பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

12 Nov 2015

பாட்டியற்றுக - 12நண்பர்களே.! கவிஞர்களே.! 
அறிஞர் பலரும் பாராட்டும் பைந்தமிழ்ச் சோலையின் பணிகளுள் ஒன்றான "பாட்டியற்றுக : 12" இதோ.! முன் பயிற்சிகளில் பங்கேற்றதைப் போல் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள, இந்தப் பதிவைப் பகிர்ந்தும், மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.!
*** *** *** ***
பாட்டியற்றுக - 12

கட்டளைக் கலித்துறை
***********-*-*************
வந்தார் எனினும் வளம்பெறச் செய்வார் வழக்கமென
நொந்தார் அதனால் நுதல்வலி கொண்டு நொறுங்கிடவே
தந்தனர் தங்கள் தலைநகர் பின்னும் தயக்கமில்லை
அந்தோ இனியும் அவர்களும் விற்க அணுவிலையே!
--பாவலர் மா.வரதராசன்
*** *** *** ***
கருத்தூன்றுக.:
வெண்பா, ஆசிரியப் பா, பாவினங்களைக் கடந்த பயிற்சிகளில் கண்டோம். இனி நாம் "கலிப்பா "வின் இனங்களான துறை, தாழிசை, விருத்தம் ஆகியவற்றைக் காணலாம்.
"கலிப்பா வகை"யை இப்பயிற்சியில் கற்பது சற்றே கடினம். அவற்றை "முயன்று பார்க்கலாம் " பயிற்சியில் கற்கலாம்.
மேற்கண்ட பாடல் "கட்டளைக் கலித்துறை" ஆகும்.
'அடிக்கு இத்தனை எழுத்து வரவேண்டும்' என்ற வரையறை வகுத்துப் பாடப்பெறுவதால் இப்பெயர் பெற்றது.
பொது இலக்கணம்.
*ஓரடிக்கு ஐந்து சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,(பொழிப்பு மோனை 1'3' சீர்களில் அமைவதும் சிறப்பு. கருத்தின் முதன்மை வேண்டிப் பலரும் பார்ப்பதில்லை.) சான்று பாடலில் வந்துள்ளதை அறிக.
* ஐந்து சீர்களும் வெண்டளையால் இணையப் பெற்று, (அடியின் ஈற்றுச் சீருக்கும், அடுத்த அடியின் முதற்சீருக்கும் வெண்டளை பார்த்தல் வேண்டியதில்லை)
★ஐந்தாம் சீர் (கட்டாயம்)விளங்காய்ச்சீர் பெற்றும்,
* அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்றும்,
* நேரசையால் தொடங்கும் பாடல் (ஒற்றெழுத்துகளை நீக்கி) 16 எழுத்துகளையும்,
* நிரையசையால் தொடங்கும் பாடல் (ஒற்றெழுத்து நீக்கி) 17 எழுத்துகளையும் பெற்றும்,
(வெண்டளை தவறாமல் இருந்தாலே எழுத்தெண்ண வேண்டியிருக்காது. சரியாக இருக்கும்)
* ஈற்றுச்சீர் ஏகாரம் மட்டுமே பெற்றும்,
வருவது "கட்டளைக் கலித்துறை " எனப்படும்.
நண்பர்களே.! இப் பா வகையும் வெண்பாவுக்கு அடுத்து மிகவும் அதிக அளவில் தற்காலத்தில் பெரும்பான்மைக் கவிஞர்களால் பாடப்பெறும் வகையாகும்.
இவ்வகையான ஒரு விருத்தத்தை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டுமே எழுதி அனுப்புங்கள்.
அன்பு கூர்ந்து ஒருவர் ஒரு பாடலை மட்டுமே அனுப்பவும். பயிற்சிக்கு நேரம் ஒதுக்க உதவியாக இருக்கும்.
★★★

1 comment:

சென்னை பித்தன் said...

இலக்கணம் அறிந்து கொண்டேன்!