பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Apr 2017

#பாட்டியற்றுக_தொகுப்பு - 11 (அறு சீர் ஆசிரிய விருத்தம்)


அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! பாட்டியற்றுக:11 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.
பல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது. 

இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
இந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய "பைந்தமிழ்ச் செம்மல்கள் " உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும் painthamizhchsolai.blogspot.com பகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும். 
பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.
நன்றி.!
***** ***** *****
. பாட்டியற்றுக,--11
(அறு சீர் ஆசிரிய விருத்தம்)
1. கவிஞர் தர்மா
கந்தலுடுப் பணிந்தாலும் காத்திடுவார் நமையென்றும் 
கண்போ லிங்கே.. 
தந்தையினைத் தெய்வமென்றே நாமென்றும் வணங்கிடவே 
தரணி போற்றும்..! 
குந்தகமும் செய்திங்கே நமைவெல்லக் கூடுவோரின் 
கூற்றை வீழ்த்த 
வந்திடுவார் நம்துணையாய் என்றென்றும் நம்முடனே 
வாழ்வில் தானே! 
***
2. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்
உலகினிலே யாவருக்கும் வாய்த்திட்ட இப்பிறவ. 
உயர்ந்து நிற்க,
உலவுகின்ற வாய்ப்புகளைக் கண்டிட்டுப் பெறச்செய்வார்
உன்றன் தந்தை,
நிலவினொளி இரவினில்வந் திருள்போக்கு முதவிபோன்று
நின்வாழ்க் கையில்
பலதடைகள், இருளாகச் சூழ்ந்திடினு மதுவிலக்கிப்
பலன்செய் வாரே !
***
3. கவிஞர் விவேக்பாரதி
ஒருவிந்தி லுயிர்தந்து பாராட்டிச் சீராட்டி 
ஒழுக்க மெல்லாம்
பெருகிவரக் கற்பித்துத் தனதான ஆசைகளைப்
பேசி டாமல்
இருக்கின்ற இன்னலெலாம் தாந்தாங்கி உயர்ந்தோங்க. 
இளைத்து ழைத்து 
வருகின்ற என்தந்தை போலெந்தத் தெய்வத்தை 
வணங்கு வேனோ ? 
***
4. கவிஞர் சோமு சக்தி
அரண்மனையில் ஏவலராய்ப் பணியாற்றி யிருந்தாலும் 
என்றன் அப்பா 
கரங்கொண்டு சமைத்திட்டால் அறுசுவைதா 
னதிரவைக்கும் 
கலையில் வல்லார்
வரந்தானே ஊருணியில் அவர்தந்த பயிற்சியெலாம்
வளருங் காலே
உரந்தானே ஏழ்மையிலும் எமைப்படிக்க வைத்தபாடு
உணர்வேன் நானே !
***
5. கவிஞர் வள்ளிமுத்து
பாடாக நீபட்டாய் பாடெல்லாம் எனக்காகப்
பாசத் தாலே
தேடாத செல்வங்கள் தேடிவைத்தாய் உழைப்புமிகு
தேகத் தாலே
ஓடாக நீதேய்ந்தும் நான்வாடக் கூடாஅ
உழைப்பைத் தந்தாய்
ஈடாகா எத்தெய்வம் என்னப்பா உம்முன்னே.!
எனக்கு நீயே.!
***
6. கவிஞர் கோவிந்தராஜன் பாலு
தித்திக்கும் தமிழாகக் கண்ணாகக் காத்தவரே
திகட்டா அன்பால்.
எத்திக்கும் புகழ்பெறவே ஏட்டறிவைத் தந்தீரே
ஏற்றம் கொண்டேன்.
நித்திரையும் இல்லாமல் நித்தமுமே உழைத்திட்டீர்
நேர்மை வாழ்வில் 
சத்தியமாய் சொல்கின்றேன் சாதனைகள் செய்திடுவேன்.
சாதிப் பேனே.!
***
7. கவிஞர் விசுவநாதன் மீனாட்சி சுந்தரம்
"நல்லொழுக்கந் தனைக்கருத்தாய்க் காத்துவந்து கனிவும் கொண்டு, 
நாளெல் லாமும்
தொல்லைகளைத் தான்தாங்கி இன்பத்தை எமக்களிக்கும் 
தூய உள்ளம்,
இல்லமதின் அறவிளக்கு தந்தையேதா னென்பேனே ! 
இறைவன் தந்த
செல்லமான அப்பாவின் சிறப்புகளைச் சொல்லுவது 
சிறந்த பேறே ! 
***
8. கவிஞர் சுந்தரராசன்
தந்தைதனைப் போற்றுகின்ற அறுசீரா சிரியமொன்றைத்
தமிழில் செய்ய
நந்தமிழின் பாவலரும் பயிற்சியிலே ஆணையிட்டார்
நானு மிங்கே
சிந்தையிலே எனைவைத்தே சீரளித்துச் சிரங்கோதிச்
செல்வ னென்னை
இந்தமணித் துளிவரையுங் காத்திடுந்தாய் தாள்பணிவேன்
எந்தை என்றே!
***
9. கவிஞர் சியாமளா ராஜசேகர்
தன்தேவை தனைச்சுருக்கித் தன்பிள்ளை நலம்பேணும் 
தந்தை யுள்ளம் !
துன்பங்க ளண்டாமல் முப்போதும் இமைபோலத் 
துணையாய்க் காக்கும் !
அன்பாக அரவணைத்துப் பல்கலைகள் பயிற்றுவித்தே 
ஆன்றோ னாக்கும் !
பொன்னாட்டில் தந்தையரின் பாசத்திற் கீடுண்டோ 
புகல்வாய் நெஞ்சே !
***
10. கவிஞர் புனிதா கணேசன்
உலகிலுயிர் கொடுத்தனைநீ உன்னுதிரம் உதிர்த்தேநீ 
உய்யக் காத்துப் 
பலவற்றைக் கற்றிடயான் பாங்குடனே பள்ளியிலே 
பயிலப் பண்ணிக் 
கலங்கிடாது நானறியக் காலமதில் கவசமெனக் 
கண்டேன் எந்தாய்! 
நிலவிடுமிவ் உலகமதில் நினதன்ப தற்கேதும் 
நிகரா காதே!
***
11. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து
கோடியணு விலோரணுவாய் என்னையுமே முந்தவைத்தாய் 
குருதி யோடே
நாடிநரம் பைமுறுக்கி நஞ்சையிலு முழைத்தென்னை
நாட வைத்தாய்
மாடிவீட்டை மாளிகையாய்க் கட்டிவைத்தாய் நஞ்சையிலே 
மகனும் வாழ
ஓடியோடி உழைத்துநீயும் மரித்தாயே உறைவதென்றோ 
உன்ற னோடே.!
***
12. கவிஞர் இதயம் விஜய்
மின்னலெனத் தோன்றிடுமே நெஞ்சத்தின் ஆழத்தில் 
மிளிரும் நேசம்...
தென்றலெனப் பேசிடுமே ஏர்பிடித்த இரும்புக்கை 
தெய்வத் தீண்டல்...
தன்னைவருத் திக்கொண்டு தனயனுக்காய் ஒளிதருதல்
தந்தைப் பாசம்...
கன்னலதும் கசந்திடுமே கற்கண்டும் புளித்திடுமே 
கனிந்த அன்பால்! 
***
13. கவிஞர் சாமி சுரேஷ்
பையவிரல் பிடித்துபாத நடைப்பழக்கும் பண்பினிலே
பச்சைப் பிள்ளை
நெய்யடிசில் அமுதூட்ட நெஞ்சினிலே மிதித்தாலும்
நெருட லில்லை
பொய்திருட்டுக் கூடாதென் றுரைத்திட்ட அறிவுரையில்
புரட்டே யில்லை
வையமதின் தலைமகவாய் வார்த்தெடுக்கும் வாழ்வினிலே
வறண்ட வாழ்வே.!
***
14. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியம்
அப்பாநீ அவதாரம் அரிதாரம் பூசாத
அபூர்வ ராகம்
சிப்பாயாய் நீவருவாய் சின்னயானை போலுமாவாய்
சிறுத்தை யும்நீ
தப்பாமல் மறுபிறப்பில் தந்தையென்று பிறக்கவேண்டும்;
தனயன் நீயாம்
அப்போது என்தோளில் நானுன்னை சுமந்திடத்தான் 
அமைதி யாமே!
***
15. கவிஞர் மாரிமுத்து
கோபத்தின் கொடுஞ்செயலைக் கூண்டோடே ஓடவிடும்
கொள்கை தந்தாய்
ஆபத்தில் ஆறுதலாய் அல்லலதை யகற்றிவிடும்
அறிவு தந்தாய்
தீபத்தின் சுடரொளியாய் நானிருக்க கருந்திரியாய்த்
தீயில் வெந்து
தூபத்தில் கரைகின்ற சாம்பலெனத் தனைமாய்க்கும் 
தூய அன்பே!
***
16. கவிஞர் பரமநாதன் கணேசு
தோட்டத்தில் பொழுதெல்லாம் பசியோடே உழைத்துழைத்துச்
சோறு தந்தே
வாட்டத்தைக் காட்டாமல் வரும்துயரை யேற்றுநல்ல 
வாழ்வை யீந்தே 
தேட்டத்தை எண்ணாமல் தேவைகளைத் தான்தேடித்
தினமும் தந்தே
வீட்டிற்காய் எரிகின்ற மெழுகுவர்த்தி யாம்தந்தை
மேன்மை யாமே! 
***
17. கவிஞர் ரமேஷ் மாதவன்
பிள்ளைப்ப ருவந்தன்னில் அன்பினையும் அறிவினையும் 
பெற்றேன் உன்னால்
பள்ளிப்ப ருவந்தன்னில் கல்வியையும் ஆற்றலையும் 
பார்த்தேன் உன்னால்
துள்ளும்ப ருவந்தன்னில் விவேகமதும் வீரமுமே
சுரந்த துன்னால்
தள்ளாத உன்வயதில் கண்ணதனின் இமைப்போல்நான் 
தாங்கு வேனே!
***
18. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
தந்தையன்பு பாசமது தலைவணங்க வைத்திடுமே 
தயக்கம் வேண்டா. 
எந்தநாளும் நிகரான ஏற்புடைய பந்தமன்றோ 
என்று மேற்போம் . 
சிந்தனையை நல்வழியில் சீர்படுத்தும் மகானன்றோ 
சிறந்து வாழ 
எந்தவழி செவ்வழியா மென்றுரைக்கும் தெய்வமன்றோ 
என்று மோங்க |
***
19. கவிஞர் இரா.கண்ணன்
உயிர்கொடுத்தே உள்ளமதில் சுமந்திடுவார் இவரைப்போல்
உண்டோ தெய்வம்
வியர்வையது மண்வீழும் விடிவெள்ளி நமக்கவரே!
விழுதா யென்றும்
துயர்துடைத்தே யென்றுநம்மில் துணையாக நின்றிடுவார்
தோளும் தந்தே
அயராமல் உழைக்கின்ற அப்பாதான் நமக்கெல்லாம்
ஆணி வேரே! 
***
20. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி
பெற்றெடுத்த பாக்கியத்தைப் பேணுதலாய் வளர்ப்பதிலே
பெரிது வந்து 
நற்கருணை யோடெம்மை நலம்பேணி நல்மகவாய் 
நானி லத்தில் 
பெற்றகடன் பிறழாமற் பேர்புகழாய் நாமோங்கப் 
பெரிதா யெண்ணி 
உற்றவழி காட்டுதற்கோ ருயிருண்டோ தந்தையன்றி 
உலகி லிங்கே !
***
21. கவிஞர் அய்யப்பன்
அப்பப்பா விப்பிறவி நானெடுக்க வென்னப்பா 
அகரம் ஆனார் 
ஒப்பில்லாக் கல்வியிலும் ஒழுங்கினாலும் நானுயர
உகரம் ஆனார் 
செப்பரிய உழைப்பாலே தன்னைவிட எனையுணர்த்தும் 
சிகரம் ஆனார் 
இப்போது மறைந்தாலும் எப்போதும் குருவாயுள் "
இருக்கின் றாரே! 
***
22. கவிஞர் ஃபர்சானா ரசீக்
பலத்துடனே பாரதனில் பண்பினராய்த் திகழ்ந்திடவே 
பாடாய்த் தேய்ந்து 
நலத்துடனே களிப்புற்று வளத்துடனே வாழ்ந்திடவே 
நன்றாய் ஓம்பி
இலக்கதனை யானெட்ட என்றென்றும் ஏணியாகி 
இன்பம் கண்டாய்
பலவுண்டாம் உம்மருமை பகருதற்குச் சொற்களில்லை 
பாச எந்தாய்!
***
23. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்
பாசத்தை மனத்துக்குள் பக்குவமாய் மறைக்கின்ற
பண்பு கொண்டு
தேசத்தில் சிறப்புற்று வாழ்வாங்கு வாழவைக்கும் 
தெய்வ மாகி 
மாசற்ற அன்புதனை வேறுபாடு காட்டிடாத
மனத்தோ டேகி
நேசமாகத் தம்கடமை தவறாது செய்திடுவார் 
நிதமும் இங்கே!
***
24. கவிஞர் பொன்.பசுபதி
சிறப்பான கல்விகற்றுச் சீருடனே வாழ்ந்தாலும் 
செல்வம் ஈட்ட
முறையாக முயலாமல் தன்தந்தை செல்வத்தால் 
முகிழ்ந்தே வாழ்ந்தார்
அறவாழ்வில் அனுவளவும் பிறழாத எந்தையுடை
அன்பு தன்னை
மறவாமல் இன்றைக்கும் மனத்துள்ளே வைத்தேநான்
மகிழ்கின் றேனே! 
***
25. கவிஞர் குருநாதன் ரமணி
தந்ததினால் பேர்கொண்டே குடும்பத்தை யாள்பவரே
தந்தை யாவர்
வந்தவுயிர் அன்னையவள் பேணுவதில் உறுதுணையாம் 
வள்ள லாவர்
எந்தவொரு அவையினிலும் முன்னிருக்கச் செய்பவராய் 
எந்தை யென்றே
எந்தையவர் ஈசனுரு என்னன்னை மலைமகளாம்
என்பேன் யானே.!
***
26. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்
இன்பமஃது என்வாழ்வில் எப்போதும் தங்கிடவே
இன்ன லையும்
கன்னலென வினிதாக வேற்றுநித முழைத்தாயே 
களிப்பு கொண்டு
என்மனத்து ளெப்போதும் நல்விதையை நீதூவி
என்னை யென்றும்
நின்றுநிதம் காத்திட்ட யெந்தையே யுனைநானே
நினைவில் வைப்பேன்
***
27. கவிஞர் அரவிந்த் கார்த்திக்
என்னுயிரா யிருப்பவரே எனக்குயிரைத் தந்தவரே
என்று முன்னை
நன்றியுட னென்வாழ்வில் நினைத்திடுவேன் நலம்பலவும்
நானி லத்தில்
நன்னெறியால் கிட்டிடுமே யெனவுரைத்து நல்வழியை
நயந்தே காட்டி
நன்மையதைச் சேர்த்திட்ட என்தெய்வ மென்தந்தை 
நானு ரைப்பேன்
***
28. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணியன்
தனக்கேதும் கொள்ளாமல் உலகினிலே உறவினுக்கே 
தந்தீர் உம்மை
மனதினாலும் ஒருதீங்கு நினையாமல் மாற்றோரை 
மன்னித் தீரே
இனபேதம் கொள்ளாமல் அனைவருடன் பழகிடுமோர் 
இயல்பு கொண்டீர்
எனக்களித்தீர் கண்டிப்போ டிவ்வுலக இன்பமெல்லாம் 
எந்தை நீரே!
***
29. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
கல்வியினைக் கண்ணாகக் கற்பித்து மறைமொழியில் 
காட்டி நிற்பர் 
தொல்வினையைக் கழித்திடவே அறச்செயலைப் பயிற்றுவித்துத்
தொண்டு செய்வர் 
சொல்லமுதில் சொல்லெடுத்தே உலகியலில் வாழவைத்துத்
தூய்மைச் செய்வார் 
அல்லலற வைக்குமிவர் தந்தையென்று பெயர்பெறுவர் 
அன்பில் அன்றோ? 
***
30. கவிஞர் சேலம்பாலன்
அடிமையென நாடிருந்த அந்நாளில் விடுதலைக்கே
அகந்து ணிந்து
கடியபல துன்பங்கள் கண்டுந்தான் விடுதலையைக்
காண்ப தற்குத்
துடிப்புடனே ஈடுபட்ட தோன்றலவர் என்தந்தை
தூய ராவார்
நடிப்பில்லா ஈகியான நாயகரைப் போற்றிடுவேன்
நாளும் நானே.! 
***
31. கவிஞர் சுந்தரி தேவன்
தந்தையவர் கைப்பிடித்துத் தரணியிலே நடக்கையிலே
தனையன் என்றன் 
சிந்தையினைச் சீர்படுத்திச் சுற்றமுடை நட்புஞ்சேர் 
செல்வம் என்னை
வந்தடையும் வழியனைத்தும் எடுத்தியம்பி என்நெஞ்சில் 
வாசம் வீசும்
எந்தைக்கு மாற்றொருவர் இவ்வுலகில் யாருமில்லை 
என்பேன் நானே.
***
32. கவிஞர் க.அர.இராசேந்திரன்
தோள்மீதில் எனையமர்த்தித் தேய்ந்ததொரு கலப்பையிலே 
தோட்டேர் ஓட்டத்
தாள்மீது கண்ணிருக்கும் தோள்மீது யிருவருடைத் 
தாகிப் போற்ற
வாள்மீது நடப்பதுபோல் வாழ்க்கையிலே யின்னல்கள் 
வந்த போதும்
தாள்மீது பாரமது தாங்கித்தான் பயிருக்குத் 
தாயாய் எந்தை..! 
★★★

No comments: