பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

23 Sep 2015

யாப்பறிவோம் 1தமிழ் வணக்கம் !

எழுத்தும் அறியேன்யான் யாப்பும் அறியேன்
பழுத்த புலவர்  பலரிருக்கப் பாவலர் 
என்னை  இழுத்திட்டார்! இப்பணியைச் செய்யவிட்டார்!
அன்னைத் தமிழே அருள்!

தொல்காப்பியம்--- பொருளதிகாரம்--- செய்யுளியல்


தொல்காப்பியத்தின் முப்பெரும்பிரிவுகளில்
இடம்பெற்றுள்ள 27 இயல்களில்ஒட்டுமொத்தமாக நோக்கின் 26 ஆவது இயலாகவும் பொருளதிகாரத்தின் எட்டாவது இயலாகவும் செய்யுளியல் அமைகிறது.தொல்காப்பியத்தில் மிகுந்த எண்ணிக்கையிலான நூற்பாக்களைக் கொண்டிலங்குவது செய்யுளியல் ஆகும்.

பொருளதிகாரத்தின் ஏனைய இயல்கள் உலக வழக்கையும் செய்யுள் வழக்கையும் நோக்கி எழுதப்பட்டவை. ஆனால் இவ்வியல் செய்யுளுக்கு மட்டுமே உரியது.இவ்வியல் நுõற்பாக்களை தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் இளம்பூரணர் 235 ஆகவும் உரையாசிரியர்களான பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் 243 ஆகவும் கொள்கின்றனர்.

செய்யுளியலின் முதல் நூற்பா செய்யுளுக்குரிய 34 உறுப்புகளைப் பட்டியல் இடுகிறது. 1.மாத்திரை 2. எழுத்தியல் 3.அசைவகை 4.சீர்

 5.அடி 6.யாப்பு7.மரபு 8.துõக்கு 9.தொடைவகை

10.நோக்கு 11.பா 12.அளவியல் 13.திணை

14.கைகோள் 15.கூற்றுவகை 16.கேட்போர்

17.களன் 18.காலவகை 19. பயன் 20.மெய்ப்பாடு

21.எச்சவகை 22.முன்னம் 23. பொருள் 24.துறைவகை

25.மாட்டு 26. வண்ணம்

எனவரும் இருபத்தாறு யாப்பிலக்கணப் பகுதிகளும்
 அம்மை,அழகு,தொன்மை,தோல்,விருந்து,இயைபு,புலன்,இழைபு

எனவரும் எட்டு வனப்புகளோடு சேர்ந்துவரும் 34 உறுப்புகளும் செய்யுள் உறுப்புகளாகும் எனத் தொல்காப்பியர் கூறுகிறார்


இவ்வுறுப்புகளில் தளை என்பதைத் தொல்காப்பியர் கூறவில்லை.

அதற்குக் காரணம் தொல்காப்பியர் தளையை ஓர் உறுப்பாகக் கொள்ளவில்லை.ஒவ்வோர் உறுப்புக்கும் தொல்காப்பியர் கூறிய நுõற்பாக்களின் அடிப்படையில் விளக்கம் கொடுத்தால் மிக விரிவாக இப்பகுதி பெருகும்.  மேலும் “மற்றொன்று விரித்தல் “ போலாகும். எனவே தொல்காப்பியர் கூறிய செய்யுளியல் பற்றிய செய்திகளை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.மேல்விளக்கம் வேண்டுவோர் ஏதாவது கேட்டால் தனிப்பட்ட வகையில் விளக்கம் அளிக்கிறேன்.“யாப்பறிவோம்“ எனும்இத்தொடர்வகுப்பில் நாம்கற்றுக்கொள்ளவிழைவது மரபுக்கவிதைகளை இயற்றலுக்கான பயிற்சியே. இப்பயிற்சிக்கு அடிப்படை நூலாக நாம் எடுத்துக்கொள்வது அமிர்தசாகரர் இயற்றிய யாப்பருங்கலக் காரிகையாகும். இருப்பினும் என்னுடைய நினைவில் உள்ள ஒருசில செய்திகளை இடையிடையே கூறுகிறேன். நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.

நம்முடைய கலந்துரையாடலில் தேவைப்படும் இடங்களில் மொழியியலும் ஆங்கிலமும் கலக்கும். அவ்வாறு கலத்தல் புரிதலை மேலும் தெளிவுபடுத்தும் என எண்ணுகிறேன். மேலும் பலஇலக்கண நூல்களிலிருந்து நூற்பாக்களும் சான்றுகளும் எடுத்துக் காட்டப் பெறும்.  குறிப்பாகத் தொல்காப்பியம், நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம் நம்பிஅகப் பொருள் முதலான நுõல்களிலிருந்தும்  இதர இலக்கிய இலக்கண நுõல்களிலிருந்தும் எடுத்துக் காட்டுகள் தரப்படும். எனவே நம்முடைய இந்தத் தொடர் நமக்குப் பயனுள்ள வகையில் அமையும் என நம்புகிறேன்.

நம்முடைய இம்முயற்சியானது வினா---விடைப் போக்கில் தொடர்ந்தால் நன்மைபயக்கும் எனக் கருதுகிறேன்

.தட்டச்சு செய்யும்போது என்னையும் மீறிப் தட்டச்சுப் பிழைகள் நேரலாம். பிழைகளைச் சுட்டிக்காட்டினால் உடனே சரிசெய்து கொள்ள ஏதுவாகும்.

குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்

கற்றறிந்த மாந்தர் கடன்

1.செய்யுள் என்பதன் விளக்கம் யாது?

“செய்யுள்“ என்ற சொல்லுக்கான விளக்கத்தை நன்னூல் சூத்திரமாக நமக்குத் தருகிறது.

பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல

சொல்லால் பொருட்கிட னாக உணர்வினின்

வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் (நன். 268)

“எழுவகைத் தாதுக்களால் (தோல், இரத்தம், இறைச்சி, மேதை(கொழுப்பு), எலும்பு, மச்சை, சுவேதநீர் (வேர்வை) உயிருக்கு இடமாகநின்றஉடம்புபோல

நான்குவகைச் சொற்களால் (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்)பொருளுக்கு இடமாக கல்வியறிவினாற் செய்யுள் செய்ய வல்லார் அணிநலம் சிறக்கச் செய்வன செய்யுள் ஆகும்“ என்பது இச்சூத்திரத்தின் பொருள்.செய்யப் படுவதால் “ செய்யுள்“ ஆனது.தொல்காப்பியரே “செய்யுள்“ என்னும் சொல்லை நமக்கு முதலில் அறிமுகம் செய்கிறார்.

தொல்காப்பியத்தின் பல்வேறு நுõற்பாக்களில் “செய்யுள் “ என்னும் சொல் இடம் பெறுகிறது. “செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின் (தொல். எழுத்.மொழி.18) செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான(தொல். எழுத்.உயிர்மயங்.11) தண்டியலங்கார ஆசான் பெருங்காப்பியத்தின் இலக்கணத்தைப் பேசும்போது கூறும் கடைசிஇரண்டு அடிகளான

“நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்

கற்றோர் புனையும் பெற்றிய தென்ப“

என்ற அடிகள் ஈண்ட ஒப்புநோக்கத்தக்கவையாம்.

பா,பாடல்,பாட்டு,கவி,கவிதை,யாப்பு,துõக்கு,தொடர்பு என்பன “செய்யுள்“ என்ற சொல்லுக்கான ஒருபொருட்பன்மொழிகள்

.2.செய்யுள் எத்தனை வகைப்படும்?அவையாவை?

பொதுவாகச் செய்யுள் நான்குவகைபடும்.
அவை

1.முத்தகம் (ச்செய்யுள்)

2.குளகம்(ச்செய்யுள்)

3.தொகைநிலை(ச்செய்யுள்)

4.தொடர்நிலை(ச்செய்யுள்)

(தண்டி.பொதுவணி.2 விளக்கம் வேண்டினால் தனியாகப் பதிவிடுகிறேன்)

 முனைவர் ,பத்மநாபன் பட்டாபு

No comments: