பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 Nov 2015

பாட்டியற்றுக 11இன் தொகுப்பு



அன்பு நண்பர்களே! கவிஞர்களே! வணக்கம்.!
பாட்டியற்றுக 11 இன் தொகுப்பு, அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல கவிஞர்கள் நன்கு தேர்ச்சியடைந்து விட்டனர் என்பது இப்பயிற்சியில் மிகக் குறைவான திருத்தங்களே இருந்தன. என்பதனால் அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தோம் இது பைந்தமிழ்ச் சோலையின் அனைத்துப் பங்கேற்பாளரும் பெருமை கொள்ள. வேண்டிய சாதனை.
தொகுப்பைப் படிக்கும் அன்பர்கள் பங்கேற்ற கவிஞர்களை வாழ்த்தினால் ஊக்கமாக இருக்கும்.
நன்றி!!!

பாட்டியற்றுக தொகுப்பு -11
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


1.கவிஞர் வீ.சீராளன்
துடிக்கின்ற இதயத்தில் தூங்கும் எண்ணம் 
       தொடர்கின்ற நொடியில்லை வெற்றிக் கிண்ணம் 
வெடிக்கின்ற இளம்பஞ்சில் நூலைச் செய்தால் 
       வெகுநாட்கள் பயன்பாடும் இல்லை நெய்தால் 
படிக்கின்ற இளைஞர்க்கும் பாடம் தன்னில் 
       பகுத்தறிவை உணர்த்துவதால் பாவம் போகும் 
நடிக்கின்ற மனங்கொண்டார் நாட்டில் வாழ்ந்தும் 
       நமக்கென்று சுயப்பண்பை வகுத்தல் நன்றே !

2. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்
தாயன்பைக் கண்டதுமே தாவி யோடித் 
        தன்னிலைதான் ஈர்த்ததடி என்றன் தோழி . 
மாயங்கள் செய்திடுவாள் மாதா நாளும் 
       மனமிரங்கிப் பேசிடுவாள் கேட்போம் நாமும் . 
காயங்கள் மாற்றியுமே காத்து நின்று
       கருணைமழை பொழிகின்ற தாயி னுள்ளம் 
சேயான என்றனையும் சேர்த்து வாழ்வில் 
     செல்வங்கள் தந்திடுவாள் என்றும் வாழ்க ! 

3. கவிஞர் வெங்கடேசன்
தேசமெலாம் மழைபொழிந்து நீரும் சேர்ந்து
        தீங்கரும்பு நெல்வாழை சிறக்க வேண்டும்
வாசமுள்ள மலர்களினால் வனப்புக் கொண்டே
         வண்ணமிகு தோட்டங்கள் வளர வேண்டும்
காசினியில் மனிதரெலாம் கசப்பு நீங்கிக்
        களிப்புடனே கூடிவாழும் காலம் வேண்டும்
ஈசனுனை யடிபணிந்தோம் இவற்றை வேண்டி
        இராசமன்னார் குடிநின்ற எங்கள் கோவே!

4. கவிஞர் வள்ளிமுத்து
தூரத்தில் செலும்போதும் விழியைச் சாய்த்துத்
        தூண்டிலிட்டுத் தூக்கிலெனை ஏற்றி னாளே
வாரத்தின் ஏழுநாளுங் கனவில் வந்து
        வாழ்நாளைக் கற்பனையாய் மாற்றி னாளே
வீரத்தின் புலியெனவே திரிந்த வென்னை
        வீடடங்கும் பூனையாய் மாற்றி னாளே
பாரத்தை யிறக்கிவைக்க முயற்சி செய்தேன்
        பாவையவள் பார்வையோ பாழுங் கள்ளே...!

5. கவிஞர் சுந்தரராசன்
பாடறியாப் படிப்பறியாப் பாலன் நானே!
       பைந்தமிழின் நிழல்கண்டே சோலை சேர்ந்தேன்!
ஏடறியா எழுத்தறியா இளைஞன் நானே!
       இளைப்பாற இடந்தேடிச் சோலை சேர்ந்தேன்!
வீடறியா வீதியிலா வீணன் என்னை
      வியப்போடே விழிவுயர்த்தி வி்சையால் வாழ்த்தி
நாடறிய நகரறியச் செய்யும் நங்கை
      நற்றமிழாள் வாழுமிடம் சோலை தானே!

6. கவிஞர் குருநாதன் ரமணி
மாலையிலே காலாற நடக்கும் போது
.      வயல்களிலே தென்காற்றின் அலைகள் ஓடும்
சாலையிலே ஆள்வண்டி ஏதும் இல்லை
.      சாதகமாய் ஆனதிலே இதழைக் கூர்த்தே
மேலையிலே தென்னைமரத் தோப்பி னின்றே
.      மெட்டொன்றைக் கூவுகுயில் பண்ணை நானும்
ஓலமெனச் சீழ்க்கையொலி எதிர்பாட் டாக்க
.      ஒவ்வாதே குயில்பழிக்கும் மோனம் காத்தே!

7. கவிஞர் சுரேஷ் சீனிவாசன்
இலக்கணத்தை அறிந்திட்டேன் நானும் இன்றே
       இங்கதனைப் பயிற்றுவித்த குருவும் நீரே
அலகிடுதல் முறையாக முதலில் செய்தே
      அழகாக வார்த்தைகளை வரிசை வைத்தே
பலபொருளைப் போற்றிடவே கருத்தைச் சொல்லிப்
      பாடலினைப் பிழையின்றி முடிப்பேன் நானே
புலமைமிக்கோர் எழுதுமந்தப் பாடல் போல
       புகழதனைப் பெற்றுவிடும் என்றன் பாவே!

8. கவிஞர் இரா.கி. இராஜேந்திரன்
செஞ்சொல்லால் துதிசெய்தே சீராய்ப் பாடு
          செங்கண்ணன் தேவாதி தேவர் வேண்டி
நஞ்சுண்ட கோமானை நாவால் பாடு
          நற்சாந்தி லபிசேகம் தினமும் செய்தே
செஞ்சம்பாப் பொங்கல்சோ றுபடைத் திட்டே
          தஞ்சத்தில் பாதத்தில் பணிந்து நாளும்
வஞ்சித்தல் குணங்கொள்ளாத் தன்மை யோடு
           வண்ணத்தால் அன்றாடம் வாழ்வு கொள்ளே!

9. கவிஞர் சேலம் பாலன்
தமிழ்மொழியின் சங்ககால நூல்கள் சொல்லும் 
            தன்னேரில் கருத்துகளை உலகம் ஏற்றால் 
அமிழ்தமெனும் வாழ்க்கையினை உலகம் காணும் !
            அனைவருமே இன்பத்தில் மகிழ லாமே !
சிமிழதனுள் இருக்கின்ற குங்கு மம்போல் 
            சிறப்பாக மக்களெலாம் செம்மை யாவர் ! 
இமிழ்கடல்சூழ் உலகத்தில் வாழும் மக்கள் 
             எல்லார்க்கும் தமிழ்நூல்கள் ஒளிவி ளக்கே !

10. கவிஞர் பரமநாதன் கணேசு
அருகிருந்து வேண்டியதை யாக்கித் தந்தே
...       அன்னையென அரவணைத்து நிற்பா ளென்றும்
வருமனைத்துச் சோதனைகள் வாட்டும் போதும்
...        வைத்தியனா யருகிருந்து வாழச் செய்வாள்
தருமனைத்து (உ)ணவிலேதன் அன்பைச் சேர்த்துத்
...        தளர்வறியாப் பக்தனாகிப் படையல் வைப்பாள்
கருவறையி லென்சேயைச் காத்தே ஈன்று
...        கையிலேந்திக் களிக்கவைப்பாள்! மனையாள் தானே!

11. கவிஞர் பசுபதி
காவியமா ஓவியமா கவிதைக் காடா?
. . .     கம்பநாடன் தோண்டிவைத்த கவிநீ ரூற்றா?
நாவினிக்கும் மனமினிக்கும் படிக்கும்போதே
. .      நரம்பெல்லாம் தேன்பாயும் தென்றல் காற்றாயப்்
பாவினிக்கும் பொருளினிக்கும் சீர்க ளெல்லாம்
.        பண்பலவும் ஏந்திவரும் இராமகாதை
ஆவியுள்ள வரையில்நாம் இன்பம் கொள்ள
         ஆக்கிவைத்த மறைநூலாம் அறிவீர் நன்றே!

12. கவிஞர் அழகர் சண்முகம்
செங்கதிரோன் ஒளிபரப்பும் திசைகள் எங்கும்
          செந்தமிழின் மணம்பரவிச் செழிக்கச் செய்யப்
பொங்குதிரைப் பெருங்கடல்போல் படைகள் கொண்டு
          பொற்றமிழர் மொழிவளர்த்தார் பொறுப்பாய் அன்றே
சங்ககாலப் பெருமைகாணச் சகியார் தாயைச்
         சத்தமிட்டுப் புத்திகெட்டுச் சிறுமை செய்தால்
சங்கொலித்துக் களம்புகுந்தே சதியை வீழ்த்தச்
         சக்திபெற்றுப் புறப்படடா தமிழா இன்றே!

13. கவிஞர் சியாமளா ராஜசேகர்
விண்மீன்கள் கண்சிமிட்டி மின்னிக் கொஞ்சி 
         விளையாடும் இரவினிலே நாளும் வானில் !
வெண்பூக்கள் அந்தியிலே அவிழ்க்கும் மொட்டால்
         மென்வாசம் பரவிடுமே தென்றல் காற்றில் !
மண்டூகம் குரலோங்கக் கத்துஞ் சத்தம் 
         மழையடித்து விட்டதுமே கேட்கும் காதில் !
வண்ணத்துப் பூச்சிக்கு மதுவைத் தந்து 
         வசியமுடன் சிரித்திடுதே வண்ணப் பூவே!

14. கவிஞர் அர.விவேகானந்தன்
ஏழையென வெண்ணியுமே யெள்ள வேண்டா
         எவருமிங்குப் பசியாற உழவன் வேண்டும்;
வாழையென நம்மினமும் வளமை கொள்ள
         வளமுடனே உழவனவன் வாழ்தல் வேண்டும்;
கோழையெனும் குணமொழித்துக் குன்றைக் கீறிக்
        கோலமெனும் ஏரெழுதும் கோமான் தன்னின்
ஏழையெனும் நிலையுயர்ந்தேஏற்றங் காண
         ஏணியாகி ஏற்றவகை இயம்பு வோமே!

15. கவிஞர் நாகினி கருப்பசாமி
சாதியென எதுவுமில்லை சமமாய் வாழும்
        சாதனைகள் சாதிக்கச் சாதி நெஞ்சில்
நீதியென்ற தர்மதேவன் நித்தம் காட்டும்
         நியாயங்கள் காக்கயிரு கைகள் நம்மில்
பாதியென்றே நம்பிக்கைக் கரத்தை உன்னில்
         பதித்திங்குச் சமாதானப் பண்பின் தூதாய்
ஆதிசிவன் துணைகொண்டே ஆக்கம் வெல்லும்
        ஆர்வத்தை வளர்த்துலகை ஆள்வாய் நட்பே!

16. கவிஞர் நடராசன் பாலசுப்பிரமணி
பிறையணிந்தான் முடியதனில் பின்னர் ஆங்குப் 
         பெருந்தாரை யெனவந்த கங்கை கொண்டான்
மறையறிந்தான் மகனிடமே மையல் கொண்டான் 
         மலையரசன் மகள்மேலே ஆல காலக்
கறையணிந்தான் நீலநிறக் கண்டத் திற்குள் 
         கடலரசன் மகளவளைக் காதல் செய்தே
இறையவளாய் உமையவளை இணைத்துத் தன்னின் 
         இடப்பாகம் ஈந்தவனாம் ஈசன் வாழி!

17. கவிஞர் விஜயகுமார் வேல்முருகன்
மலைதனில்தான் பொழிந்திட்ட மழையின் நீரே
           மலையருவி வெள்ளமென கலங்கா வண்ணம்
கலைகளின்பே ரெழிலென்றே காணும் இன்பம் 
           கரைபுரளும் ஆறென்றே கலங்கா மாரி
அலைகளாக கடலினிலே சேரும் காட்சி
          ஆனந்த மயமாக்கும் அன்பு வெள்ளம்
இலையிதுபோல் உலகிலெங்கும் இயற்கை அன்னம்
          இதுவென்று பொழியட்டும் மழைதான் ஈங்கே!

18. கவிஞர் நிறோஸ் அரவிந்த்
பெய்திடுநல் மழையின்பம் பெருக்கும் இங்குப்
~        பெண்ணவளும் அருகினில்வந் தேயி ருக்க;
கொய்திடுநன் மலர்களுமே கொஞ்சிப் பேசும்
~        கோகிலம்போல் அவள்கீதம் இசைத்து நிற்க;
பொய்த்திடுமோர் மொழிதன்னைப் புகல மாட்டாள்
~        போகும்முன் விழிகளினால் பேசிச் செல்வாள்
மெய்த்திடுநற் காதலதை மெச்சி நின்றேன்
~         மேன்மையுறத் தந்திட்டாள் மகிழ்ந்தேன் நானே!

19. கவிஞர் இராச.கிருட்டினன்
உச்சிமலை மீதமர்ந்த உயர்ந்த பிள்ளை! 
          உலகத்தைச் சமமாகப் பார்க்கும் பிள்ளை!
இச்சையுடன் தொழுவோர்க்கே அருளும் பிள்ளை!
          எல்லோர்க்கும் ஞானத்தை வழங்கும் பிள்ளை!
முச்சந்தி பலவற்றில் அமர்ந்த பிள்ளை!
          முன்செய்த வினையாவும் தீர்க்கும் பிள்ளை!
துச்சமெனத் துயர்களையே துடைக்கும் பிள்ளை!
          தூயமனம் தனைவிரும்பும் பிள்ளை யாரே!

20. கவிஞர் சு.மோகன்
மொய்க்குழலாள் கண்ணகியாள் அகத்தே நிற்க;
          மெய்மறந்த கோவலனோ அரங்கம் சென்றான்!
மொய்த்ததொரு கூட்டமதில் முதலில் நின்றே;
          மெய்த்தவத்தாள் மாதவியாள் மாலை கொண்டான்!
மொய்க்குழலாள் ஏக்கமுற்றே வாசல் பார்த்து; 
          மெய்யுணர்ந்தே ஈந்தழிந்த காதை ஓர்வோம்!
மொய்ப்புடைய வாழ்வென்று பாதை மாறேல்;
          மெய்மையுடன் இல்லறத்தில் வாழ்வீர்; நன்றே!

21. கவிஞர் தமிழகழ்வன்
வெண்டைக்காய் தரைகட்டு்ப் பனிக்கா லத்தே
          வெளிர்முகத்தாய் உளமுழுதும் போரா டித்தான்
தண்டைக்காய் இன்னலெலாம் இன்ன லந்தான்
          தளிர்நெஞ்சத் தூணுக்குள் துணுக்காய்த் துஞ்சும்
அண்டைக்காய் அண்டங்காக் காய்காய்ந் தென்னை
         அண்டியென்ன செய்திடூஉம் அஃதொன் றில்லை
கண்டைக்காண் கருத்தெல்லாம் கருத்தாய்ச் செய்து
          காண்டையா வெனவெல்லாம் காண்பன் நன்றே!

22. கவிஞர் தனம் மருதப்பன்
பண்பாடு பகுத்தறிவு பண்பாய் நிற்கப்
         பண்ணெல்லாம் பாடிடுவோம் பசுமை ஓங்கப்
பெண்டீரும் இணையமரம் வளர்த்து நாமே
         பேரின்பம் விளைந்திடவே அடிப்போம் கும்மி,
உண்டிக்கு ஏங்குகிற கூட்டம் ஒன்றோ
        உன்னாலே கண்டுவிட்டால் ஆட்டம் எங்கே?
வென்றோனாய்க் கொடும்பசியைத் தணித்துக் கவ்வை
        வேண்டாமை கொண்டாடி அடிப்போம் கும்மி


23. கவிஞர் வனராசன் பெரியகண்டர்
கருவூரில் உதித்துவந்த காலந் தொட்டுக்
         கண்ணீரில் என்தாயை கலங்க விட்டே
ஒருவூரில் இருவூரில் உள்ள மொன்றே
         ஒழுங்காக இருந்தேபின் அதுவுங் கெட்டுப்
பெருவூரில் வாழ்ந்திருக்க ஆசைப் பட்டுப்
         பெரிதாக நம்பிக்கை செடியும் நட்டேன்
இருவூரில் ஒருவூருங் கிடைக்க வில்லை
         இங்குமில்லை அங்குமில்லை; என்ன வாழ்வோ?
★★★★★

2 comments:

சென்னை பித்தன் said...

எனக்கு கவிதை இலக்கணங்கள் தெரியாது;ஆனால் தொகுப்பில் உள்ள எல்லாக்கவிதைகளும் படிக்க சுகமாக இருக்கின்றன!

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

முயன்றால் முடியும் ஐயா. மிக்க நன்றி, தங்கள் வாழ்த்திற்கு.