பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ! ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''

20 Sep 2015

பாட்டியற்றுக 2 இன் தொகுப்பு.அன்பு நண்பர்களே.! கவிஞர்களே.! 
முதல் பயிற்சியைப் போன்றே இப்பயிற்சியிலும் பலர் பங்கேற்றனர். அனைவரின் ஊக்கம் மிகுந்த பங்கேற்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அனைவருக்கும் நன்றி.

பாட்டியற்றுக:2 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது. இது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.
நன்றி.!


பாட்டியற்றுக:2
வெண்பா. (ஒன்றில் நான்கு.)

1.சிதம்பரம் சு.மோகன்.
நற்றமிழ்த் தேன்றுளியை நாவில் சுவைப்பதாய்க்
கற்றார் உரைப்பார் கருத்ததனை - அற்புதமாய்
மற்றார் களிப்புறவே கூறிடுவார் மேதினியில்
நற்றாய் மகிழும் மகன்(ள்)!

2. கவிஞர் பசுபதி
தலைப்பு: வன்முறை
வன்முறையை எம்மதமும்
நன்முறையென் றோதுமோ?
அன்புதானே தெய்வம் அனைவர்க்கும்-நன்றிதாம்
பண்பை மறந்தே படுகொலை செய்கிறார்
என்றுதான் வாழ்வார் இணைந்து.

3.சுந்தர் புருசோத்தமன்
குன்றா மணிவிளக்கே குன்றமர்ந்தத் தண்விளக்கே
பொன்றா மரையமர்ந்தாய் பொற்புடனே- பொன்மகனார்
ஏட்டின் எழுசீரில் இன்னிசையாய் நின்றொழுகி
மீட்டிசையே வாழ்முறைமை மீட்டு.
4.கவிமாமணிசேலம்பாலன்.
முடிந்த வரையதவி முத்தமிழைப் பேணி
நடிப்பவரைத் தள்ளியே நல்ல - துடிப்புடனே
ஆய்ந்து துணிவும் அறிவும் துணையென்றே
ஓய்ந்திடாமல் செல்வேன் உணர்ந்து !
5.இரா.கி.இராஜேந்திரன்
பெருமானை வாழ்த்துதல்
வாழி திருமன்றங் கண்ட வரிவிழிகள்
வாழி யவன்புகழ் வாங்கும் குழிச்செவிகள்
வாழி தணிந்து வணங்கும் முடிச்சென்னி
வாழியவன் சீர்பாடும் வாய்.
6.நிறோஷ் ஞா.அரவிந்த்.
உரைப்பீர் கவிதை உறவுகளே என்றும்
சுரைக்காயின் ஓடும் சுவைக்கத் - தரையிற்
கவிபாடும் வல்லமைக் கன்னற் றமிழாற்
புவியில் பெறுவேன் புகழ்.
7.அழகர் சண்முகம்
ஆதியிலே சேனைகட்டி யாண்டதமிழ் மக்களின்றோ
சாதியெனும் நோய்பிடித்தச் சாக்காட்டில்-நாதியின்றி
நீதியினைக் கைவிட்டார் நிற்கவிட மேதுமின்றி
வீதியினோ ரம்கிடந்தார் வீழ்ந்து
8.வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
காசில்லா மாந்தர்க்குக் கல்வியும் கிட்டுமோ
யோசிக்க வேண்டா மனமேநீ - மாசில்லாத்
தெள்ளுதமிழ்க் கொஞ்சும் நிறைமதி தந்திடும்
வள்ளுவன் சொல்கேட் டுயர்.
9.தமிழகழ்வன் சுப்பிரமணி
ஒன்றில்நான் காகாதே ஒன்றேயாம்; ஒன்றாக்கால்
ஒன்றாகா; உள்ளம் ஒளிபெறா; - வொன்றியே
உள்ளந்துள் ளுங்கள்ளாந் தெள்ளுதமிழ் நாம்பாடிக்
கள்ளந்த விர்ந்துகளிப் போம்.
10,நடராசன் பாலசுப்பிரமணியன்
தலைப்பு: இன்றைய கல்விமுறை
முற்றத் தமர்ந்து படித்தநாள் ஒன்றுண்டு
கற்றலில் இன்பமே அன்றுண்டு - குற்றமின்றிக்
கற்றலிலும் இன்று சிறப்பு மதிப்பெண்கள்
சற்றும் குறையாமை தான்!
11.வள்ளிமுத்து
தலைப்பு.:பட்டாம் பூச்சி
காற்றில் மிதக்கும் கவியாய்ச் சிறகடிக்கும்
சேற்று மலரிலும் தேன்குடிக்கும் - போற்றும்
புகழுடைய வண்ணத்துப் பூச்சி மலத்தில்
இகழவே வாய்வைக்கா து.
12.விவேக் பாரதி
தலைப்பு : குடி குடியைக் கெடுக்கும்
குடியால் குணமழியும் கூறுகிறேன் வேண்டா
குடியும் அழியும் குடித்து - குடியே
மிடிமை பயக்கும் ! மகிழ்வை விரும்பின்
குடிக்கும் பழக்கம் தவிர்.!
13.வனராசன் பெரியகண்டர்
எண்ணந் தெளிவானால் எல்லாம் நலமாகும்
உன்னில் பிறப்பதுதான் உன்னதங்கள்- விண்மீது
வண்ணம் பிறழாது வானவில் மாந்தரும்
எண்ணம் பிறழாமை நன்று.
14.நாகினி கருப்பசாமி
வஞ்சக மாந்தர் வலையில் சிக்கிடும்
வஞ்சியு மேதளிக்கி வந்திடில் - துஞ்சா
விழியெனும் பார்வை விளக்குமே பாய்ச்சும்
இழிவெனும் சொல்லொளி(லி) ஈங்கு!
15.அர.விவேகானந்தன்
நலமது வேண்டி நிலமதில் வாழ்ந்தால்
பலமே பொழிந்திடும் பாராய் -உலகினில்
தாழ்நிலை என்றும் தமதுயிர் என்றுமேது
ஆழ்ந்த அறிவுடை யோர்க்கு
16.Sara Bass
மன்னுபுகழ் வாழ்வதனை மண்ணுலகில் நீபெற்றாய்
கன்னலொத்தப் பேச்சால் கவருகின்றாய் ---- இன்னலெலாம்
நீங்கிடவே ஆறுதலும் நீதான் உரைக்கின்றாய்
தாங்கிவரும் கொம்பாகத் தான்.

★★★★★

2 comments:

Jagadeesan Muthukrishnan said...

குறைமாந்தர் கங்கை குளித்தாலும் நெஞ்சில்
நிறைந்திருக்கும் பேரழுக்கு நீங்கா - பிறைமதியே !
ஆடுதுறைக் காவிரியில் ஆடிலென் மக்கள்தம்
நீடுதுயர் போக்காதார் நீக்கு .

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் said...

மிகச் சிறப்பு. வாழ்த்துகள்