்
காலை மலர்ந்து பலனேதர கண்ட தாலே
மாலை மயங்க மனமேயுனை நாட யானும்
வேலை மறந்தே யுனையேநினைத் திங்கு வாழ்வேன்! 

28. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
அன்னைத் தமிழே எழிலாயுனைப் பாது காப்பேன்.
கன்னல் சுவையே இனிதாயுனைச் செப்பு வேனே
உன்றன் பெருமை உலகேயறி யும்வ கைதான்
என்றன் பணியே எனவேவர மாற்ற முண்டோ?!

29. கவிஞர் இரா.கண்ணன்
அன்னை மொழியை அறியாமலே கல்வி கற்றுக் 
கன்னல் தமிழில் கதையாமலே கால மோட்டி
இன்னல் புரிந்தோம் இழிவாகவே இந்த நாட்டில்
என்ன படித்துத் தெளிவோமினி நாமு மிங்கே..!

30. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
எந்நாள் எழுத்தைப் பெறுவோமென ஏங்கி நின்றேன் 
அந்நாள் வரவு கனிவாய்மலர் கண்ண வந்தாய் 
செந்நாள் அடியார் அமுதாமருள் ஊட்டி விட்டாய் 
இந்நாள் மறையின் பொருளாமது செல்வ மென்றாய்!

31. கவிஞர் நடராஜ் மெய்யன்
மானே மயிலே மலைக்காட்டிடை மல்லி சிந்தும் 
தேனே தினையே திருவாய்மலர் தீஞ்சு வையே 
தானே வருவாய் எனக்காயுனைத் தந்து போவே
நானே எனையே உனக்காயினி நல்கு வேனே!!

32. கவிஞர் விவேக்பாரதி
சந்தம் வழியும் கவியாவையும் மேல்த ரித்துச்
சிந்துக் கவியைச் சிதையாவணஞ் சீர்மை யாக்கித் 
தந்த தனத தகதாமென வோடி யாடி 
வந்து செழுமைத் தமிழானவள் உள்நி றைந்தாள் !

33. கவிஞர் சுந்தரி தேவன்
நீண்டக் கொடிய கனவேயென இந்த வாழ்க்கை 
ஆண்டு பலவும் கடந்தாலுமே ஆழி் போன்ற 
வேண்டா விதியின் விருப்பாயென வாழும் மாந்தர் 
வேண்டு முறுதி கொள்வோமெனக் கொள்ள லாமே! 
★★★

No comments: