பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

5 Oct 2015

பாட்டியற்றுக - 7


வணக்கம்  நண்பர்களே.! கவிஞர்களே.! 
பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 7" இதோ.!
முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! 
*** *** *** ***
ஆசிரிய விருத்தம்

வாழ்க்கையே போராட் டந்தான்
வருமிடர் நீரோட் டந்தான்
தாழ்வையே நினைந்து நைந்து
தளர்ந்துபோய் துவண்டி டாமல்
வாழ்ந்திட நினைத்தால் போதும்
வானமும் கையில் சேரும்
வாழ்ந்திட வேண்டும் இந்த
வையகம் வாழ்த்து மாறே.!

பாவலர் மா.வரதராசன்

*** *** *** ***
கருத்தூன்றுக.:
ஆசிரியப் பாவின் இனமாகிய விருத்தம் இக்காலத்திற்கு மட்டுமன்றி நம் இலக்கிய வரலாற்றின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டவோர் பாவினமாகும்.
இன்று பல மரபு கவிஞர்களாலும் இயற்றப்பெறும் பாவினமான "ஆசிரிய விருத்தம்."
அறுசீர்கள் தொடங்கிப் பல சீர்கள் வரையிலான அமைப்பில் முற்காலத்தில் பாடப்பெற்றன.
தற்கால வழக்கில் மிகச் சிலவே நடைமுறையில் உள்ளன.
நம் சோலையின் இப்பகுதியின் வாயிலாக நாம் பல்வேறு விருத்த வகைகளைக் கையாண்டு மரபைக் காப்போம்.
மேற்கண்ட பாடல் "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." ஆகும்.
பொது இலக்கணம்.
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், நான்காம் சீரும் மோனையால் இணைந்து,
* மூன்று சீர்களை அரையடியாகவும், அடுத்த மூன்று சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஒரு அரையடிக்கு " விளம், மா, தேமா." என்ற சீர் வரையறையைக் கொண்டும்,
* ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிந்தும்
வருவது "அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.
விளச்சீரெனில் (முதல்சீர்.)கூவிளம், கருவிளம் இரண்டில் எதுவும் வரலாம்
மாச்சீர்(இரண்டாம் சீர்.) தேமா, புளிமா எதுவும் வரலாம்.
தேமா.(மூன்றாம் சீர்.) தேமாவாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.

நன்றி 

1 comment:

Iniya said...

வணக்கம் பாவலரே! பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

ஏதோ முடிந்த வரை முயற்சித்துள்ளேன் ஐயா. நன்றி !

வாழ்வினை எண்ணி நாளும்
வலுவுடன் வகுக்கும் திட்டம்
தாழ்வினை நீக்கி வெல்லும்
தளர்வினை போக்கிச் செல்லும்
சூழ்நிலை என்று கூறி
சோம்பலை வளர்த்தல் தீது
பாழ்நிலை தேடா விட்டால்
படிநிலை தோன்றும் நன்றே !